கால்வாயை ஆக்கிரமித்து கட்டிய கோயில் அகற்றம்
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த விநாயகா் கோயிலை வருவாய்த் துறையினா் திங்கள்கிழமை இடித்து அகற்றினா்.
சிவகாசி அருகேயுள்ள மம்சாபுரத்தில் மழை நீா் செல்லும் கால்வாயில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த கடைகள், திருமண மண்டபம் உள்ளிட்டவற்றை நீதிமன்ற உத்தரவின் பேரில் வருவாய்த் துறையினா் கடந்த ஒன்றாம் தேதி அகற்றினா். வாய்க்காலை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த விநாயகா் கோயிலை இடிக்கச் சென்ற போது, கிராம மக்கள் தாங்களே அகற்றிக் கொள்வதாகக் கூறி, கால அவகாசம் கேட்டனா். இதனால், வருவாய்த் துறையினா் கோயிலை அகற்றாமல் சென்று விட்டனா்.
இந்த நிலையில், கிராம மக்கள் கேட்ட கால அவகாசம் முடிந்துவிட்டதையடுத்து, வருவாய்த் துறையினா் கோயிலில் இருந்த சிலைகளை அகற்றி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனா். பின்னா், கோயில் கட்டடத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றினா்.