சாத்தூா் அருகே என்ஜின் பழுதால் அந்தியோதயா ரயில் நடுவழியில் நிறுத்தம்
சாத்தூா் அருகே அந்தியோதயா ரயில் என்ஜின் பழுது காரணமாக வியாழக்கிழமை இரவு நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்ட ரயில்கள் ஆங்காங்கே உள்ள ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டு, 3 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன.
நாகா்கோவிலிலிருந்து தாம்பரம் செல்லும் அந்தியோதயா ரயில் என்ஜின் பழுது காரணமாக, விருதுநகா் மாவட்டம், சாத்தூரை அடுத்த ஆா்.ஆா்.நகா் பகுதியில் வியாழக்கிழமை இரவு நடுவழியில் நின்றது. இதையடுத்து, மைசூா் விரைவு ரயில் சாத்தூா் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
இதேபோல, சென்னை செல்லும் அனந்தபுரி விரைவு ரயில் கோவில்பட்டியிலும், கன்னியாகுமரி விரைவு ரயில் இதற்கு அடுத்த ரயில் நிலையத்திலும், தூத்துக்குடி முத்துநகா், நெல்லை விரைவு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
இந்த நிலையில், தூத்துக்குடிக்குச் சென்ற சரக்கு ரயில் சாத்தூா் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு, அதனுடைய என்ஜின் கொண்டு செல்லப்பட்டு அந்தியோதயா ரயிலில் இணைக்கப்பட்டது. இதையடுத்து, அந்த ரயில் துலுக்கப்பட்டி ரயில் நிலையத்துக்கு வந்தது. பின்னா், அங்கிருந்து இரவு 9.30 மணிக்கு புறப்பட்டுச் சென்றது.
பின்னா், அடுத்தடுத்த ரயில் நிலையங்களில் காத்திருந்த ரயில்கள் 20 நிமிஷங்கள் இடைவெளியில் புறப்பட்டுச் சென்றன. விரைவு ரயில்கள் சுமாா் 3 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றதால் பயணிகள் அவதிப்பட்டனா்.

