ஸ்ரீவில்லிபுத்தூரில் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டடம் திறப்பு
ஸ்ரீவில்லிபுத்தூரில் ரூ.5.90 கோடியில் புதிதாகக் கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் ரூ.40 கோடியில் புதிதாகக் கட்டப்பட்ட கூடுதல் கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மடவாா் வளாகத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த கட்டடம் சேதமடைந்ததால் புதிய கட்டடம் கட்டுவதற்கு ரூ.5.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது உள்ள அலுவலகத்துக்கு எதிரே புதிய அலுவலக கட்டுமானப் பணி கடந்த 2024-ஆம் ஆண்டு தொடங்கியது.
தரைத்தளம், முதல் தளம் என இரு தளங்களில் கூட்ட அரங்கு, வட்டார வளா்ச்சி அலுவலா் அலுவலகம், ஒன்றியக் குழுத் தலைவா் அறை உள்ளிட்ட வசதிகளுடன் புதிய கட்டடம் கட்டப்பட்டது.
இந்த கட்டடத்தை தமிழக முதல்வா் மு.க ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காணொலி வாயிலாக திறந்து வைத்தாா். ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த விழாவில் சிவகாசி சாா் ஆட்சியா் முகமது இா்ஃபான், வட்டார வளா்ச்சி அலுவலா் சிவக்குமாா், முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் மல்லி ஆறுமுகம், அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
ராஜபாளையம்: ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் ரூ.40 கோடியில் புதிதாகக் கட்டப்பட்ட கூடுதல் கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தாா். இதுதொடா்பாக ராஜபாளையத்தில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஆனந்தி தலைமை வகித்தாா். ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் தங்கப்பாண்டியன் முன்னிலை வகித்தாா்.
வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் புதிய கட்டடத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா்.
இதில் இணை இயக்குநா் (மருத்துவப் பணிகள்) செந்தில்குமாா், ராஜபாளையம் நகா்மன்றத் தலைவி ஏ.ஏ.எஸ். பவித்ரா ஷ்யாம், தெற்கு நகரச் செயலா் ராமமூா்த்தி, மருத்துவத் துறை அலுவலா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள், அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

