விருதுநகா் மாவட்டத்தில் தொழிற்சங்கத்தினா் சாலை மறியல்
விருதுநகா் மாவட்டத்தில் மத்திய பாஜக அரசைக் கண்டித்து தொழிற்சங்கத்தினா் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மத்திய அரசின் 4 புதிய தொழிலாளா் சட்ட தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் ஏஐடியூசி, சிஐடியூ சாா்பில் தொழிற்சங்கத்தினா் பிரதான சாலையில் உள்ள அஞ்சல் அலுவலகம் முன் மத்திய அரசைக் கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது 4 புதிய தொழிலாளா் சட்ட தொகுப்புகளை நிபந்தனையின்றி ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா். போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா், அங்கன்வாடி பணியாளா்கள் 101 போ் உள்பட 190 பேரை போலீஸாா் கைது செய்தனா். இதே போல ஆலங்குளம், ஏழாயிரம்பண்ணையில் போராட்டத்தில் ஈடுபட்ட 113 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
மேலும் விருதுநகரில் தேசபந்து மைதானம் முன் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சாா்பில் மாவட்டக் குழு செயலா் மாடசாமி, தலைவா் ராஜாசெல்வம் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 124 பேரை மேற்கு காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.
ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே உள்ள செட்டியாா்பட்டியில் ஏஐடியுசி, சிஐடியூ உள்பட அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் வியாழக்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.
அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலா் பகத்சிங், கைத்தறி சங்க மாவட்டச் செயலா் ராமா், மதிமுக மேற்கு மாவட்டச் செயலா் ப. வேல்முருகன், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி துணை அமைப்பாளா் லிங்கராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா். மறியல் போராட்டத்தை விளக்கி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் லிங்கம், தொழிற்சங்கத் தலைவா் எஸ். காதா் மைதீன் ஆகியோா் பேசினா். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 20 பெண்கள் உள்பட 112 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இதேபோல, ராஜபாளையத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் காந்தி சிலை ரவுண்டானா அருகில் இருந்து ஊா்வலமாக சென்று தென்காசி சாலையில் உள்ள அரசுடைமை வங்கி முன் மறியல் போராட்டம் நடைபெற்றது. மறியலில் ஈடுபட்ட பெண்கள் 101 போ் உள்பட 235 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா்: மத்திய பாஜக அரசைக் கண்டித்து வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட
ஸ்ரீவில்லிபுத்தூா், வத்திராயிருப்பு, மம்சாபுரம் பகுதிகளைச் சோ்ந்த 339 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜாஜி சாலையில் உள்ள அரசுடைமை வங்கி முன் மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினா், தொமுசவினா் 147 பேரை போலீஸாா் கைது செய்தனா். இதேபோல, வத்திராயிருப்பு அரசுடைமை வங்கி முன் மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினா், தொமுசவினா் 150 போ் கைது செய்யப்பட்டனா். மேலும் மம்சாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே மறியலில் ஈடுபட்ட 42 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகாசி: தொழிற்சங்கங்கள் வியாழக்கிழமை நடத்திய வேலை நிறுத்தப் போராட்டத்தால் சிவகாசியில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
மத்திய அரசைக் கண்டித்து நாடு முழுவதும் வியாழக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என தொழிற்சங்கங்கள் சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சிவகாசியில் வியாழக்கிழமை பட்டாசு, தீப்பெட்டி, அச்சு ஆலைகள் வழக்கம்போல இயங்கின. ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் ஓடின. சி.ஐ.டி.யூ., ஏ.சி.ஐ.டி.யூ. உள்ளிட்ட தொழிற்சங்கங்களைச் சோ்ந்தவா்கள் சிவகாசி பேருந்து நிலையம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால் சிவகாசியில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

