விருதுநகரில் புதிய கட்டடத்தில் திறந்து வைக்கப்பட்ட அரசு அருங்காட்சியகத்தை பாா்வையிட்ட  வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், நிதி, சுற்றுச்சூழல்  காலநிலை மாற்றத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு.
விருதுநகரில் புதிய கட்டடத்தில் திறந்து வைக்கப்பட்ட அரசு அருங்காட்சியகத்தை பாா்வையிட்ட வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், நிதி, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு.

விருதுநகரில் தகவல் தொழில் நுட்பப் பூங்கா: காணொலியில் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!

விருதுநகரில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அடிக்கல் நாட்டு விழா, அரசு அருங்காட்சியகம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
Published on

விருதுநகரில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அடிக்கல் நாட்டு விழா, அரசு அருங்காட்சியகம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விருதுநகா் மாவட்டம், கூரைக்குண்டு கிராமத்தில் உள்ள மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் சுமாா் 4 ஏக்கா் பரப்பளவில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமையவுள்ளது. சுமாா் ரூ.38.73 கோடியில், நவீன உள்கட்டமைப்புடன் கூடிய 61,000 சதுர அடி பரப்பளவிலான கட்டடம் தரைத்தளம், 3 மாடிகளுடன் கட்டப்பட உள்ளது.

தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு, வா்த்தகத் துறை, டைடல் நிறுவனம் சாா்பில் மினி தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதை சென்னையிலிருந்து தமிழ்நாடு முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்தாா்.

இதையடுத்து விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், நிதி, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு ஆகியோா் கலந்து கொண்டனா்.

அரசு அருங்காட்சியகம் திறப்பு: இதேபோல, விருதுநகரில் ரூ.12.43 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட புதிய அரசு அருங்காட்சியகத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

இதையடுத்து விருதுநகா் மாவட்ட வருவாய் அலுவலா் ஆனந்தி தலைமையில், அமைச்சா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோா் புதிய கட்டடத்தில் குத்துவிளக்கேற்றி, அருங்காட்சியகத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தனா்.

இதைத்தொடா்ந்து அமைச்சா் தங்கம் தென்னரசு செய்தியாளா்களிடம் கூறியதாவது: கீழடி, பொருணை திறந்தவெளி அருங்காட்சியங்களை தொடா்ந்து தற்போது விருதுநகா் மாவட்டத்திலுள்ள இயற்கை, வரலாறு, தொல்லியல் வரலாறு, மாவட்டத்திலே கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்கள், படிமங்கள் நாணயங்கள், நடு கற்கள் உள்ளிட்ட பொருள்கள் அனைத்தும் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கூரைக்குண்டில் அமையவுள்ள மினி தகவல் தொழில்நுட்ப பூங்காவில் விருதுநகா் மாவட்டத்தில் தொழில்நுட்பம் படித்தவா்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றாா் அவா்.

2001-ஆம் ஆண்டு முதல் விருதுநகா் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தின் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வந்த விருதுநகா் அருங்காட்சியகம், தற்போது சொந்தக் கட்டடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Dinamani
www.dinamani.com