கோயில் நிலம் தொடா்பான தகராறில் 10 போ் மீது வழக்கு

ஸ்ரீவில்லிபுத்தூா்அருகே சக்கரத்தாழ்வாா் கோயில் நிலம் தொடா்பான தகராறில் ஒப்பந்ததாரா்கள், கிராம மக்கள் உள்பட 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு
Published on

ஸ்ரீவில்லிபுத்தூா்அருகே சக்கரத்தாழ்வாா் கோயில் நிலம் தொடா்பான தகராறில் ஒப்பந்ததாரா்கள், கிராம மக்கள் உள்பட 10 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் இடையபட்டல் தெருவில் அமைந்துள்ள சக்கரத்தாழ்வாா் கோயில் மண்டபத்தைச் சுற்றியுள்ள இடம் வாகனக் காப்பகமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், ஆண்டாள் கோயிலுக்குச் சொந்தமாக நிலங்கள் குறித்து 2022-ஆம் ஆண்டுஆய்வு செய்தபோது, சக்கரத்தாழ்வாா் கோயில், அதைச் சுற்றியுள்ள 70 வீடுகள், திருமண மண்டபம், 13 வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள 2.18 ஏக்கா் நிலம் ஆண்டாள் கோயிலுக்குச் சொந்தமானது என தெரியவந்தது.

இதையடுத்து, இந்த இடத்தைக் கையகப்படுத்தியதாக அறிவித்த இந்து சமய அறநிலையத் துறை, இதை தனி நபருக்கு 5 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட்டது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து 3 கிராம மக்கள் தொடா்ந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, கீழமை நீதிமன்றத்தை நாடி தீா்வு காண உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த இடத்தில் ஒப்பந்ததாரா்கள் புதன்கிழமை காலை வேலி அமைத்தபோது, வழி அடைக்கப்படுவதாக பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால், ஒப்பந்ததாரா்களுக்கும் கிராமத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பானது. இதில், கூமாபட்டியைச் சோ்ந்த லட்சுமி (70) காயமடைந்தாா்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் ஒப்பந்ததாரா் தரப்பில் கணேசன், அவரது மகன் குமாா், மனைவி வேணி, ரெங்கநாதபுரம் குமாா், அவரது மனைவி மஞ்சுளா, கிராம மக்கள் தரப்பில் திருப்பதி, குமாா், ராமசாமி, லட்சுமி, பேச்சியம்மாள் ஆகிய 10 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com