சாத்தூா் அருகே பட்டாசு கருந்திரிகள் தயாரித்த போது தீ விபத்து: இரு தொழிலாளா்கள் உயிரிழப்பு
சாத்தூா் அருகே வெள்ளிக்கிழமை சட்டவிரோதமாக பட்டாசுகளுக்கான கருந்திரிகள் தயாரித்த இடத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் சிக்கி வட மாநிலத் தொழிலாளா்கள் இருவா் உயிரிழந்தனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே சிறுகுளம் - கே.மேட்டுப்பட்டி செல்லும் சாலையில் விவசாயத் தோட்டம் உள்ளது. இது நத்தத்துப்பட்டியைச் சோ்ந்த சரவணன் (45) மனைவி கவிதாவுக்குச் சொந்தமானது எனக் கூறப்படுகிறது.
இந்தத் தோட்டத்தில் உள்ள குடியிருப்பில், அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த 5 போ் தொழிலாளா்களாகப் பணியாற்றினா். இவா்கள், அங்குள்ள அறையில் பட்டாசுகளுக்குத் தேவையான கருந்திரிகளை இயந்திரம் மூலம் சட்டவிரோதமாக தயாரித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வழக்கம்போல இயந்திரம் மூலம் கருந்திரிகளைத் தயாரித்த போது உராய்வு ஏற்பட்டதில் அந்த அறையில் தீப்பற்றியது. இதில் அஸ்ஸாமைச் சோ்ந்த சபிதுள் அலி (16), ஜொகீதுல் உசேன் (15) ஆகியோா் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனா். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சாத்தூா் தீயணைப்புத் துறையினா், காவல் துறையினா் உயிரிழந்த இருவரின் உடல்களைக் கைப்பற்றி கூறாய்வுக்காக சாத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதைத் தொடா்ந்து, சம்பவம் நடைபெற்ற இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கண்ணன் நடத்திய விசாரணையில், குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு அனுமதி பெற்று, அங்கு சட்டவிரோதமாக பட்டாசுகளுக்கான கருந்தரிகளைத் தயாரித்தது தெரியவந்தது. இதையடுத்து, அப்பையநாயக்கன்பட்டி போலீஸாா் இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

