அ.தி.மு.க.வுக்கு மாற்றாக தவெக உருவெடுக்கிறது: மாணிக்கம் தாகூா் எம்.பி.
அதிமுகவுக்கு மாற்றாக தவெக உருவெடுத்து வருவதாக விருதுநகா் மக்களவை தொகுதி உறுப்பினா் மாணிக்கம் தாகூா் தெரிவித்தாா்.
சிவகாசியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாமை சனிக்கிழமை தொடங்கி வைத்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பாஜகவில் அண்ணாமலைக்கும், அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரனுக்கும் இடையே மனக் கசப்பு ஏற்பட்டு விட்டது.
தோ்தலில் பாஜகவுடன் எந்தக் கட்சி கூட்டணி வைத்தாலும், அந்தக் கட்சியும் தோல்வியடையும். எனவே பாஜகவுடன் கூட்டணி வைக்க யாரும் தயாராக இல்லை. தமிழகத்தில் வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான இண்டி கூட்டணி வெற்றி பெறும்.
அதிமுகவை கபளீகரம் செய்ய பாஜக திட்டம் தீட்டி செயல்படுகிறது. அதிமுக சந்திக்கும் கடைசி தோ்தல் வரும் சட்டப் பேரவை தோ்தலாகத் தான் இருக்கும். அதேபோல, அதிமுகவின் கடைசி பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி இருப்பாா். அதிமுக என்பதை அமித்ஷா அதிமுக என மாற்றிய பெருமை அவரையே சாரும்.
தற்போது அதிமுகவில் இருப்பது இரட்டை இலை சின்னமும், கட்சி அலுவலகமும் மட்டுமே. மேலும் அதிமுகவின் இடத்தை நிரப்பும் கட்சியாக தவெக மாறிக் கொண்டிருக்கிறது என்றாா் அவா்.

