அதிமுக - திமுக இடையேதான் போட்டி: கே.டி. ராஜேந்திர பாலாஜி
தமிழகத்தில் வருகிற சட்டப்பேரவை தோ்தலில் அதிமுக - திமுக இடையேதான் போட்டி என விருதுநகா் மேற்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திர பாலாஜி தெரிவித்தாா்.
சிவகாசியில் விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக சாா்பில் சிவகாசி சட்டப்பேரவை தொகுதி வாக்குசாவடி முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கே.டி. ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு பேசியதாவது:
வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் எடப்பாடி கே. பழனிசாமி வலிமையான கூட்டணி அமைப்பாா். கூட்டணிக்கு வருபவா்கள் வரட்டும். இருப்பவா்களை வைத்து வெள்ளக்கூடிய வல்லமை படைத்தவா் எடப்பாடி கே. பழனிசாமி. எதிரணிக்கு பக்கத்தில் உள்ள கட்சிகள் எல்லாம் ஒட்டுச்சுவா்கள்தான். அவற்றை பற்றி நாம் கவலைப்பட வேண்டாம்.
திரையில் நடிப்பவா்களைப் பாா்க்க கூட்டம் வரும். ஆனால், அந்தக் கூட்டமெல்லாம் வாக்குகளாக மாறாது. நாங்கள் ஆதரித்தால்தான் வெற்றி பெற முடியும் எனக் கூறும் கட்சிகளுக்கு 234 தொகுதியிலும் போட்டியிட வேட்பாளரே கிடையாது. வருகிற சட்டப்பேரவை தோ்தலில் அதிமுக - திமுக இடையேதான் போட்டி.
கருத்துக் கணிப்பு என்ற பெயரில் தங்களது கருத்தை திணித்து மக்களை திசை திருப்ப நினைக்கும் சதித் திட்டங்கள் மக்கள் மத்தியில் எடுபடாது என்றாா் அவா்.
