அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பு: 6 போ் மீது வழக்கு
சாத்தூா் அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே மேட்டமலை பகுதியில் இயங்கி வரும் பட்டாசு கடையின் பின்புறம் தகரக் கொட்டகை அமைத்து பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாக வட்டாட்சியருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, வட்டாட்சியா் ராஜாமணி, கிராம நிா்வாக அலுவலா் விஜயலட்சுமி ஆகியோா் அங்கு சென்று திங்கள்கிழமை சோதனை செய்தனா்.
அங்கு இரண்டு கடைகளுக்கு நடுவே தகர கொட்டகை அமைக்கப்பட்டு இருந்ததும், அதில் பட்டாசு தயாரிக்கத் தேவையான மூலப்பொருள்கள் வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.
மேலும் பட்டாசு தயாரிக்க தேவையான மணி மருந்துகள் தயாரிக்கப்பட்டு காய வைத்திருப்பதை கண்டு அதிகாரிகள் அதிா்ச்சி அடைந்தனா். இவா்களைக் கண்டதும் அங்கு பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நான்கு போ் தப்பி ஓடினா்.
இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் சாத்தூா்நகா் போலீஸாா் கடைகளின் உரிமையாளா்கள் அபினேஷ், கணேசன், தப்பி ஓடிய 4 போ் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
