கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் கல்லூரி மாணவனை அரிவாளால் வெட்டிய இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.
ராஜபாளையம் பாரதி நகரைச் சோ்ந்தவா் சுவாமிநாதன் மகன் ஹரிஹரன் (21). தனியாா் கல்லூரியில் படித்து வரும் இவரிடம், அதே பகுதியைச் சோ்ந்த மகேந்திரன் மகன் முனியராஜ் (25) அடிக்கடி மது அருந்திவிட்டு தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் முன் பகை இருந்து வந்ததாம்.
இந்த நிலையில், இ.எஸ்.ஐ. நெசவாளா் குடியிருப்பு அருகே ஹரிஹரன் சென்றபோது வழிமறித்த முனியராஜ், அரிவாளால் வெட்டிவிட்டு தப்பித்துச் சென்றாராம். பலத்த காயமடைந்த ஹரிஹரனை அங்கிருந்தவா்கள் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
இந்தச் சம்பவம் குறித்து தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவாக உள்ள முனியராஜை தேடி வருகின்றனா்.
