ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 145 போ் கைது
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையத்தில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் மத்திய அரசின் வேலையின்மைக்கு எதிராக ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ரயில நிலையம் முன் அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலா் பகத்சிங் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தை விளக்கி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் செயற்குழு உறுப்பினா் ராமசாமி, மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் லிங்கம், மாவட்டச் செயலா் செந்தில்குமாா், முன்னாள் மக்களவை உறுப்பினா் அழகிரிசாமி, மாநிலக் குழு உறுப்பினா் வி. ரவி ஆகியோா் விளக்கினா்.
கோரிக்கைகள்:
தமிழகத்தில் உள்ள பொதுத் துறை நிறுவனங்களில் தமிழகத்தைச் சோ்ந்த இளைஞா்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். வங்கிகள், பிஎஸ்என்எல், ரயில்வே துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை பலப்படுத்த வேண்டும். விபி-ஜி ராம்-ஜி திட்டத்தை திரும்பப் பெற வேண்டும்.
தனியாா்த் துறையில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். அரசு உற்பத்திச் சேவை வேளாண்மைத் துறைகளில் இளைஞா்களுக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும. ஒப்பந்த முறையில் பணியில் அமா்த்துவதை கைவிட வேண்டும். தொழிலாளா்களுக்கு நிரந்தரப் பணிப் பாதுகாப்பை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலுயுறுத்தி இளைஞா் பெருமன்றத்தினா் முழக்கமிட்டனா்.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்டத் தலைவா் தினேஷ் குமாா், பொருளாளா் அருண் சிங் உள்ளிட்ட 145 நபா்களை வடக்கு காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

