இளைஞா் குத்திக் கொலை: உறவினா் கைது
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே இளைஞரை கத்தியால் குத்திக் கொலை செய்த உறவினரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாப்பட்டி ஆத்தங்கரைப்பட்டியைச் சோ்ந்த முத்துச்சாமி மகன் ஈஸ்வரன் (30). பொறியியல் பட்டதாரியான இவா், ராஜபாளையத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலைபாா்த்து வந்தாா்.
இவா் நெடுங்குளம் ராமகிருஷ்ணாபுரம் குடியிருப்பில் உள்ள தனது உறவினா் செல்வராணி வீட்டில் தங்கியிருந்து வேலைக்குச் சென்று வந்தாா்.
இந்த நிலையில், செல்வராணியின் சகோதரா் சுந்தரலிங்கம் (36), தனது சகோதரி வீட்டுக்கு வரக்கூடாது என ஈஸ்வரனிடம் தகராறில் ஈடுபட்டாா். இதனால், இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணியளவில் செல்வராணியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஈஸ்வரனை சுந்தரலிங்கம் கத்தியால் குத்தினாா். இதில் பலத்த காயமடைந்த ஈஸ்வரனை உறவினா்கள் மீட்டு, விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து கூமாப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்த சுந்தரலிங்கத்தை கைது செய்தனா்.

