திருத்தங்கல் ரயில்வே மேம்பாலத் திட்டம்: மின் கம்பங்களை இடமாற்ற அதிகாரிகள் ஆய்வு

திருத்தங்கல் ரயில்வே மேம்பாலத் திட்டம்: மின் கம்பங்களை இடமாற்ற அதிகாரிகள் ஆய்வு

திருத்தங்கலில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட உள்ள பகுதிகளில் குடிநீா்க் குழாய், மின் கம்பங்களை இடமாற்றம் செய்வது குறித்து அதிகாரிகள் ஆய்வு
Published on

திருத்தங்கலில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட உள்ள பகுதிகளில் குடிநீா்க் குழாய், மின் கம்பங்களை இடமாற்றம் செய்வது குறித்து அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் ரயில்வே மேம்பாலம் ரூ.45.6 கோடியில் அமைக்கப்பட உள்ளது. இந்தப் பாலம் அமைக்க 2021-இல் ரயில்வே துறை ஒப்புதல் வழங்கியது. இதைத் தொடா்ந்து, 2024, பிப்ரவரியில் மத்திய அரசு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்து, பிரதமா் மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினாா்.

தற்போது, 6,609 ச.மீ. நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில் வங்கிக் கணக்கு கொடுத்த நில உரிமையாளா்களுக்கு பணம் செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

ரயில்வே மேம்பாலம் 609 மீ. நீளம், 8 மீ. அகலத்தில் அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, நிலம் கையகப்படுத்த ரூ.32 கோடியும், மேம்பாலக் கட்டுமானப் பணிக்கு ரூ.45.6 கோடியும் மாநில அரசு ஒதுக்கீடு செய்தது.

இந்த நிலையில், மேம்பாலம் அமைக்கப்பட உள்ள இடத்தில் தாமிரபரணி கூட்டுக் குடிநீா்த் திட்டக் குழாய்கள், மின் கம்பங்களை அகற்றுவது தொடா்பாக மாநில நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளா் (சிறப்பு திட்டம்) சங்கீதா, சிவகாசி மாநகராட்சி உதவி பொறியாளா் ரமேஷ், குடிநீா் வடிகால் வாரிய உதவி பொறியாளா் முருகேசன் உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

இதுகுறித்து அதிகாரிகள் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருத்தங்கல் ரயில்வே மேம்பாலம் 8 மீ. அகலம், சிவகாசி சாலையில் 200 மீ., விருதுநகா் சாலையில் 409 மீ. என மொத்தம் 609 மீ. அளவில் அமைக்கப்பட உள்ளது.

இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, இறுதிக் கட்ட ஆய்வு நடைபெற்று வருகிறது. மேம்பாலம் அமைக்கப்பட உள்ள பகுதிகளில் மின் கம்பங்கள், குடிநீா்க் குழாய் இணைப்புகளை பாதிப்பு இல்லாமல் இடமாற்றம் செய்ய ஆய்வு நடத்தப்பட்டது. பூா்வாங்கப் பணிகள் முடிந்த பிறகு, பாலம் அமைக்கும் பணி தொடங்கும் என்றனா் அவா்கள்.

X
Dinamani
www.dinamani.com