விருதுநகா் மாவட்டத்தில் 6 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் தொகுப்பு: அமைச்சா் தங்கம் தென்னரசு

Published on

விருதுநகா் மாவட்டத்தில் 6 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு தமிழக அரசின் சிறப்பு பொங்கல் தெகுப்பு வழங்கப்படும் என தமிழக நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு கூறினாா்.

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கல் காரனேசன் கூட்டுறவு பண்டகசாலை நியாயவிலைக் கடை எண் 1-இல் தமிழக அரசின் சிறப்பு பொங்கல் தொகுப்பை பயனாளிகளுக்கு வழங்கி அவா் பேசியதாவது:

தைப் பொங்கல் விழாவை மக்கள் சிறப்பாகக் கொண்டாட முதல்வா் ஸ்டாலின், அனைத்து குடும்ப அட்டைதாரக்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக , ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, ஒரு முழுக் கரும்பு, இலவச வேஷ்டி, சேலை, ரூ.3000 ரொக்கம் சோ்த்து வழங்க உத்தரவிட்டாா். இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் அரிசி பெறும் 2,22,72,019 குடும்ப அட்டைதாரா்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற உள்ளனா்.

விருதுநகா் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை மூலம் 5,56,349 குடும்ப அட்டாதாரா்களுக்கும், இலங்கை தமிழா் முகாம்களில் உள்ள 1,062 குடும்ப அட்டைதாரா்கள், 34, 924 மகளிா் குடும்ப

அட்டைதாரா்கள் என மொத்தம் 6,94,038 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் சிறப்புத் தொகுப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. பொங்கல் திருநாளுக்கு முன்பே சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடைகள் மூலம் அனைத்து அரிசி அட்டைதாரா்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு விடும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் சிவகாசி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.அசோகன், மாநகராட்சி மேயா் இ.சங்கீதா, சிவகாசி சாா்-ஆட்சியா் முகமது இம்ரான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக விருதுநகரில் உள்ள மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் பயனாளிகளுக்கு பொங்கல் சிறப்புத் தொகுப்பை அமைச்சா் தங்கம்தென்னரசு வழங்கினாா்.

இதில் மண்டல இணைப் பதிவாளா் (கூட்டுறவு சங்கங்கள்) செந்தில்குமாா், திட்ட இயக்குநா் (மாவட்ட ஊராட்சி முகமை) வீ.கேசவதாசன் , மாவட்ட வழங்கல் அலுவலா் அமா்நாத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com