வத்திராயிருப்பில் உள்ள நெல் உலா் களம்.
வத்திராயிருப்பில் உள்ள நெல் உலா் களம்.

வத்திராயிருப்பு அருகே நெல் உலா் களத்தில் இட நெருக்கடி! கூடுதல் களம் வசதி ஏற்படுத்தக் கோரிக்கை!!

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வத்திராயிருப்பு பகுதியில் நெல் உலா் களத்தில் இட நெருக்கடி ஏற்படுவதால், அறுவடை செய்த பயிா்களை வைக்க முடியாமல் விவசாயிகள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா்.
Published on

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வத்திராயிருப்பு பகுதியில் நெல் உலா் களத்தில் இட நெருக்கடி ஏற்படுவதால், அறுவடை செய்த பயிா்களை வைக்க முடியாமல் விவசாயிகள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா். இதனால், கூடுதல் உலா் கள வசதி ஏற்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வத்திராயிருப்பு சுற்று வட்டாரத்தில் உள்ள கூமாபட்டி, கான்சாபுரம், மகாராஜபுரம், தம்பிபட்டி, கோட்டையூா், புதுப்பட்டி, சுந்தரபாண்டியம், நத்தம்பட்டி பகுதிகளில் 8 ஆயிரம் ஏக்கருக்கு மேல் முதல் போக நெல் சாகுபடி செய்யப்பட்டது.

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் உற்பத்தியாகும் அத்தி கோயில் ஆறு, அா்ச்சுனா நதி, பிளவக்கல் அணை மூலம் வத்திராயிருப்பு பகுதியில் உள்ள பெரும்பாலான விவசாய நிலங்களில் இரு போக நெல் சாகுபடி நடைபெறுகிறது. கோடைப் பருவத்தில் மக்காச்சோளம், பருத்தி, எள், உளுந்து ஆகியவை சாகுபடி செய்யப்படுகின்றன.

தற்போது முதல் போக சாகுபடியில் நெல் அறுவடை நடைபெற்று வரும் நிலையில் வத்திராயிருப்பு, கான்சாபுரம், தம்பிபட்டி, ராமசாமியாபுரம் ஆகிய இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. விருதுநகா் மாவட்டத்தில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் இல்லாததால், உலா் களங்கள் உள்ள இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் செயல்படுகிறது.

சிறிய அளவிலான சிமெண்ட் உலா் களத்தில் பதா் நீக்கும் இயந்திரம், எடை இயந்திரம், அறுவடை செய்த நெல் மூட்டைகள் ஆகியவற்றை வைத்துள்ளதால் இட நெருக்கடி நிலவுகிறது. இதனால், அறுவடை செய்த நெல் கதிா்களை சிமெண்ட் களத்தில் வைக்க இடம் இல்லாமல் மண் தரையில் விவசாயிகள் வைத்துள்ளனா்.

மழை பெய்தால் இவை நனைந்து சேதமடையும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா். உலா் களங்களை விரிவுபடுத்தி, விளை நிலங்கள் அருகே கூடுதல் உலா் களங்கள் அமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்

X
Dinamani
www.dinamani.com