
அண்மையில் (8-4-2025இல்) உச்ச நீதிமன்றம், தமிழக ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த [உச்ச நீதிமன்ற சிவில் அசல் அதிகார வரம்பு ரிட் மனு (சிவில்) எண் 1239 / 2023)] வழக்கில், ஒரு முன்னோடியான, வரலாற்றுச் சிறப்புமிக்க, மிக விளக்கமான 445 பக்கத் தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் வழங்கியிருப்பதை அறிவோம். அத்தீர்ப்பு, பலதரப்பினரைப் பல்வேறு விதங்களில் அதிர்வுகளுக்கு உள்ளாக்கியுள்ளது. இந்தியப் பிரதமரோ பிற முக்கிய நிர்வாக அமைப்பின் பிரதிநிதிகளோ, உச்ச நீதிமன்றத்தின் ஏப்ரல் 8 தீர்ப்பு குறித்துக் கனத்த மௌனம் காத்துவருகிறார்கள். உள்குமுறல் எப்படியிருப்பினும், வெளிப்படையாகக் காட்டப்படும் ‘கண்ணியமான நடைமுறை’ பாராட்டுக்கு உரியதுதான்.
ஆனால், காங்கிரஸ், ஜனதா தளம் ஆகிய கட்சிகளில் பயணித்துப் பல பதவிகளும் வகித்துப் பின்னர், பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து 2019 - 2022 வரை மாநில ஆளுநர், 2022 முதல் குடியரசுத் துணைத்தலைவர் எனப் பல பதவிகள் பெற்றிருக்கும் ஜகதீப் தன்கரை, தான் வகிக்கும் அரசியல் சட்டப் பதவிக்கான, கண்ணியத்தையும், பொறுப்புணர்வையும் காற்றில் வீசிவிட்டு, வானத்திற்கும் பூமிக்கும் இந்தத் தீர்ப்பு குதிக்க வைத்திருக்கிறது, வார்த்தைகளைக் கொட்ட வைத்திருக்கிறது. அவரை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ‘நாடாளுமன்ற அதிகாரத்தின் மீதும், அரசமைப்புச்சட்ட அதிகாரங்களின் (குடியரசுத் தலைவர், ஆளுநர்கள்) மீதும்’ உச்ச நீதிமன்றத்தால் வீசப்பட்டிருக்கும் “அணுஆயுத ஏவுகணை” எனக் கொதிக்கிறார்.
மத்திய அரசால் ‘நியமிக்கப்பட்ட’ தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி ஆரம்பம் முதலே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாகச் செயல்படுவது போலவே, தன்கர் மேற்கு வங்கத்தில், மாநில அரசுக்கு முட்டுக்கட்டையாகச் செயல்பட்ட முன்னோடி. முன்னர், மத்திய பா.ஜ.க. அரசு, நீதிபதிகள் நியமனம் தொடர்பாகக் கொண்டுவந்த சட்டத்தை உச்ச நீதிமன்றம் “செல்லாது” எனத் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பு குறித்தும் தொடர்ந்து சுதந்திரமாகச் செயல்படும் நீதி அமைப்புகள் மீது, குறிப்பாக உச்ச நீதிமன்றத்தின் மீது கண்டனங்களை வீசிவரும் போக்கு கொண்டவர் தன்கர்.
இந்திய அரசமைப்பில், நாடாளுமன்றம், அரசாங்கம் (நிர்வாகம்), நீதி அமைப்புகள் என்ற "மூன்றில் எதுவும் ஒன்றுக்கொன்று மேலில்லை; மூன்றில் எதுவும் எதுவொன்றுக்கும் கீழுமில்லை’’. ஒவ்வொன்றும் எச்சமயத்திலும் அதீதமாகச் செயல்பட்டுவிடாமல், தக்க தடுப்புகளும், சமநிலைப்படுத்த ஏற்பாடுகளும் (Checks and Balances) கொண்டிருப்பதான நுட்பத்தில், நம் நாட்டின் அரசியலமைப்புச் சட்டம், அரசியல் தீர்க்கதரிசிகளால், தேர்ந்த நல்லறிஞர்களால் ஆய்ந்து வடிவாக்கி நமக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
நமது அரசமைப்புச் சட்டத்தின் சிறப்பம்சமே அரசின் மூன்று அங்கங்களுக்கிடையே நிறுவப்பட்டுள்ள “அதிகாரச் சமன்பாடு” (Balance of Power), தெளிவான அதிகார வரையறை (Separation of Powers) என்ற கோட்பாடாகும். மிகச் சுருக்கமாக, உரத்துச் சொல்லப்பட உரியது என்னவென்றால், நம் நாட்டில் ‘’இந்திய அரசமைப்புச் சட்டமே அனைத்திலும் உயர்வானது, அது ஏற்படுத்தியிருக்கும் எந்த அமைப்பும் அல்ல (The Constitution is Supreme, not its Creations)’’ என்பதே உண்மை நிலை; உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலை; எவரொருவராலும் - குடியரசுத் துணைத் தலைவராலும் - மறுக்க முடியாத, மறுக்கக் கூடாத சாசுவதம் அது. இந்த அடிப்படையான அரசமைப்பு உண்மையை அடியோடு மறந்து அல்லது வேண்டுமென்றே மறைத்துக்கொண்டு, “நாடாளுமன்றத்திற்கு விஞ்சிய அதிகாரங் கொண்டது எதுவுமில்லை” என உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வந்த நாள் முதல் கிளிப் பிள்ளை போலத் திரும்பத் திரும்பச் செல்லுமிடமெல்லாம் சொல்லி வருகிறார் பி.எஸ்ஸி. (ஹானர்ஸ்), எல்.எல்.பி. பயின்றுள்ள இந்த முன்னாள் ராஜஸ்தான் வழக்குரைஞர்.
நாடாளுமன்றமா? அல்லது நீதியமைப்பா? எது உச்சம்? என்ற கேள்விக்கே நம் நாட்டில் இடமில்லை. இந்திய நாடாளுமன்றம் மக்களின் இறையாண்மையைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டங்களை இயற்றவும், இருக்கும் சட்டங்களைத் திருத்தவும், நிர்வாகம் பொறுப்புடன் செயல்படுவதை உறுதி செய்யவும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அரசியலமைப்பின் மத்தியம் மற்றும் பொதுப் பட்டியல்களில் வரையறுக்கப்பட்டுள்ளபடி நாடாளுமன்றம் பரந்த சட்டப்பேரவை அதிகாரங்களைக் கொண்டுள்ளது. அரசியல் சட்டப்பிரிவு 368இன் கீழ் அரசியலமைப்பைத் திருத்தும் உச்ச அதிகாரமும் நாடாளுமன்றத்திற்கு உண்டு. ஆனால், அதேசமயத்தில், உச்ச நீதிமன்றத்தின் தலைமையிலான இந்திய நீதி அமைப்பு, அரசியலமைப்பின் பாதுகாவலராக அமையப்பெற்றுள்ளது. நாடாளுமன்றத்தால் இயற்றப்படும் அனைத்து சட்டங்களும் நாட்டின் அரசியலமைப்புக் கொள்கைகளுக்கு இணக்கமாக இருப்பதை, இயங்குவதை நீதி அமைப்பு உறுதி செய்கிறது. நீதித்துறை மறு ஆய்வு (Judicial Review) அதிகாரத்தின் மூலம், அடிப்படை உரிமைகள் அல்லது அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பை மீறும் எந்தவொரு சட்டத்தையும் அல்லது நிர்வாக நடவடிக்கையையும், நமது நீதி அமைப்பு ரத்து செய்ய முடியும். அதாவது, நாடாளுமன்றம் நிறைவேற்றும் சட்டங்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்குப் பொருந்தாமல், முரணாக இருந்தால், நீதித்துறை மறு ஆய்வு மூலம் அவ்வாறான சட்டங்கள் செல்லுபடியாகத்தக்கன அல்ல (Ultra Vires to the Constitution) என்று முடிவு அறிவிக்கும் அதிகாரத்தைக் கடமைப்பொறுப்பினை, அரசமைப்புச்சட்டம் உச்ச நீதிமன்றத்திற்கு வழங்கியிருப்பதை மறக்கவோ, மறுக்கவோ, முடியாது.
மேலும், அரசியலமைப்பின் பகுதி III இன் கீழ் குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் பொறுப்பும் நீதியமைப்பிடம்தான் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பல பதிற்றாண்டுகளாக, முற்போக்கான விளக்கங்கள் மூலம் உரிமைகளின் நோக்கத்தை விரிவுபடுத்துவதில் இந்திய நீதித்துறை பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி சமுதாயப் பங்களிப்பை நிகழ்த்தியுள்ளது. நம் நாட்டில் மனித உரிமைகள் காக்கப்படப் பெரிதும் உதவியுள்ளது. நீதித்துறையின் சுதந்திரமும், ஒருமைப்பாடும் நம் ஜனநாயக சமூகத்தில் “நீதி” என்ற கருத்துக்கே அடிப்படை ஆதாரமாக விளங்குகிறது.
அமெரிக்க மாதிரியைப் போல, இந்திய அரசியலமைப்பு அதிகாரப் பிரிவினைக் கோட்பாட்டை வெளிப்படையாக வகுத்துரைக்கவில்லை. ஆனாலும், அதிகாரப் பிரிவினைக் கொள்கை (Distribution / Separation of Powers) நிலவுவதன் அடிப்படையில் கட்டமைப்பு அமைந்துள்ள நம் நாட்டில், அரசின் அங்கங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய விசயங்களில் முரண்பாடுகளும் பதற்றங்களும் ஏற்படலாம். ஒவ்வொரு அமைப்பிலும், அரசமைப்பிலுள்ள உறுப்புகளுக்கு இடையேயான மேலாதிக்கம் குறித்த கேள்விகள் அடிக்கடி எழுவதும்கூட இயற்கைதான். ஆனாலும், ஒவ்வொரு அமைப்பும் பரஸ்பர மரியாதை, கட்டுப்பாட்டைப் பின்பற்றி, வரையறுக்கப்பட்ட கட்டமைப்பிற்குள் இயங்குமாறு நமது அரசமைப்புச் சட்டம் வகுக்கப்பட்டுள்ளதுதான் சிறப்பாகும்.
ஜனநாயகத்தின் மிக முக்கியமான இரண்டு உறுப்புகளது – நாடாளுமன்றம், நீதித்துறை - அதிகாரங்களையும் வரம்புகளையும் விளக்கும்போது, ஜனநாயகத்தில் யார் உயர்ந்தவர் – நாடாளுமன்றமா? அல்லது நீதித்துறையா? என்ற கேள்விக்கு, ஏதாவதொன்றின் ஒற்றை மேலாதிக்கத்தை அடையாளம் காண்பதில் இல்லை அறிவு. மாறாக அரசியலமைப்புச் சட்டம்தான் மிக உயர்ந்தது. அனைத்து நிறுவனங்களும் அதன் எல்லைகளுக்குள் செயல்பட வேண்டும் என்பதே மெய்ப்பொருள். ஆகவே, நமது அரசியலமைப்பே மிக உயர்ந்த அதிகாரமாகும் என்பதைச் சரியாகப் புரிந்துகொள்வதில் உள்ளது அறிவு. 1950 முதல் - அவ்வப்போது தேவைப்படும் திருத்தங்களுடன், நமது அரசமைப்புச் சட்டம் நிலைபெற்று இயங்கிவருவதே இதற்குச் சான்று.
இந்திய வரலாற்றில் இந்த சமநிலை பல முறை சோதனைக்குள்ளாகியுள்ளது. குறிப்பாக அரசியலமைப்புத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்போது, நீதித்துறைத் தீர்ப்புகள், மற்ற அமைப்புகள், நிறுவனங்களுக்கிடையே மோதுவது போலக் கருதப்படும்போது, பெரும்பாலும் ஒவ்வொரு துறையின் வரம்புகள், அவற்றின் மேலாதிக்கம் குறித்த விவாதங்களைத் தூண்டுகின்றன.
முன்னரே குறிப்பிட்டது போல, இந்த விவாதத்தின் மையப் பிரச்னையாக இருப்பது நீதித்துறை மறு ஆய்வின் அதிகாரமும், அரசியலமைப்புச் சட்டத்தை மதிப்பிடுவதற்கான நீதித்துறையின் திறனும். அரசியலமைப்பை மீறும் சட்டங்களை நாடாளுமன்றம் இயற்றாமல் இருப்பதை நீதித்துறை மறு ஆய்வு அதிகாரம் உறுதி செய்கிறது என்பது உண்மை நிலை.
வரலாற்றுச் சிறப்புமிக்க கேசவானந்த பாரதி எதிராகக் கேரள மாநிலம் (1973) வழக்கு, அரசியலமைப்புச் சட்ட அடிப்படை கட்டமைப்புக் கோட்பாட்டை (Doctrine of the basic structure of the Constitution) அறிமுகப்படுத்தியது. இந்தக் கோட்பாடு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஒரு முக்கிய மூலைக்கல்லாக (Corner Stone) நிலைபெற்றுள்ளதை அறிவோம். இந்தத் தீர்ப்பின் மூலம், அரசியலமைப்பைத் திருத்துவதற்கு நாடாளுமன்றத்திற்குப் பரந்த அதிகாரங்கள் இருந்தாலும், அதன் அடிப்படை அம்சங்களை (Basic Structure) மாற்ற முடியாது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுருங்கச் சொல்வதானால், இந்தத் தீர்ப்பு, நாடாளுமன்றம் உச்சமானது அல்ல; அது அரசியலமைப்பிற்குக் கீழ்ப்படிந்ததுதான் என்பதை மிகத் தெளிவாக நிறுவியது. மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புத் திருத்தங்கள்கூட, அடிப்படைக் கட்டமைப்பை மீறினால், உச்ச நீதிமன்றத்தால் மறு ஆய்வு செய்யப்பட்டுச் செல்லாததாக அறிவிக்கப்படலாம் என்பது நிறுவப்பட்டிருக்கும் நிதர்சனம்.
இந்திய நீதித்துறை, அவ்வப்போது சட்டமன்ற மற்றும் நிர்வாக வெற்றிடங்களை நிரப்பும் செயற்பாட்டாளராகவும் பணியாற்றி வருகிறது, குறிப்பாகச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மனித உரிமைகள், ஊழல் தடுப்பு போன்ற பிரச்னைகளில். மற்ற நிறுவனங்கள் தோல்வியடைந்த இடங்களில், நீதி வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட நீதித்துறையின் செயல்பாடுகள் பாராட்டப்பட்டாலும், சட்டமன்றத்தின் களத்தில் (Legislative Domain) அத்தீர்ப்புகள் அத்துமீறி நுழைவதாக விமர்சிக்கப்பட்டுள்ளதையும் குறிப்பிடத்தான் வேண்டும். நிர்வாக, கொள்கை விசயங்களில் நீதிமன்றங்கள் தேவைப்படும் உத்தரவுகளைப் பிறப்பித்த சந்தர்ப்பங்களில் நீதித்துறை அத்துமீறுவதாகக் குரல்கள் எழும்புகின்றன. இருப்பினும், நாடாளுமன்றம் அல்லது நிர்வாக அமைப்பு, அவற்றின் அலுவலர்கள் தத்தமது கடமைகளைத் திறம்படச் செய்யத் தவறும்போது அல்லது தன்னிச்சையாகச் செயல்படும்போது, எடுத்துக்காட்டாக, தமிழ்நாடு ஆளுநர் குறித்த (8-4-2025 நாளிட்ட) தீர்ப்பைப்போல நீதிமன்றத் தலையீடு அவசியமாவதை அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை நோக்கங்களின் ஒளியில் காணும் எவரும் ஏற்றுக்கொள்வர்.
ஆனால், குடியரசுத் துணைத் தலைவராக உள்ள ஜகதீப் தன்கர் இதனை ஏற்றுக்கொள்ள மறுத்து அடம்பிடிப்பதோடு, நாடாளுமன்ற அதிகாரத்தின் மீதான ஆக்கிரமிப்பு என ஆக்ரோஷமாக எதிர்க்கிறார். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை, நாடாளுமன்ற அதிகாரத்தின் மீது வீசப்பட்ட அணு ஆயுத ஏவுகணை (Nuclear missile) என்று அபாண்ட அவதூறும் கூறுகிறார். அரசியல் சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தை, நீதித்துறை முறைப்படி, சுதந்திரமாக, நியாயமான காரண, காரியங்களை விஸ்தாரமாக விளக்கி வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பைத்தான் அரசியலமைப்புச் சட்ட அதிகாரப் பதவியில் இருந்துகொண்டு தன்கர் சாடுகிறார். மேலும், அவர் குறிப்பிட்டுப் புலம்பும் அந்தத் தீர்ப்பின் மூலம் தமிழ்நாடு மாநிலத்திற்கு, ஆளுநரின் ‘’சட்டவிரோதச் செயலால்” நிகழ்ந்துள்ள கேடுகளை அகற்றி, முழுமையான நீதி (Complete Justice) கிடைக்கச் செய்ய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 142ஐ, உச்ச நீதிமன்றம் பயன்படுத்தியதைத்தான், தன்கர் தாங்கமுடியாமல் கொதிக்கிறார்.
அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 142 என்பது இன்றோ, நேற்றோ அரசியல் சட்டத்தில் புதிதாகச் சேர்க்கப்பட்டதல்ல, ஜகதீப் தன்கர் கண்டு பதறும் அந்த “அணு ஆயுத ஏவுகணை” ஆரம்பம் முதலே – 1950 முதலே - அங்கேயேதானுள்ளது. அந்த அணு ஆயுத ஏவுகணை நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ்தான், ஜகதீப் தன்கர், முன்னர் மேற்குவங்க ஆளுநராகவும், 2022-இல் குடியரசுத் துணைத்தலைவராகவும் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டிருக்கிறார்.
ஒருவகையில், அரசியல் சட்டப்பிரிவு 142 குறித்து இந்தியக் குடிமக்கள் யாவரும் அறிந்துகொள்ள வேண்டிய அவசியத்தைத் தன்கர், தனது அநாவசியமான, நீதிமன்ற அவமதிப்புச் செயலாகவும், அரசியல் சட்டத்தையே அவமதிப்பதான செயலாகவும் கருதப்பட உரிய (அணு அணுஆயுத ஏவுகணைப்) பேச்சால் ஏற்படுத்தியிருக்கிறார். அவரது பேச்சின்படி, உச்ச நீதிமன்றம் அ.ச. பிரிவு 142ஐ- ‘அணு ஆயுத ஏவுகணை’யை - இப்போதுதான் பயன்படுத்தியிருப்பதுபோல 1979இல் ராஜஸ்தானில் வழக்குரைஞராகப் பதிவு செய்துகொண்ட அவரது பதைபதைப்பு காட்டுவதாக இருக்கிறது. ஆனால் அது உண்மையல்லவே. நம் நாட்டின் தலைசிறந்த மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் முதன்மையானதான ஆமதாபாத் மேலாண்மைக் கல்வி நிறுவனம் (IIM-A) 2004இல் வெளியிட்டுள்ள விளக்கமான ஆய்வறிக்கையில், 1950 முதல் 2023 வரையுள்ள காலப்பரப்பில் உச்ச நீதிமன்றம் 1,579 வழக்குகளில், பிரிவு 142ஐக் குறிப்பிட்டுள்ளது. ஆனால், அந்த எண்ணிக்கையில் பாதிக்கும் மிகக் குறைவான வழக்குகளில்தான் அரசியல் சட்டப் பிரிவு 142ஐப் பயன்படுத்தியுள்ளது. 40% வழக்குகளில் அரசியல் சட்டப் பிரிவு 142இன் பயன்பாடு தெளிவாக இல்லைபோல் தோன்றுகிறது.10% வழக்குகளில், அ.ச. பிரிவு 142 பயன்பாடு வெளிப்படையாக உச்ச நீதிமன்றத்தால் மறுக்கப்பட்டிருக்கிறது. இதனைக் கண்ணுறுபவர் எவரும், உச்ச நீதிமன்றம் நினைத்தபோதெல்லாம் அ.ச. பிரிவு 142ஐப் பயன்படுத்துவதில்லை என்பதை உணரக்கூடும். மிகுந்த, ஆழ்ந்த ஆலோசனைக்குப் பிறகே, நியாயமான காரணங்களின் அடிப்படையிலேயே அ.ச. பிரிவு 142 பயன்படுத்தப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, ஒரு மிகச் சிறிய பட்டியலாக, அரசியல் சட்டப்பிரிவு 142, ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தால் நியாயமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் கீழ்க்காணும் வழக்குகளைக் குறிப்பிடலாம்.
பிரேம் சந்த் கர்க் எதிராகக் கலால் ஆணையர், உ.பி (1963); ஐ.சி. கோலக்நாத் எதிராகப் பஞ்சாப் மாநிலம் (1967); யூனியன் கார்பைடு கார்ப்பரேஷன் எதிராக இந்திய ஒன்றியம் (1991); தில்லி நீதித்துறை சேவைகள் சங்கம் எதிராகக் குஜராத் மாநிலம் (1991); உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் எதிராக இந்திய ஒன்றியம் (1998); ஷில்பா ஷைலேஷ் எதிர் வருண் ஸ்ரீனிவாசன் (2023); டாக்டர் நிர்மல் சிங் பனேசர் எதிர் பரம்ஜித் கெளர் பனேசர் (2023); ஏ.ஜி. பேரறிவாளன் எதிராக மாநிலம் 2023; உயர்நீதிமன்ற பார் அசோசியேஷன், அலாகாபாத் எதிராக உ.பி. மாநிலம் மற்றும் இதர மாநிலங்கள் (2024).
இந்திய அரசியலமைப்பு என்பது நிர்வாகத்திற்குத் தக்க அதிகாரங்களை வழங்குவதோடு, குடிமக்கள் அனைவருக்கும் முழுமையான, நீதியும், அதன் சமமான பாதுகாப்பும், வழங்கப்பட ஏதுவான வழிமுறைகளைத் திறம்பட ஏற்பாடுகள் செய்து வைத்திருக்கும் அற்புத சாசனமாகும். அந்த வகையில், செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகளுக்கான பல்வேறு விதிகளில், பிரிவு 142 ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது.
அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 142, இரண்டு உட்பிரிவுகளைக் [142 (1); 142 (2)] கொண்டது. 142 (1) : உச்ச நீதிமன்றம் தன் முன் முடிவுறா நிலையிலுள்ள எந்தவொரு வழக்கிலும் "முழுமையான நீதியை" வழங்குவதற்குத் தேவைப்படுகிறவாறான தீர்ப்பாணையைப் பிறப்பிக்க அதிகாரங்கொண்டது என்கிறது. மேலும், அவ்வாறு உச்ச நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்படும் ஆணை எதுவும், நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்தைப்போல, குடியரசுத்தலைவர் பிறப்பித்த ஆணையைப்போல, இந்திய ஆட்சிப் பரப்பு எங்கேயும் செல்லுறத்தக்கது ஆகும் என்றும் விரித்துரைத்துள்ளது.
142 (2): நாடாளுமன்றத்தால் செய்யப்பட்டுள்ள சட்ட வரைமுறைகளுக்குள்பட்டு, உச்ச நீதிமன்றத்தின் முன், எவரொருவரின் வருகையையும் உறுதி செய்தல்; ஆவணங்கள் எதனையும் வெளிக்கொணர்தல்; தன் மீதான இகழ்வுகள் எது பற்றியும் புலனாய்வு செய்தல் அல்லது தண்டித்தல் முதலிய நோக்கங்களுக்காக ஆணை எதனையும் இடுவதற்கான அனைத்து அதிகாரங்களையும் உச்ச நீதிமன்றம் கொண்டுள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது.
இந்தப் பிரிவில், உட்பிரிவுகளில் பொதிந்துள்ள உள்ளார்ந்த அதிகாரம் சாதாரண சட்டக் கட்டமைப்புகள், அதன் செயல்பாடுகள் குறையும்போது, உச்ச நீதிமன்றம் தீர்க்கமாகச் செயல்பட வேண்டும், செயல்பட முடியும் என்ற தொலைநோக்குப் பார்வையில், நம் நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தை ஒரு பல்திறன் நிறை ஆவணமாக உருவாக்கித்தந்த அரசியல் சட்டச் சிற்பிகளது கூட்டு ஆற்றலின் வெளிப்பாடுகளில் ஒன்று.
இந்திய அரசியலமைப்புச் சட்ட உருவாக்கத்தின்போது, தற்போது 142 எண்ணுள்ள அரசியல் சட்டப்பிரிவானது ஆரம்பத்தில் வரைவு அரசியலமைப்பில் பிரிவு 118 என அறிமுகப்படுத்தப்பட்டது. உச்ச நீதிமன்றத்திற்குத் தனித்துவமான அதிகாரம் வழங்கப்பட வேண்டிய விசயத்தில், அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களிடையே அதிகம் மாற்றுக் கருத்து இல்லாமையால், குறைந்தபட்ச விவாதத்துடன் ஆவணத்தில் இடம்பெற்றதாகும். அடிப்படையில், உச்ச நீதிமன்றம் தற்போதுள்ள சட்டங்களின் வரம்புகளுக்கு அப்பால் நீதி வழங்க முடியும் என்பதை உறுதி செய்வதற்காக, இது நமது அறிவார்ந்த அரசியல் நிர்ணய சபை முன்னோர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த அ.ச. பிரிவு 142. அந்த அ.ச. பிரிவின் இருப்பையும், முறையான பயன்பாட்டையும்தான் ஜகதீப் தன்கர் சவாலுக்குள்ளாக்கி, அரசியல் சட்ட அவமதிப்பு செய்திருக்கிறார்.
அரசியல் நிர்ணய சபை விவாதங்களின்போது, கிருஷ்ண சந்திர சர்மா (ஐக்கிய மாகாணங்களிலிருந்து, காங்கிரஸ் கட்சி சார்பில் அரசியலமைப்பு சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். முதன்மையாக நீதித்துறையைச் சுற்றியுள்ள விவாதங்களில் அதிகமாகப் பங்கேற்ற வழக்குரைஞர். சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தில், 1952 முதல் 1967 வரை மாகாண நாடாளுமன்றம் மற்றும் முதல் மூன்று மக்களவை உறுப்பினராகப் பணியாற்றியவர்), உச்ச நீதிமன்றத்திற்கு முன்மொழியப்பட்டிருக்கும் அதிகாரங்களை ‘பிரிவி கவுன்சிலின்’ அதிகாரங்களுடன் ஒப்பிட்டு, “உச்ச நீதிமன்றம், ‘சட்டத்திற்கு அப்பாற்பட்டதாக’ இருக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். மேலும், "அது நியாயமானதாகக் கருதும் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்கும்" திறனில் இருக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் வைத்தார் என்பது குறிப்பிட உரியது.
அ.ச.பிரிவு 142 மிகவும் குறிப்பிடத்தக்கது. இந்த சட்டப் பிரிவு, சட்டப்பேரவை வழிமுறைகள் குறைபாடுள்ள, சிக்கலான சூழ்நிலைகளை நிவர்த்தி செய்ய உச்ச நீதிமன்றத்திற்கு எஞ்சிய அதிகாரங்களை (Residual Powers) வழங்குவதாகும். நாட்டில் நீதி மேலோங்குவதை உறுதி செய்யும் உன்னத நோக்கமே அ.ச.பிரிவு 142இன் ஒவ்வொரு எழுத்திலும் உறைபொருள். தற்போதுள்ள ஒரு சக்தி வாய்ந்த நீதித்துறையை உருவாக்கும் அரசியலமைப்புச் சட்ட நிறுவனர்களின் விழைவுகளை அ.ச. பிரிவு 142 அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
சட்டங்களில், சட்டப்பேரவை நடவடிக்கைகளால் ஏற்பட்டிருக்கும் இடைவெளிகளைக் குறைக்கவும் (To fill gaps arising out of Legislative actions and inactions), தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லாத சூழ்நிலைகளை நிவர்த்தி செய்யவும் நீதித்துறையை அ.ச. பிரிவு 142 அனுமதிக்கிறது. எவ்வாறாயினும், இந்த அதிகாரம், அரசியலமைப்பு ஏற்பாடுகளின் பரந்த கட்டமைப்பிற்குள்தான் பயன்படுத்தப்பட வேண்டும், சமத்துவம், நேர்மை, இயற்கை நீதியின் கொள்கைகளைக் கடைப்பிடிப்பதை நீதிமன்றத்தின் செயல்பாடு உறுதி செய்ய வேண்டும். இரண்டாவது முதன்மை நோக்கம், தனிப்பட்ட வழக்குகளில் "முழுமையான நீதியை" வழங்குதல். குற்றவியல் நடவடிக்கைகளை ரத்து செய்யவும், மீளவே முடியாத முறிவின் அடிப்படையில் திருமணங்களைச் சட்டப்பூர்வமாகக் கலைக்கவும் (Dissolution of Marriage / Nullyfying Marriage), போபால் விஷவாயுத் துயரம் போன்ற வழக்குகளில் தீர்வுகள் பெரும் தாமதங்களுக்குள்ளான நேர்வுகளில், தடைகளை அகற்றிப் பாதிக்கப்பட்டோருக்கு விரைந்து தீர்வுகள் கிடைக்கவும், தீர்வுகளை அமல்படுத்தவும் உச்ச நீதிமன்றம் இந்த பிரிவைப் பயன்படுத்தியுள்ளது. அப்போதெல்லாம், தன்கருக்கு, அ.ச. பிரிவு 142ஐ உச்ச நீதிமன்றம் பயன்படுத்தியது, அணு ஆயுத ஏவுகணையாகத் தெரியவில்லைபோலும். உச்ச நீதிமன்றம் இந்த அ.ச. பிரிவை இதற்குமுன் எத்தனையோ வழக்குகளில் முழுமையான நீதிக்காகப் பயன்படுத்தியிருப்பதை அறிந்திருக்க மாட்டார் எனக் கூற வாய்ப்பில்லை. அவர்தான் 1979 முதல் வழக்குரைஞராயிற்றே.
பரந்த நோக்கம் இருந்தபோதிலும், பிரிவு 142 வரம்பற்றது அல்ல. உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில், மிகக் கவனமாகத் தன்னிச்சையான அல்லது அதிகப்படியான அதிகாரப் பயன்பாட்டைத் தவிர்த்தல்; அதன் முடிவுகள் நிறுவப்பட்ட சட்டக் கோட்பாடுகள் மற்றும் முன்னுதாரணங்களுடன் ஒத்துப்போவதை உறுதிசெய்தல்; வெளிப்படைத்தன்மை: இயற்கை நீதி மற்றும் நேர்மையின் கொள்கைகளை நிலைநிறுத்துதல் முதலியவற்றைத் தொடர்ந்து தனக்குத் தானே நெறிமுறைகளை வலியுறுத்திக்கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 142 நீதித்துறை அதிகாரத்தின் ஒரு மைல் கல்லாகும். உச்ச நீதிமன்றம் விரிவான நீதியை வழங்க இந்த அ.ச. பிரிவு உதவுகிறது. சட்ட விதிகள் போதுமானதாக இல்லாதபோது அந்த இடைவெளியை இணைக்கும் ஒரு பாலமாக இந்த ஏற்பாடு செயல்படுகிறது. வெற்று நடைமுறை நுட்பங்களைக்காட்டிலும், நீதி மேலோங்குவதை இது உறுதி செய்கிறது. எவ்வாறாயினும், அரசியலமைப்புக் கொள்கைகளுக்கு இணங்குவதுடன் சமத்துவத்தின் அவசியத்தை மனங்கொண்டு இந்த அதிகாரம் எச்சரிக்கையுடன் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றம் உணர்ந்தே எப்போதும் செயல்பட்டு வருகிறது. வேகமாக வளர்ந்துவரும் சட்ட நிலப்பரப்பில், அ.ச. பிரிவு 142ஐ, ஒரு பிரம்மாஸ்திரமாக உருவகப்படுத்தலாமே ஒழிய அணு ஆயுத ஏவுகணையாக நினைத்து அலறுவது அபத்தம்; அரசியல் சட்ட அறிவுடைமை அளவைக் காட்டுவதாகிவிடும்.
[கட்டுரையாளர் - கல்லூரி, பல்கலைக்கழகப் பணி நிறைவுக்குப் பின் உயர்நீதிமன்ற வழக்குரைஞர்]
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.