

நாட்டில் பரவலாக 10 ரூபாய் நாணயத்தை ஏற்க பல தரப்பிலும் மறுக்கப்பட்டு வரும் நிலையில், ஏற்கனவே பயன்பாட்டில் இருந்து மறைந்துவிட்ட 50 காசு இன்னும் சட்டப்படி செல்லுபடியாகும் என ஆர்பிஐ விளக்கம் கொடுத்துள்ளது.
நாணயங்களின் புழக்கமே வெகுவாகக் குறைந்திருக்கும் நிலையில், ஏற்கனவே நாம் மறந்துபோன 50 காசு நாணயம் இன்னமும் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
அதாவது, ரிசர்வ் வங்கி, இன்னமும் அதிகாரப்பூர்வமாக 50 காசு நாணயங்களை புழக்கத்திலிருந்து நீக்கவில்லை. அதன்படி பார்த்தால், கடைகளுக்குச் சென்று 50 காசு சாக்லேட் ஒன்றை, குழந்தைகள் 50 காசு நாணயம் கொடுத்து வாங்க முடியும். ஆனால் அது செல்லுமா? செல்லாதா? என்ற குழப்பத்தில் வியாபாரிகள் 50 காசு நாணயத்தை வாங்குவதில்லை.
தற்போது 50 காசு மதிப்புள்ள பொருள்களை மக்கள் ஒரு ரூபாய் கொடுத்து இரண்டாக வாங்கும் நிலைதான் உள்ளது. அதாவது 50 காசு மதிப்புள்ள ஒரு சாக்லேட் வேண்டும் என்றால் 1 ரூபாய் கொடுத்து இரண்டு சாக்லேட் வாங்க வேண்டும். 50 காச மதிப்புள்ள அஞ்சல் அட்டையை ஒரு ரூபாய் கொடுத்து இரண்டாக வாங்கிக் கொள்ளலாம் என்ற நிலையே இருக்கிறது.
இந்த நிலையில்தான் ஆர்பிஐ ஒரு விளக்கத்தை வெளியிட்டுள்ளது.
வெவ்வேறு வடிவமைப்புகளில் உள்ள நாணயங்கள் பற்றி உங்களுக்கு உறுதியாக தெரியவில்லையா? ஒரே மதிப்பைக் கொண்ட, ஆனால் வெவ்வேறு வடிவமைப்புகளில் இருக்கும் நாணயங்கள் ஒரே சமயத்தில் புழக்கத்தில் இருக்கின்றன.
அதன்படி, 50 காசு, ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10, மற்றும் ரூ.20 மதிப்புள்ள நாணயங்கள் அனைத்தும் சட்டப்பூர்வமாக செல்லக்கூடியவை மற்றும் நீண்ட காலமாக புழக்கத்தில் இருப்பவை என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
மக்களுக்கு இது தொடர்பான குறுந்தகவல்களையும் விடியோவையும் வெளியிட்டு ஆர்பிஐ விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது.
நாணயங்கள் குறித்த தவறான தகவல்களை அல்லது வதந்திகளை நம்பாதீர்கள். தயக்கமின்றி நாணயங்களை ஏற்றுக்கொள்ளுங்கள். என்று ரிசர்வ் வங்கி சொல்கிறது.
உண்டியலில் விழும் 50 காசுகள்
மக்கள் தங்கள் கையில் இருக்கும் 50 காசுகளை என்ன செய்வது என்று தெரியாமல் கோயில் உண்டியலில் போட்டுவிடுகிறார்கள். அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் மட்டும் குரூவாயூர் கோயிலில் ரூ.5800 மதிப்புள்ள 50 காசு நாணயங்கள் உண்டியலில் இருந்து சேகரிக்கப்பட்டுள்ளது. இவை அப்படியே வங்கியில் வரவு வைக்கப்படும்.
சில கோயில்களில் எடைக்கு எடை நாணயம், கை முழுக்க நாணயங்களை காணிக்கையிடுவது போன்ற பிரார்த்தனைகளை செய்யும்போது, ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து சில்லறைகளாக மாற்றி காணிக்கையிடுவதும் வழக்கம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.