
பெரிய அளவில் மக்கள் அறிந்திராத சைபர் மோசடிகளில், அழைப்பு அனுப்புதல் அல்லது கால் ஃபார்வேர்டிங் மோசடி குறித்து காவல்துறையினர் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
தகவல் தொடர்புத் துறையின் மாபெரும் வளர்ச்சியை, யார் பயன்படுத்திக் கொள்கிறார்களோ இல்லையோ, மோசடியில் ஈடுபடும் சைபர் குற்றவாளிகள் மிக அதிகமாகப் பயன்படுத்தி நாள்தோறும் புதிது புதிதாக மக்களை ஏமாற்றும் வேலைகளை செய்துகொண்டே வருகிறார்கள்.
அந்த வகையில், வங்கி அதிகாரி, மின் துறை அதிகாரி என பல்வேறு பெயர்களில் மக்களைத் தொடர்புகொண்டு அவர்களிடம் தனிப்பட்ட தகவல்களை கேட்டறிந்து, அவர்களது சொற்ப சேமிப்புப் பணத்தை மோசடி செய்யப்பட்டு வருகிறது. அதில் ஒன்றுதான் கார் ஃபார்வர்டு மோசடி.
இந்த மோசடி நடப்பது எப்படி?
மோசடியாளர்கள் இணையசேவை வழங்கும் (ஐஎஸ்பி) வாடிக்கையாளர் சேவை முகவர் போல பொதுமக்களை தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு பேசுவார்கள்.
அவர்கள், இணையசேவை உள்ளிட்டவை பற்றி முறைப்படி கருத்துகளை சேகரிப்பதாக கூறி, பாதிக்கப்பட்டவர்களை தொலைபேசியில் தொடர்பு கொள்கிறார்கள்.
மக்களிடம் தங்களது போலியான அடையாளத்தைக் கூறி நம்பிக்கையை பெற்றபிறகு, அவர்களது தொலைபேசியில் இருந்து ஒரு எண்ணைக் கூறி அதில் அழைக்கச் செய்கிறார்கள். அதன் மூலம் இணையசேவை வேகத்தைக் கண்டுபிடிக்க முடியும் என்று அவர்கள் சொன்னாலும், அந்த எண்ணில் அழைப்பதன் மூலம், ஒரு நபருக்கு வரும் தொலைபேசி அழைப்புகளை மோசடியாளருடைய தொலைபேசி எண்ணிற்கு மாற்றம் செய்கிறார்கள்.
ஒருவருடைய தொலைபேசி அழைப்புகள் அனைத்தையும் ஃபார்வர்டு செய்துகொண்டு, பிறகு அதே எண்ணை பயன்படுத்தி வாட்ஸ்ஆப் செயலியை தங்களுடைய செல்போனில் நிறுவிக் கொள்கிறார்கள்.
பின்னர் அந்த நபரின் வாட்ஸ்ஆப் தொடர்பு பட்டியலில் உள்ளவர்களிடமிருந்து, அந்த நபர் போல பேசி, அவசரமாக மருத்துவ செலவுக்கு பணம் கோருவது போல ஏமாற்றி, இவர்களது வங்கிக் கணக்கு எண்ணை அனுப்பி அதற்கு பணம் அனுப்பச் சொல்கிறார்கள்.
இதுபோல தகவல் வரும்போது, பலரும், அவசரம் என்பதால் எதையும் யோசிக்காமல் பணம் அனுப்பி விடுகிறார்கள். ஆனால், வாட்ஸ்ஆப் மட்டுமல்ல, எந்தஒரு சமூக வலைத்தளம் மூலமாகவும் பணம் கேட்டு தகவல் வந்தால், உடனடியாக அந்த நபரைத் தொடர்புகொண்டு கேட்டறிய வேண்டும் என்கிறார்கள் தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு காவல்துறை.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இதுபோன்று ஐஎஸ்பி சேவை என்று வரும் அழைப்புகளுக்கு உடனடியாக பதிலளிக்காமல், அதிகாரப்பூர்வ வாடிக்கையாளர் சேவை எண்ணை நேரடியாக தொடர்புகொள்ளவும்.
இதுபோன்ற கருத்துக் கேட்பு ஏதேனும் நடக்கிறதா என்று கேட்டறியும்.
எந்த ஒரு வாடிக்கையாளர் சேவை மையமும், இதுபோன்ற எந்த அறிவுறுத்தலையும் வழங்குவதில்லை என்பதையும் அறியவும்.
முன்பின் அறியாத அழைப்பாளர்களின் மூலம் வழங்கப்படும் எந்தவொரு குறியீடு அல்லது தொலைபேசி எண்ணிலும் அழைக்க வேண்டாம்.
தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொள்ளும் எவருடனும் தனிப்பட்ட தகவல் அல்லது வங்கி விவரங்களைத் பகிர வேண்டாம்.
வாட்ஸ்ஆப் போன்ற செயலிகளுக்கு, அனுமதியில்லாமல் மோசடியாளர்கள் பயன்படுத்துவதைத் தடுக்க இரண்டு வழிகளில் உறுதிப்படுத்தும் முறையைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
ஒருவர், தனது வங்கிக் கணக்கு அல்லது தொலைபேசி எண் ஊடுருவப்பட்டதாக சந்தேகித்தால், உடனடியாக அது குறித்து புகாரளிக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.