
'பேடிஎம்' செயலி சரிபார்ப்பு என்று வரும் அழைப்புகள் மூலமாக பேடிஎம் வாலட்டில் உள்ள பணத்தைத் திருடி மோசடி கும்பல் ஏமாற்று வேலைகளில் ஈடுபடுகின்றனர்.
பெரும்பாலும் இன்று கடைகளில் பொருள்கள் வாங்குவதற்கு அல்லது பணப்பரிமாற்றத்திற்கு யுபிஐ செயலிகளைத்தான் அதிகம் பயன்படுத்துகிறோம். குறிப்பாக கூகுள் பே, பேடிஎம் செயலிகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இதுதவிர போன்பே, அமேசான் பே, பீம் யுபிஐ, அந்தந்த வங்கிக்கணக்கு செயலிகள் என ஏராளமானவை இருக்கின்றன.
இந்த செயலிகள் சரிபார்ப்பு குழு என்று கூறி ஓடிபி மூலமாகவோ அல்லது வேறு வழியில் தனிப்பட்ட விவரங்களைக் கேட்டுப் பெற்று உங்கள் யுபிஐ வாலட் அல்லது வங்கிக்கணக்கில் இருந்து பணத்தைத் திருடுகிறார்கள்.
பேடிஎம் மோசடி!
மோசடி கும்பல், பேடிஎம் நிறுவனத்தில் இருந்து அழைப்பதாக போனில் ஐவிஆர் அழைப்புகளை(தானியங்கி அழைப்புகள்) தொடர்புகொள்கின்றனர். புதியதாக ஒரு போனில் அல்லது லேப்டாப்பில் பேடிஎம் செயலி லாக் -இன் செய்யச் சொல்கிறார்கள். அல்லது அவர்களே உங்களுடைய லாக்-இன் விவரங்களைக் கேட்டுப்பெற்று அதன்படியே உள்நுழைந்து இறுதியாக ஓடிபியும் கேட்கிறார்கள்.
வாடிக்கையாளர்களும் அந்த நிறுவனத்தில் இருந்துதான் பேசுகிறார்கள் என்று நம்பி ஓடிபியை கொடுக்கின்றனர்.
ஓடிபி வந்தவுடன் பேடிஎம் வாலட்டில் உள்ள பணத்தை எடுத்துக்கொள்கின்றனர். இதன் மூலமாக உங்களுடைய தனிப்பட்ட விவரங்களும் அவர்களுக்கு தெரிய வருகிறது. தொடர்ந்து அதைவைத்து கண்காணிக்கின்றனர். வங்கிக்கணக்கில் உள்ள பணமும் இதன் மூலமாக திருட வாய்ப்புள்ளது.
பெரும்பாலும் போன் அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகள் மூலமாக தொடர்புகொள்கின்றனர். உடனடி சரிபார்ப்பு அல்லது 'உங்கள் கணக்கில் இருந்து பணம் போய்விட்டது, உங்கள் கணக்கு பிளாக் ஆகிவிட்டது' என ஏதோவொரு அவசரக் கதையைக் கூறி உங்களிடம் விவரங்களை கேட்டுப்பெறுகின்றனர்.
உங்கள் யுபிஐ செயலி ஹேக் செய்யப்பட்டதாகவும் அதனைச் சரிசெய்ய வேண்டும் என்றெல்லாம் கூறி உங்களிடம் தகவல்களைப் பெறுவார்கள். அதனால் எச்சரிக்கையாக இருங்கள்.
பாதுகாப்பு வழிமுறைகள்!
பேடிஎம் செயலி தொடர்பான போன் அழைப்புகளுக்கு பதிலளிக்க வேண்டாம். குறிப்பாக பேடிஎம் நிறுவனம் ஓடிபி உள்ளிட்ட விவரங்களைக் கேட்காது.
இதேபோல மற்ற யுபிஐ செயலிகளில் இருந்து போன் அழைப்புகள் வந்தாலும் அதற்கு பதிலளிக்க வேண்டாம்.
உங்களுடைய வங்கிக்கணக்கு உள்ளீடு விவரங்கள், செயலிகள் உள்நுழைவு விவரங்கள், ஏடிஎம் பின் ஆகியவற்றை யாருடனும் பகிர வேண்டாம். வாடிக்கையாளர் சேவை என்று கேட்டாலும் கூற வேண்டாம்.
தொலைபேசி/மின்னஞ்சல் மூலம் வரும் அழைப்புகளில் குறிப்பாக ஓடிபி விவரங்களைப் பகிர வேண்டாம்.
இதுபோன்ற மோசடி அழைப்புகள் வந்தால் சம்மந்தப்பட்ட நிறுவனத்திடம் புகார் அளிக்கவும். 'ஸ்பேம்'(spam) போன் அழைப்புகளை எடுக்க வேண்டாம்.
உங்கள் யுபிஐ செயலி வாலட்டுகளில் மோசடி நடைபெற்றால் காவல்துறை அல்லது சைபர் குற்றப்பிரிவு(1930)க்கு புகார் கொடுக்கவும்.
உங்கள் யுபிஐ கணக்கு விவரங்களை அவ்வப்போது சரிபார்க்கவும்.
அதிகாரபூர்வ பக்கங்களில் இருந்து யுபிஐ செயலிகளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.