பட்டாசு விற்பனை
பட்டாசு விற்பனை

தீபாவளி வருகிறது! 70% சலுகையில் பட்டாசு என்ற விளம்பர மோசடி!

தீபாவளிப் பண்டிகை வருவதால் 70 சதவிகித விலைச் சலுகையில் பட்டாசு விற்பனை என்ற மோசடி பற்றி...
Published on

ஒரு பண்டிகை வரும்போது அதற்கு எவ்வாறு தயாராவது என மக்கள் சிந்திக்கும் அதேவேளையில், அதற்கு முன்பே மக்களை எவ்வாறு ஏமாற்றலாம் என சைபர் மோசடியாளர்கள் ரூம் போட்டு சிந்திக்கத் தொடங்கி விடுவார்கள்.

எனவே, இப்போது வரவிருப்பது தீபாவளி பண்டிகை, இதைவைத்து விதவிதமாக ஏமாற்றுச் சம்பவங்கள் நடக்கும்.

மோசடிகளில் பல வகை உண்டு, இது விசேஷகால மோசடி என்று அடையாளம் கூறப்படுகிறது.

மோசடியாளர்கள், விசேஷ காலங்களில், குறிப்பாக தீபாவளி மாதத்தில், குறைந்த விலையில் பட்டாசுகள் விற்பனை என்று கூறும் போலியான வலைத்தளங்களை உருவாக்குகின்றனர்.

சில இணையதளங்கள் சிவகாசியிலிருந்து நேரடியாக விற்பனைக்கு எனவும், உற்பத்தி விலையிலேயே விற்பனை எனவும் விளம்பரப்படுத்துவார்கள். ஆனால், உண்மையான பட்டாசு விலைக்கும் இந்த விலைக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கும். எனவே, இந்த அளவுக்குக் குறைவாக வேறு எங்குமே வாங்க முடியாது என மக்களை நினைக்க வைப்பார்கள்.

இந்த வலைத்தளத்துக்கு, சமூக வலைத்தளப் பக்கங்களில் ஏராளமான விளம்பரங்களும் வரும், சிலர், அந்த விளம்பரங்களைப் பார்த்து இந்த போலியான இணையதளத்துக்குச் செல்வார்கள்.

அது மட்டுமல்ல, இதுபோன்ற விளம்பரங்களில், இணையதளப் பக்கத்துக்குச் செல்வதற்கான இணையதள லிங்குகள் மூலம், பண மோசடி நடப்பதற்கான வாய்ப்புகளும் அதிகம் என்பதால் எக்காரணம் கொண்டும், விளம்பரங்களில் வரும் லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம்.

அதுபோன்ற இணையதளங்களுக்கு வருவோர், மிகக் குறைந்த விலையில் பட்டாசுகள் கிடைக்கிறதே என்று எண்ணி பணம் செலுத்துவார்கள். ஆனால், தீபாவளி தான் வருமே தவிர பட்டாசு வராது. தீபாவளி முடிந்ததும், நம்மைப் போல பலரும் பணம் கட்டி ஏமாந்ததும், அந்த வலைத்தளம் செயலிழக்கப்பட்டு எங்கும் எதுவும் கேட்க முடியாமலும், ஏன் பட்டாசு வரவில்லை, ஏன் பணம் திரும்பி வரவில்லை, யாரிடம் புகார் அளிப்பது, யார் ஏமாற்றினார்கள் என்று எதுவும் தெரியாமல் குழம்பிப்போவார்கள் மக்கள்.

பிறகுதான் தெரியும், தீபாவளி அவர்களுக்கு அல்ல, அவர்களை ஏமாற்றியவர்களுக்கே என்று.

எனவே, அக்கம் பக்கத்தில் இருக்கும் சிறு கடைகளில் பட்டாசுகள் வாங்கலாம். அல்லது உறுதி செய்யப்பட்ட பட்டாசு நிறுவனங்களின் இணையதளங்களில் ஆர்டர் செய்து வாங்கலாம். ஆனால், போலியான இணையதளங்களில் ஏமாற வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

சைபர் பாதுகாப்பு குறிப்புகள்

1.விசேஷ விற்பனைகளின் போது, நம்பகமான மற்றும் அறியப்பட்ட வலைத்தளங்களில் மட்டுமே பட்டாசு உள்ளிட்ட அனைத்தையும் வாங்கவும்.

2. பாதுகாப்பான முறைகளை தேர்வு செய்து, வலைத்தளம் "HTTPS* பயன்படுத்துகிறதா என்பதை சரிபார்க்கவும்.

3. குறைந்த விலையில் விற்பனை செய்யும் வலைத்தளங்களில் பணம் செலுத்த வேண்டாம்.

4. புதிய வலைத்தளங்களில் ஒரு பொருளை வாங்கும் முன், அந்த வலைத்தளத்தில் பிற வாடிக்கையாளர்களின் விமர்சனங்கள், கருத்துகளை சரிபார்க்கவும்.

சைபர் மோசடியாளர்களின் இலக்காக வேண்டாம், மோசடிக்கு ஆளாக நேர்ந்தால் அழையுங்கள் உதவி எண் 1930.

இதுபோன்ற சைபர் மோசடி குறித்த புகார்களை www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார் அளிக்கலாம். பண மோசடியாக இருப்பின், உடனடியாக புகார் அளித்தால் பணத்தை மீட்பது எளிதாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com