மோசடியாளர்கள் ஒரு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அல்லது மூத்த நிர்வாகி என்று கூறி உங்களிடம் பண மோசடி செய்ய வாய்ப்புள்ளது.
மோசடிகளில் இன்று எத்தனை வகையான மோசடிகள்தான் நடைபெறுகின்றன? ஒவ்வொரு நாளும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப அதை வைத்து முறைகேடுகளும் மோசடிகளும் அதிகமாகிக்கொண்டே இருக்கின்றன.
இந்நிலையில் மோசடியாளர்கள், நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அல்லது மூத்த நிர்வாகி என்று கூறி ஆள் மாறாட்டம் செய்து ஊழியர்களுக்கு அவசரமாக மின்னஞ்சல்கள் அல்லது செய்திகளை அனுப்பி, பணப்பரிமாற்றம் அல்லது அவரது துறை சார்ந்த ரகசிய தகவல்களைக் கோருகிறார்கள்.
இதற்காக மோசடியாளர்கள் தலைமை நிர்வாகியின் போலியான மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துகிறார்கள் அல்லது அலுவலக மொபைல் என்ணைப் பயன்படுத்துகிறார்கள். முன்னதாகவே உங்களுடைய நிறுவனம் மற்றும் தலைமை அதிகாரியின் தகவல்களைச் சேகரிக்கின்றனர்.
இப்போது போலி மின்னஞ்சல் முகவரி அல்லது மொபைல் குறுஞ்செய்தி மூலமாக 'வெளியில் இருக்கிறேன், ஒரு மீட்டிங்கில் இருக்கிறேன்' என்று கூறி அவசரமாக பணம் அனுப்பக் கோரிக்கை விடுக்கிறார்கள். அதன்படியே ஊழியரும் நம்பி அவர்கள் சொல்லும் வங்கிக்கணக்கிற்கு பணத்தை அனுப்பிவிடுகிறார்கள். பின்னரே இது ஒருவகையான மோசடி என்று தெரிய வருகிறது.
நிறுவனங்களிடையே இதுபோன்ற மோசடிகள் தற்போது அதிகரித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு வழிகள்
அவசரமாக பணம் செலுத்தக் கோரியோ அல்லது ஏதேனும் முக்கிய தகவல்களைக் கேட்டாலோ கேட்பவரின் மின்னஞ்சல் முகவரி அல்லது தொலைபேசி எண்ணை கண்டிப்பாக சரிபார்க்கவும்.
உங்களுடைய பாஸுக்கு நேரடியாக ஒருமுறை தொடர்புகொண்டு உறுதிப்படுத்திய பின்னர் அந்த வேலையைச் செய்யலாம்.
அவசரமாக செய்யச் செல்லும்போது சந்தேகம் இருந்தால் கண்டிப்பாக மூத்த அதிகாரிகளிடம் சந்தேகத்தை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
உங்களுக்குத் தெரியாத எண்களிலிருந்து வரும் செய்திகளுக்குப் பதிலளிக்காதீர்கள். உங்களுடைய விவரங்களையும் பகிர வேண்டாம்.
ஃபிஷிங் மின்னஞ்சல்கள் குறித்தும் இணையவழி குற்றங்கள் குறித்தும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
தெரியாத மின்னஞ்சல்களுக்கு ஒருபோதும் பதிலளிக்க வேண்டாம்.
நிறுவனத்தின் நிதி விவரங்களைக் கையாண்டால் கண்டிப்பாக அனைத்து கணக்குகளுக்கும் இரண்டு அடுக்கு பாதுகாப்பு முறையை (2FA) செயல்படுத்தவும்.
அதேபோல நிறுவனங்கள், ஊழியர்களுக்கு வரும் சந்தேகமான மின்னஞ்சல்கள் அல்லது கோரிக்கைகளை அடையாளம் கண்டு, அவற்றை அறிவிக்க பயிற்சி அளிக்கவும்.
ஒருவேளை மோசடியால் பாதிக்கப்பட்டால் வங்கியைத் தொடர்புகொண்டு தகவல் தெரிவிப்பதுடன் காவல்துறையில் புகார் அளிக்கவும்.
இணையவழி மோசடிகளுக்கு 1930 அல்லது https://www.cybercrime.gov.in. என்ற இணையதளம் மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.