
வாட்ஸ்ஆப் மூலமாக போலி லிங்க்குகள் அனுப்பப்பட்டு அதன் மூலமாக லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில்கூட பண மோசடி நடைபெறுவது அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும் இந்த வகையிலான மோசடிகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக, மக்கள் தகவல் தொடர்புக்காக அதிகம் பயன்படுத்தும் வாட்ஸ்ஆப் செயலிகள் மூலமாக போலி லிங்க்குகள் அனுப்பப்படுவதால் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்.
வாட்ஸ்ஆப் லிங்க் மோசடி!
ஓட்டுநர் உரிமங்கள், வாகனப் பதிவுகள் உள்ளிட்ட சேவைகள், போக்குவரத்து விதிமீறல் கட்டணங்கள் செலுத்துவது உள்ளிட்டவற்றுக்காக 'எம்-பரிவாஹன்'(mParivahan) செயலி பயன்படுத்தப்படுகிறது. சமீபமாக இந்த செயலியின் மூலமாக பண மோசடி நடைபெற்று நாள்தோறும் வழக்குகள் பதிவாகி வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சமீபத்தில் 'எம்-பரிவாஹன்' செயலியின் பெயரில் அனுப்பப்பட்ட போலி வாட்ஸ்ஆப் லிங்க்கை கிளிக் செய்த முதியவரின் கணக்கில் இருந்து ரூ. 10.54 லட்சம் எடுக்கப்பட்டுள்ளது.
கொச்சி எடப்பள்ளியைச் சேர்ந்த 74 வயது முதியவருக்கு எம்-பரிவாஹன் என்ற வாட்ஸ்ஆப் கணக்கிலிருந்து ஒரு லிங்க் வந்துள்ளது. இது மோட்டார் வாகனத் துறையிலிருந்து வந்த குறுஞ்செய்தி என்று நினைத்து அவர் அதைக் கிளிக் செய்தார். அடுத்த சில நிமிடங்களில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் மூலம் அவர் ரூ.10.5 லட்சத்தை இழந்தார்.
வங்கியில் உள்ள பணம் மட்டுமின்றி அவரின் கிரெடிட் கார்டை பயன்படுத்தியும் ரூ. 1.5 லட்சம் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். கடந்த செப்டம்பர் 10 அன்று ஒரே நாளில் ரூ.10,54,999 தொகையை முதியவர் இழந்துள்ளார்.
உடனே அவர் 1930 மூலம் சைபர் குற்றப்பிரிவுக்கு தகவல் அளித்தததன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
சம்பந்தப்பட்ட வங்கியிடமிருந்து பரிவர்த்தனை விவரங்கள் கோரப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
எம்-பரிவஹான் செயலி மூலமாக இணையவழி மோசடிகள் ஒவ்வொரு பகுதியிலும் நாள்தோறும் பதிவாகி வருவதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.
பரிவாஹன் செயலி மூலமாக மட்டுமல்ல, கடன் தருவதாகவோ முதலீடு செய்ய வலியுறுத்தியோ நன்கொடை கேட்டோ அல்லது ஆஃபர்கள் என்றோ apk கோப்புகள் வருகின்றன.
இந்த லிங்க்கை கிளிக் செய்யும்போது ஒரு ஏபிகே கோப்பு, உங்கள் போனில் பதிவிறக்கம் ஆகிறது, உடனடியாக உங்களுடைய போன், மோசடி கும்பலின் கட்டுப்பாட்டுக்குச் செல்கிறது. உடனடியாக உங்களின் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தைத் திருடுகிறார்கள்.
இணைய மோசடிகள், அதிலும் குறிப்பாக இப்போது மொபைல்போனை குறிவைத்து ஆன்லைன் பண மோசடி அதிகமாகவே நடந்து வருகிறது.
வங்கி பெயரில் போலி வாட்ஸ்ஆப் லிங்க்!
மங்களூருவைச் சேர்ந்த ஒருவருக்கு அவரது வங்கிக்கணக்கு உள்ள கனரா வங்கியில் இருந்து ஒரு லிங்க் வந்துள்ளது. 'கேஒய்சி விவரங்களைச் சரிபார்க்க வேண்டும், இல்லையெனில் கணக்கு முடக்கப்பட்டு விடும்' என்ற செய்தியுடன் வந்துள்ளது. அவரும் அதை கிளிக் செய்யவே அவருக்கு போன் அழைப்பு வந்துள்ளது, வங்கி அதிகாரி என்று கூறி கேஒய்சி சரிபார்ப்புக்கு ஓடிபி கேட்டுள்ளார். அவரும் ஓடிபி கொடுக்க, அவரது வங்கிக்கணக்கில் இருந்து ரூ. 6.6 லட்சம் போனது. அதன்பின்னரே மோசடி என தெரிய வந்துள்ளது.
இதுபோல வழிகளில் ஏபிகே கோப்புகள் மூலமாக பண மோசடி நடைபெறுகிறது.
கவனம் தேவை!!
போக்குவரத்துத் துறையின் 'பரிவாஹன்' செயலி பெயரில் வரும் போலி லிங்க்குகள், ஏபிகே கோப்புக்ளை திறக்க வேண்டாம் என்று போக்குவரத்துத் துறை எச்சரித்து வருகிறது.
எப்போதும் அதிகாரப்பூர்வ இ-செல்லான்(e-Challan), பரிவாஹன் இணையதளம் echallan.parivahan.gov.in -ல் மட்டுமே பார்க்க வேண்டும்.
போக்குவரத்துத் துறையின் குறுஞ்செய்திகள் "VAAHAN-G" என்பதுடன் முடிவடையும். இதில் G என்பது அரசு என்பதனைக் குறிக்கும்.
அதேபோல வங்கிகளில் இருந்து செய்திகள் வந்தால் உடனடியாக வங்கி தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டோ நேரில் சென்றோ விசாரித்து பின்னர் செய்வது நல்லது.
இதேபோல வேறு ஏதேனும் லிங்க்குகள் வந்தாலும் அது அதிகாரபூர்வமானதுதானா என ஒருமுறை சரிபார்த்து கிளிக் செய்வது நல்லது.
இணையவழி குற்ற புகார்களுக்கு 1930 எண்ணை அழையுங்கள் அல்லது www.cybercrime.gov.in -ல் பதிவு செய்யுங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.