

உணவு டெலிவரி செய்யும் செயலிகள் மூலம் மோசடி நடப்பதாக ஏற்கனவே செய்திகளில் பார்த்திருப்போம். இதில் சிக்கவிருந்த சமூக ஊடகவியலாளர் ஒருவர், தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஒரு பெண், ஸ்விக்கியில் பீட்சா ஆர்டர் செய்திருக்கிறார். சற்று நேரத்தில் ஒருவர் போனில் அழைத்திருக்கிறார். அதில், அவர் டெலிவரி ஏஜென்ட் என்றும், உணவகம் செல்லும்போது விபத்தில் சிக்கியதாகவும், உணவகத்திலிருந்து உணவு கொண்டு வர வழி செய்துவிட்டதாகவும் கூறியிருக்கிறார்.
இதையடுத்து, உணவகத்துக்கு அந்த பெண் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். அதில், அப்படியொரு சேவை இல்லை என்றும், இதில் ஏதோ மோசடி இருக்கிறது என்றும் உணவகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. உணவு ஆர்டர் செய்ததை ரத்து செய்யுமாறு உணவகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அவரும் அவ்வாறு செய்ய பணம் திரும்ப வந்துவிட்டது.
சற்று நேரத்தில் அவரது வீட்டில் அழைப்பு மணி ஒலித்துள்ளது. திறந்து பார்த்தால் உணவு டெலிவரி செய்பவர் உணவுடன் நின்றிருக்கிறார். இதற்கான தொகையை நேரடியாக க்யூஆர் கோடு மூலம் செலுத்தலாம் என ஒரு க்யூஆர் கோடினை நீட்டியிருக்கிறார். சாதாரண நபராக இருந்திருந்தால் பணத்தை செலுத்த முனைந்திருப்பார். ஆனால் அந்தப் பெண் அவ்வாறு செய்யாமல் உணவு வந்த உணவகத்துக்கு மீண்டும் பேசியிருக்கிறார். உணவகம் தரப்பில், எந்த பணமும் க்யூஆர் கோடு மூலம் செலுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
அவரும், நேரடியாக உணவகத்துக்கு செலுத்தி விடுவதாகக் கூறி டெலிவரி ஏஜென்டை அனுப்பியிருக்கிறார். ஒரு வழியாக மிகப்பெரிய மோசடியிலிருந்து தான் தப்பியதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
டெலிவரி ஏஜென்டுக்கு நான் பணம் செலுத்தியிருந்தால், அது உணவகத்துக்கோ செயலிக்கோ செல்லாது. ஒரு சாப்பாடுக்கான பணம்தான் என்றாலும் அது செயலி மீதான நம்பிக்கை, வருவாய் மீதான தாக்குதலாகவே இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுபோன்ற சம்பவங்கள் ஒன்றல்ல இரண்டல்ல நாள்தோறும் மோசடியாளர்களால் அரங்கேற்றப்படுகிறது. இதில் பணம் செலுத்தப்படுகிறது. ஆனால் அது உணவகத்துக்கு செல்லாது. மேலும் இவ்வாறு பணம் கொடுத்து உணவு வாங்கும்போது, அந்த உணவின் தரத்திலும் குறைபாடு இருக்கும் அபாயம் உள்ளதாகவும் மக்கள் அச்சம் கொள்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.