

மகாராஷ்டிர மாநிலத்தில் தற்கொலை செய்து கொண்ட 29 வயது மருத்துவரை இரண்டு பேர் பாலியல் வன்கொடுமை செய்து துன்புறுத்தி வந்ததாகவும் அதில் ஒருவர் காவல் ஆய்வாளர் என்றும் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் சதாரா மாவட்டத்தில் மருத்துவராகப் பணியாற்றி வந்த 29 வயது பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொண்டார். அவரை காவல்துறை ஆய்வாளர் ஒருவர் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தி வந்ததாகவும், அவரது வீட்டு உரிமையாளரின் மகனும் கடந்த 4 முதல் 5 மாதங்களாக துன்புறுத்தி வந்த நிலையில், தற்கொலை நிகழ்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
அக்.23ஆம் தேதி விடுதி அறையில் தூக்கிட்ட நிலையில் மருத்துவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவரது உள்ளங்கையில் மராத்தியில் தற்கொலைக் குறிப்பு ஒன்றும் எழுதப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, பால்டான் நகர காவல்நிலைய ஆய்வாளர் கோபால் படானே என்பவர் தன்னை நான்கு முறை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கும் காவல் ஆய்வாளரும், மருத்துவரும் உறவினர்கள் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும், பிரசாந்த் பங்கர் என்ற நபராலும் தான் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மருத்துவரின் உடல், உடல் கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாகியிருக்கும் இருவரையும் தேடும் பணி நடந்து வருகிறது.
அரசு மருத்துவமனை மருத்துவர் என்பதால், கைது செய்யப்படும் நபர்களுக்கு பொய்யான தகுதிச் சான்றிதழ் கொடுக்க மருத்துவர் வற்புறுத்தப்பட்டதாகவும், தவறான உடல்கூராய்வு முடிவுகள் சமர்ப்பிக்கவும் வலியுறுத்தப்பட்டதாகவும், நோயாளிகளை அழைத்து வராமலேயே அவர்களுக்கான உடல் தகுதிச் சான்றிதழ்களை காவல்துறை கேட்டதாகவும் பலியான மருத்துவரின் உறவினர்கள் குற்றம்சாட்டியிருக்கிறார்கள்.
இது குறித்தும் தற்கொலை செய்துகொண்ட மருத்துவர் ஏற்கனவே காவல்நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க.. உருவாகிறது மொந்தா புயல்! சென்னைக்கு மழை இருக்குமா? உண்மை என்ன?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.