

சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது ஆந்திரத்தில் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் சென்னைக்கு மழை கிடைக்குமா என்பது பற்றி பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேன் என அறியப்படும் பிரதீப் ஜான், புயல் சின்னம் குறித்து தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
1. கரையைக் கடப்பது - 99.9 சதவீதம் புயல் ஆந்திரம் அருகே கரையை கடக்கும்.
2. புயலுக்கு பெயர் - ஆமாம், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிச்சயம் புயலாக மாறும். எனவே, புயலுக்கான பட்டியலில் உள்ள பெயர் சூட்டப்படும். இது புயலாக மாறினால் மொந்தா என்று பெயரிடப்படும்.
3. ஒருவேளை, வட தமிழகத்திற்கு அருகில் வராமல், கடல் பரப்பிலிருந்தே, புயல் சின்னம் ஆந்திராவுக்குச் சென்றவிட்டால், சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் கனமழையைத் தவறவிடும். அது மட்டுமல்ல, வட தமிழக கடற்கரைக்கு அருகில்கூட வராமல் திறந்த கடல் பரப்பிலேயே ஆந்திரம் நோக்கி திசைதிருப்பினால் சாதாரண மழையை மட்டுமே சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் பெறும்.
4. இரண்டாவது, வட தமிழக கடற்கரைக்கு அருகில் வந்து ஆந்திரத்துக்கு வளைந்து செல்வதாக இருந்தால் - புயல் சின்னம் ஆந்திரத்துக்கு திரும்புவதற்கு முன்பு வட தமிழக கடற்கரைக்கு அருகில் வந்தால், சென்னை மற்றும் அதன் சுற்றவட்டார மாவட்டங்கள் மட்டும் பலத்த மழை பெறும்.
5. இந்த இரண்டில் எது நடக்கப் போகிறது - இவ்விரண்டில் எது நடக்கும் என்பது ஞாயிற்றுக்கிழமை தெரியவரும். ஒன்று, சென்னை மழையை இழக்குமா அல்லது, புயல் சின்னம் காரணமாக நல்ல மழைப் பொழிவை பெறுவோமா என்பது நாளை தெரியும்.
6. தமிழகத்தில் இது தவிர வேறு எந்த மாவட்டத்துக்கும் மழை கிடைக்காது. புயல் ஆந்திரம் செல்வதால், வேறு மாவட்டங்களுக்கு மழை இருக்காது. கேரளம் மற்றும் கன்னியாகுமரி மற்றும் நீலகிரியில் ஒருவேளை மழை பெய்யலாம்.
7. கண்காணிக்க வேண்டிய நாள்களாக அக். 27 மற்றும் 28 உள்ளன.
8. ஆந்திரத்துக்கு புயல் சின்னம் சென்றுவிட்டால், தமிழகத்துக்கு அடுத்த புயல் உருவாக இடைவெளி இருக்கும். நவம்பர் முதல் வாரம் நிச்சயம் மந்தமாகவே இருக்கும். மழை இருந்தாலும் கூட மந்தநிலையே இருக்கும்.
9. வட தமிழகம் மற்றும் ஆந்திர கடற்கரையோர மீனவர்கள் 25 முதல் 28 வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
10. இன்று கன்னியாகுமரிக்கு மழை வாய்ப்பு உண்டு. மேற்கிலிருந்த வரும் காற்றினால் நெல்லை, தென்காசி, தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், வால்பாறை, நீலகிரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார் தமிழ்நாடு வெதர்மேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.