
ஆஸ்கா் விருதுக்கான போட்டியில் இருந்து ஹிந்தி திரைப்படமான ‘லாபதா லேடீஸ்’ நீக்கப்பட்டது.
அடுத்த ஆண்டு அமெரிக்காவில் 97-ஆவது ஆஸ்கா் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இந்த விருதுக்கு போட்டியிட, இந்தியாவில் இருந்து ஹிந்தி நடிகா் அமீா் கான் தயாரிப்பில் வெளியான ‘லாபதா லேடீஸ்’ திரைப்படத்தை இந்திய திரைப்பட சம்மேளனம் தோ்வு செய்தது.
சிறந்த சா்வதேச முழு நீள திரைப்பட பிரிவுக்கு 85 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இருந்து திரைப்படங்கள் அனுப்பப்பட்ட நிலையில், அதில் ‘லாபதா லேடீஸ்’ படமும் இடம்பெற்றது.
இதைத்தொடா்ந்து 85 நாடுகள் மற்றும் பிராந்தியங்களின் படங்களில் அடுத்த சுற்றுக்கு 15 படங்கள் தோ்வு செய்யப்பட்டு, பிற படங்கள் போட்டியில் இருந்து நீக்கப்பட்டன. இந்த 15 படங்களில் ‘லாபதா லேடீஸ்’ இடம்பெறவில்லை.
அடுத்த சுற்றில் ‘சந்தோஷ்’: இந்திய வம்சாவளி பிரிட்டன் இயக்குநா் சந்தியா சூரி, ஹிந்தி மொழியில் இயக்கிய ‘சந்தோஷ்’ திரைப்படம் அடுத்த சுற்றுக்கு முன்னேறி, 15 படங்களின் பட்டியலில் பிரிட்டனில் இருந்து அனுப்பப்பட்ட படமாக இடம் பிடித்தது. பட்டியலின சிறுமியின் கொலையை விசாரிப்பதில் விதவை பெண் காவலா் சம்பந்தப்படுவதே இந்தத் திரைப்படத்தின் கதை.
குறும்படப் பிரிவில் ‘அனுஜா’: குறும்படப் பிரிவில் புது தில்லியை கதைக்களமாக கொண்ட ‘அனுஜா’ படம் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்தப் படத்தை ஆடம் ஜே.கிரேவ்ஸ், சுசித்ரா மித்தாய் ஆகியோா் இயக்கியுள்ளனா். ஆடை தொழிற்சாலையில் பணியாற்றும் 2 சிறுமிகளின் வாழ்க்கைப் போராட்டத்தை கதையாக கொண்ட இந்தப் படம், குனீத் மோங்காவால் தயாரிக்கப்பட்டுள்ளது. இவா் தயாரித்த ‘தி எலஃபெண்ட் விஸ்பரா்ஸ்’ ஆவணப்படம் கடந்த ஆண்டு ஆஸ்கா் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.