

என் பெயரை அழைப்பிதழில் போடும்போது சிலர் என் இன்ஷியலைத் தவறாக எழுதுகிறார்கள். என் தந்தை பெயர் சுப்பையா சேர்வை. வங்கிக் கணக்கில் தான் எஸ். முத்துலிங்கம் என்று என் இன்ஷியல் எழுத்து இடம் பெறும். அதிலும் முத்துலிங்கம் என்று தமிழில் இப்போது கையெழுத்துப் போடுவதால் நான் "எஸ்' என்ற இன்ஷியல் எழுத்தைப் போடுவதே இல்லை.
கவிதை, கட்டுரை என்று எது எழுதினாலும் சினிமாப் பாடலென்றாலும் என் பெயர் கவிஞர் முத்துலிங்கம் என்றுதான் எழுதப் பெறும். அல்லது முத்துலிங்கம் என்று மட்டுமே போடப்படும். ஆனால் பலர் என் இன்ஷியலைத் தவறாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி அரசுத் துறையின் சார்பில் நடைபெற்ற விழாவுக்கு என்னை அழைத்தார்கள். நானும் வருவதாக இசைவு தந்தேன். ஆனால் அழைப்பிதழில் மேனாள் அரசவைக் கவிஞர் ஆ. முத்துலிங்கம் என்று தவறாகப் போடப்பட்டிருந்தது.
இதுவரை அரசின் சார்பில் நடந்த விழாக்களாகட்டும், வேறு துறையின் சார்பில் நடந்த விழாக்களாகட்டும் எல்லாவற்றிலும் கவிஞர் முத்துலிங்கம் என்று தான் அல்லது மேனாள் அரசவைக் கவிஞர் முத்துலிங்கம் என்றுதான் குறிப்பிடுவார்கள். இன்ஷியலே போடுவதில்லை. ஆனால் ஏனோ தெரியவில்லை இந்த விழாவில் அவர்களாகவே ஒரு இன்ஷியலை எனக்குப் போட்டு விட்டார்கள்.
இலங்கையைச் சேர்ந்த கனடாவில் வாழக் கூடிய எழுத்தாளர் அ. முத்துலிங்கம் என்று ஒருவர் உண்டு. அவர் ஆனந்த விகடன், குமுதம், இந்து போன்ற பத்திரிகைகளில் எல்லாம் எழுதுவார். அதுவும் கதைதான் எழுதுவாரே தவிர கவிதையோ, இலக்கியக் கட்டுரைகளோ எழுதுவதில்லை. அதிலும் சினிமாவுக்கும் அவருக்கும் தொடர்பே இல்லை.
என்னை அந்த அ.முத்துலிங்கம் என்று தமிழ் வளர்ச்சித் துறையைச் சேர்ந்த சிலர் தவறாகக் கருதிக் கொண்டு விட்டார்களோ என்னவோ தெரியவில்லை. அதனால் தான் இந்தத் தவறு நடந்திருக்கிறது என்று நினைக்கிறேன். இந்தத் தவற்றைச் செய்த துறையைச் சேர்ந்தவர்களிடம் இதுபற்றி விளக்கி இனிமேல் இந்தத் தவறு நிகழாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று அந்தத் துறை அதிகாரியிடம் சொல்லியிருக்கிறேன்.
இயக்குநர் சிம்பு தேவன் இயக்கிய படங்களில் "அறை எண் 305-இல் கடவுள்' என்ற படமும் ஒன்று. பிரகாஷ்ராஜ் கதாநாயகனாக நடித்த படம். படத்திற்கு இசை வித்யாசாகர்.
""ராஜாஜி எழுதிய "குறையொன்றுமில்லை மறை மூர்த்திகண்ணா குறையொன்றுமில்லை கோவிந்தா' என்ற பல்லவியை அப்படியே வைத்துக் கொண்டு சரணத்தை மட்டும் எழுதுங்கள்'' என்று சிம்புதேவன் என்னிடம் கேட்டுக் கொண்டார். பாடல் எழுத வேண்டிய காட்சியையும் விளக்கினார். வித்யாசாகர் டியூனை வாசித்துக் காட்டினார். அந்தக் காட்சிக்கு ஏற்ப,
"எல்லோர்க்கும் சில நேரம் வரும் சோதனை
இருந்தாலும் கூடாது மன வேதனை
வெற்றி தோல்வி யாவும் - நம்
வாழ்க்கைப் பாடமே
தோல்வி காட்டும் ஞானம் - புது
வேதம் ஆகுமே
எதுவந்த போதும் அதை ஏற்றுக் கொள்வாய்
இருள் கூட ஒளிவீசும் துணிந்தே செல்வாய்
எதற்கும் ஓர் நாள் உண்டு எல்லார்க்கும் வாழ்வுண்டு'
என்று ஒரு சரணமும்
"கீழ் நோக்கிப் பிடித்தாலும் மேல் நோக்கியே
எரிகின்ற சுடர் போல எழ வேண்டுமே
மண்ணில் மூடினாலும் - விதை
மாய்ந்து போகுமா - வலை
விண்ணில் வீசினாலும் - வான்
மீன்கள் வீழுமா
உழைப்போர்க்கு இங்கே இழப்பேதும் இல்லை
இழந்தாலும் அதை மீண்டும் பெறுவார் கண்ணா
தளராது முயல்வோரே வரலாறு படைப்பாரே'
-என்று இன்னொரு சரணமும் எழுதினேன். பாடலும் ஓரளவு பிரபலமான பாடல் தான்.
ஒருநாள் பாடல் ஒலிப்பதிவு முடிந்து வீட்டிற்குச் செல்லும் போது "அறை என் 305-இல் கடவுள்' என்ற படத்தின் விளம்பர பேனரில் பாடல்களுக்குக் கீழே என் பெயரை கவிஞர் அ. முத்துலிங்கம் என்று எழுதியிருந்தார்கள். உடனே சிம்பு தேவனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ""பேனரில் இப்படி இருக்கிறது. நான் பாடல் எழுதும்போது என் பெயருக்கு முன்னே இன்ஷியலே போடுவதில்லை. கவிஞர் முத்துலிங்கம் என்றுதான் எழுதுவேன். நான் எழுதாத இன்ஷியலை அதுவும் நீங்கள் தவறாக எழுதியிருக்கிறீர்கள். அதை மாற்றுங்கள்'' என்று சொல்லி என் அப்பா பெயர் என்ன என்பதையெல்லாம் விளக்கமாகச் சொன்னேன். அன்று இரவே "அ' என்ற இன்ஷியல் எழுத்தை அழித்து விட்டார்கள். மறுநாள் சிம்பு தேவனுக்கு நன்றி சொன்னேன்.
அதுபோல் "பொன்மேகலை' என்றொரு படம். இளையராஜா இசையில் இரண்டு பாடல்கள் அதில் எழுதினேன். அதில்
"ஆடும் பதம்தொழ அமுத சுரம் தொடுத்தேன்
ஆனந்தக் கூத்தாடும் அரும் பொருளே'
என்ற பாடலை சுதா ரகுநாதனும்
"வீணா வாணி நாத ரூபிணி வித்யாதரி
வேதங்கள் விளம்பிடாத வேதாந்த மதிவதனி'
- என்ற பாடலை கல்பனாவும் பாடியிருப்பார்கள்.
இந்தப் படத்தின் பாடல் ஒலி நாடாவிலும், குறுந்தகட்டிலும் என் பெயரை கவிஞர் நா. முத்துலிங்கம் என்று தவறாகப் போட்டுவிட்டார்கள். அந்தப் படத்தின் தயாரிப்பாளர்தான் அந்தப் படத்தின் டைரக்டர். அதனால் அவரிடம் இதை மாற்றுங்கள் என்றேன். கேùஸட் வெளிவந்து விட்டது. இனி மாற்ற முடியாது மன்னித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார்.
ஒருவர் என்னிடம் கேட்டார். முத்துலிங்கம் என்ற உங்கள் பெயர் சினிமாவில் எல்லாருக்கும் தெரியும். நா. முத்துலிங்கம் என்று ஒரு கவிஞர் இருக்கிறாரா என்று கேட்டார். இல்லை இல்லை, நான்தான் முத்துலிங்கம். நா. முத்துலிங்கம் என்று யாருமில்லை ஏன் கேட்கிறீர்கள்? என்றேன்.
"பொன்மேகலை' படத்தில் நீங்கள் எழுதிய பாடல் ஒன்றைச் சொல்லும் போது வானொலியில் நா. முத்துலிங்கம் என்று சொன்னார்கள். அதனால் தான் கேட்டேன் என்றார் நா. முத்துக்குமார் ஞாபகத்தில் போட்டுவிட்டார்களோ என்னவோ தெரியவில்லை என்றேன்.
ஒருமுறை வானொலிப் பேட்டியில் கூட இதைக் குறிப்பிட்டு இனிமேல் இன்ஷியல் சொல்லாமல் இந்தப் பாட்டில் முத்துலிங்கம் என்றோ கவிஞர் முத்துலிங்கம் என்றோ சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டேன். அவர்களும் சரி என்றார்கள். இப்போது எப்படிச் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை.
இதைப் போல் சங்கர்கணேஷ் இசையில் ஐயப்பன் பற்றிய ஒரு படத்திற்குப் பாட்டெழுதும் போது பாட்டெழுதி முடித்ததும் இயற்றியவர் முத்துலிங்கம் என்று கையெழுத்துப் போட்டுக் கொடுத்தேன். அதைக் காப்பி எடுத்தவர் இவர் என்ன எப்போது பார்த்தாலும் இன்ஷியல் போடாமல் எழுதுகிறார் என்று சொல்லிவிட்டு இ. முத்துலிங்கம் என்று அவர் ஒரு இன்ஷியலைப் போட்டு எழுதியிருந்தார்.
நான் அந்தப் பாட்டுக் காப்பியை வாங்கிப் பார்த்து, ""ஏய்யா நான், முத்துலிங்கம் என்றுதானே கையொப்பமிட்டிருக்கிறேன். அதுமாதிரி எழுதாமல் நீயாக "இ' என்ற ஒரு இன்ஷியலை ஏனய்யா சேர்த்து எழுதினாய்?'' எனக் கோபமாகக் கேட்டேன். அவன் கொஞ்சம் பயந்து நின்றான். அப்புறம் அவனிடம் ""இ.முத்துராமலிங்கம் என்றொரு கவிஞர் இருந்தாரய்யா. அவருக்கும் சினிமாவுக்கும் சம்பந்தமில்லை. அவர் அரசியலில் மட்டுமே இருந்தார். அவரும் எங்கள் கட்சியைச் சார்ந்தவர் தான். இப்போது அவர் மறைந்து விட்டார். அதனால் எதையும் சரியாகத் தெரிந்து கொண்டு எழுது'' என்றேன்.
"எல்லார்க்கும் சிலநேரம் வரும்சோதனை
இருந்தாலும் கூடாது மனவேதனை'
என்ற "அறை எண். 305-இல் கடவுள்' என்ற படத்தில் நான் எழுதிய பாடல் எனக்கும் இப்போது பொருந்துவதாக அமைந்துவிட்டது.
அண்மையில் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமனுக்கு வேண்டிய ஒருவருடைய திருமணம் ஆரணியில் நடைபெற்றது. வா.மு. சேதுராமன் மகன் பேராசிரியர் வா.மு.சே. ஆண்டவர்தான் என்னை அந்த விழாவுக்கு அழைத்தார். நானும் வருவதாக ஒப்புக் கொண்டேன். ஆனால் அழைப்பிதழைப் பார்த்த பிறகு நான் போகவில்லை. காரணம் என் பெயரை மேனாள் அரசவைக் கவிஞர் மா. முத்துலிங்கம் என்று அவர்கள் ஒரு இன்ஷியலை போட்டிருந்தார்கள்.
தங்கள் விருப்பத்திற்கேற்ப அவரவர்கள் என் அப்பா பெயரை மாற்றி விடுகிறார்கள். பெயரைப் போடுவதற்கு முன்னால் கேட்க வேண்டாமா எப்படிப் போட வேண்டுமென்று? என் அப்பா பெயர் என்ன என்ற சந்தேகத்தை எனக்கே ஏற்படுத்துவது போலல்லவா இருக்கிறது. இவர்கள் போடுகின்ற இன்ஷியல்!
இலக்கியவாதிகள் அதிகம் விரும்பிப் படிக்கின்ற பத்திரிகையான "தினமணி' இதழில் இது வெளிவந்தாலாவது நான்கு பேருக்கு என்னைப் பற்றிய இந்தச் செய்தி நன்கு தெரியவருமே என்பதற்காகத்தான் இதைக் குறிப்பிடு
கிறேன். வேறொன்றுமல்ல.
சில பாடலாசிரியர்கள் குறைந்த அளவே பாடல் எழுதியிருந்தாலும் ஒரே பாட்டின் மூலம் பிரபலமான கவிஞர்களாகவும் ஆகியிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் பரிணாமன். இவர் கலை இலக்கியப் பெருமன்ற முற்போக்கு இலக்கிய மேடைகளில் பேசி வருபவர். பாடி வருபவர். இவர் மூலம்தான் எழுத்தாளர் ஜெயகாந்தன் எனக்கு நெருங்கிய பழக்கமுள்ளவராக ஆனார். வாரத்தில் ஒரு நாள் ஜெயகாந்தன் வீட்டில் நாங்கள் சந்திப்போம். இருபது ஆண்டுகள் தொடர்ந்து இந்தச் சந்திப்பு நடந்தது ஜெயகாந்தன் மறைகின்ற காலம்வரை.
பரிணாமன் எழுதிய பாடல்களில், சக்தி சிதம்பரம் இயக்கிய "வியாபாரி' என்ற படத்தில் இடம்பெற்ற பாடல் மிகவும் பிரபலமானது. நடிகர் எஸ்.ஜே. சூர்யா நடித்தபடம்.
"ஆசைப்பட்ட எல்லாத்தையும்
காசிருந்தா வாங்கலாம்
அம்மாவை வாங்கமுடியுமா - நீயும்
அம்மாவை வாங்க முடியுமா
ஆயிரம் உறவு உன்னைத் தேடி வந்தே நின்னாலும்
தாய்போலத் தாங்க முடியுமா?
உன்னையும் என்னையும் படைத்ததிங்கே யாரடா - தெய்வம்
ஒவ்வொரு வீட்டிலும் இருக்குதின்னா தாயடா'
இந்தப் பாடல் ஒன்றே போதும் பரிணாமன் பெயரைச் சொல்வதற்கு. இது சினிமாவுக்காக எழுதிய பாடலல்ல. மேடைகளில் அவர் பாடிய பாடல். சினிமாவுக்காக சில வார்த்தைகளை மாற்றி எழுதினார்.
நன்றாகப் பாடக் கூடியவர். அவர் எழுதிய கவிதைகள் "பரிணாமன் கவிதைகள்' என்ற பெயரில் நூல் வடிவில் வெளிவந்திருக்கிறது. அதில் எல்லாக் கவிதைகளும் சிறந்த கவிதைகள்தான் என்றாலும் மாண்புகளின் கார் வருகுதாம்" என்ற தலைப்பில் அமைந்த கவிதை பலரது பாராட்டுக்கும் உரிய கவிதையாக விளங்குகின்றது.
(இன்னும் தவழும்)
படங்கள் உதவி: ஞானம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.