விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

மாற்றம்: மாற்று இயக்கமாகச் சிறுபதிப்பகம்!

இன்று தன்னுடைய நூலைப் பதிப்பிக்க விரும்பும் நவீன அல்லது சிற்றிதழ் சார்ந்த படைப்பாளிக்கு நெருக்கடிகள் ஏதும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் நவீன இலக்கிய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அவர் தனது நூல்கள

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 8:09 am

மயில் வாகனன்

ன்று தன்னுடைய நூலைப் பதிப்பிக்க விரும்பும் நவீன அல்லது சிற்றிதழ் சார்ந்த படைப்பாளிக்கு நெருக்கடிகள் ஏதும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் நவீன இலக்கிய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அவர் தனது நூல்களை வெளியிடுவது தொடர்பாக அனுகூலமான நிலையினையே கொண்டிருக்கிறார்.  ஒரு பதிப்பாளர் ஆறுமாதம் ஒரு நூல் பிரதியினைக் கையில் வைத்துக் கொண்டிருந்தால் சம்பந்தப்பட்ட எழுத்தாளர் உடனடியாக அதை இன்னொரு பதிப்பகத்திடம் கொடுக்க முயல்கிறார். 10 ஆண்டுகளுக்கு முன்புவரை இத்தகைய ஒரு சூழலை ஒரு நவீன எழுத்தாளர் கற்பனை செய்து பார்க்க முடிந்திருக்காது.

வெகுசன தேவைகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய பத்திரிகைகளைப் போலவே தமிழின் முன்னணி பதிப்பகங்களும் நவீன இலக்கியம் சார்ந்த அறியாமையையே 90 களின் இறுதிவரை கொண்டிருந்தன. வர்த்தக நோக்கங்களை மட்டுமே பிரதானமாகக் கொண்டு உருவான தொழில்முறை பதிப்பாளர்கள் வெகுசன இதழ்கள் சார்ந்த எழுத்தாளர்கள் மற்றும் பொதுவான பயன்பாடுசார்ந்த நூல்கள் மேல் காட்டிய ஆர்வத்தைச் சிந்தனை மற்றும் இலக்கியம் சார்ந்த துறைகளில் காட்டவில்லை.

தமிழில் சிற்றிதழ் இயக்கம் எவ்வாறு மைய நீரோட்டத்திற்கு எதிரான ஒரு எதிர்க்குரலாக வெளிப்பட்டதோ அதேபோல நவீன இலக்கியம் சார்ந்த நூல் வெளியீட்டு முயற்சிகளும் ஒரு மாற்று இயக்கமாகச் செயல்பட்டு வந்திருக்கின்றன. இந்த மாற்று இயக்கம் சித்தாந்த தளத்தில் சிற்றிதழ்கள் - நவீன படைப்பாளிகளாலும் முன்னெடுக்கப்பட்டன.

தமிழின் முக்கியமான படைப்பாளிகள் பெரும்பாலானோர் சிறுபத்திரிகை இயக்கம் சார்ந்த நண்பர்களின் உதவியால் தமது நூல்களை பதிப்பித்தனர். அல்லது தாமே சொந்தமாக வெளியிட்டு விற்பனை செய்தனர். பெரும்பாலும் திரும்பி வராத பணமாக முதலீடு செய்யப்பட்டு உருவாக்கப்பட்ட சிற்றிதழ் சார்ந்த பதிப்பு முயற்சிகளின் வழியாகவே இன்று நவீன தமிழ் இலக்கியத்தின் பெரும்பாலான முன்னோடிகளது நூல்களின் முதல் பதிப்புகள் வெளிவந்திருக்கின்றன.

அவை முதலீடு மற்றும் வினியோகக் கட்டமைப்புகளோ சந்தை வாய்ப்புகளோ அற்ற நிலையில் தம்முடைய பதிப்பு சார்ந்த முயற்சிகளை மேற்கொண்டு வந்திருக்கின்றன. தனது தனிப்பட்ட சேமிப்பு அல்லது நண்பர்களின் கூட்டு முயற்சிகளால் வெளியிடப்பட்டு உள்வட்டத்தில் விநியோகிக்கப்பட்ட இந்த வெளியீட்டு முயற்சிகள் பொருளாதார நெருக்கடிகளால் சிற்றிதழ்கள் தமிழில் அடையும் அதே நிலையினையே இறுதியில் அடைந்தன.

பல எழுத்தாளர்கள் தமது நூல்களைப் பதிப்பிப்பதற்காக பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதிருந்தது. எனக்குத் தெரிந்து ஒரு பதிப்பகம் ஓர் எழுத்தாளரின் சிறுகதை நூலின் பிரதியை 10 ஆண்டுகள் பதுக்கி வைத்திருந்தது. அந்த நூல் வெளிவந்த போது தமிழ் சிறுகதையின் மொழியே மாறிவிட்டிருந்தது. குறைவான பிரதிகள் அடிக்கப்பட்டு நண்பர்கள் மூலம் விநியோகிக்கப்பட்ட இந்த நூல்கள் உயரிய இலக்கிய மதிப்பைக் கொண்டிருந்த அளவு சந்தை மதிப்பை அடைய முடியவில்லை. அவ்வாறு அடைய முற்பட்ட சிறிய பதிப்பாளர்களைச் சுரண்டினர். அவர்களது நூல்களின் விற்பனைத் தொகையைத் தராமல் இழுத்தடிப்பது, தவறான விற்பனை கணக்குக் காட்டுவது போன்றவற்றால் பல சிறிய பதிப்பகங்கள் அழிக்கப்பட்டன. புத்தகத்தை ஒரு பொருளாகவோ, சந்தையாகவோ கையாலும் மனநிலையும் அதற்கான பொருளியல் ஆதாரமும் இல்லாத சிறிய பதிப்பகங்கள் இவ்வாறு விழுங்கப்படுவது தவிர்க்க இயலாததாகிவிட்டது.

இன்று காலம் மாறிவிட்டது. எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் வேறொரு இடத்தை நோக்கி நகர்ந்துவிட்டனர். பதிப்புத்துறை வெகுவேகமாக விரிவடைந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் புதிய மூலதனத்துடன் புதிய பதிப்பாளர்கள் எழுத்தாளர்களை தேடி அலைகின்றனர். தன்னுடைய முதல் கவிதைத் தொகுப்பை அல்லது நாவலை வெளியிடும் எழுத்தாளருக்குக் கூட சென்னை புத்தகக் கண்காட்சியில் நீங்கள் கட் அவுட்டுகளைப் பார்க்கலாம். வருடக் கணக்கில் பணம் சேர்த்து, பிரஸ்ஸில் உட்கார்ந்திருந்து அச்சுக் கோப்பிலிருந்து பைண்டிங் வரை உடன் இருந்து முதல் பிரதியை மனம் நெகிழப் பார்க்கும் காட்சிகள் இனி இல்லை. ஆனால் இந்தக் காட்சிக்குப் பின்னே இலக்கியத்தை ஒரு வாழ்வியக்கமாகக் கொண்ட ஒரு தலைமுறை இருந்தது. ஒட்டு மொத்த கலாசார மொண்ணைத்தனத்திற்கு எதிராக அந்த தலைமுறை போராடியது. இந்த இயக்கம் உருவாக்கிய உத்வேகமே இன்றைய நவீன இலக்கியம் சார்ந்த பதிப்பு முயற்சிகளுக்கான பாதையாக விரிந்திருக்கிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.