சாதனை: இலக்கிய காந்தி!
பொள்ளாச்சியில் விநாயகர் கலைமன்றம் காந்தியைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. எழுபத்தேழு வயதிலும் மாதம் ஒரு இலக்கிய நிகழ்ச்சியை நடத்துகிறார் இவர். கடந்த 1961-ம் ஆண்டு முதல் விநாயகர் சதுர்த்தி விழ


பொள்ளாச்சியில் விநாயகர் கலைமன்றம் காந்தியைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.
எழுபத்தேழு வயதிலும் மாதம் ஒரு இலக்கிய நிகழ்ச்சியை நடத்துகிறார் இவர்.
கடந்த 1961-ம் ஆண்டு முதல் விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாடி வரும் சந்திரசேகரன், தலையில் குல்லா வைத்திருந்ததால் காந்தி என்று அழைக்கப்பட்டார். காலப் போக்கில் சந்திரசேகரன் என்ற பெயர் மறைந்து, காந்தி என்ற பெயரே நீடித்துவிட்டது.
1964-ல் இருந்து பொள்ளாச்சியில் மாதம் ஒரு கலை- இலக்கிய நிகழ்ச்சி நடத்தலாம் என்று திட்டமிட்டார் காந்தி. பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் முதன் முதலில் வழக்காடு மன்றம் நடத்தப்பட்டது.
இவ் விழா மேடைகளில் ஏறாத கலைஞர்களே இல்லை என்று கூறலாம். கே.பி. சுந்தராம்பாள், எம்.எம். பாலதண்டபாணி தேசிகர், சூலமங்கலம் சகோதரிகள், வீணை சிட்டிபாபு, வீணை பாலச்சந்தர், மதுரை சோமு, குன்னக்குடி வைத்தியநாதன், கே.ஜே.யேசுதாஸ், புலவர் கீரன், கிருபானந்த வாரியார், சுகி சிவம் உள்ளிட்ட பலரும் பொள்ளாச்சியில் மேடையேறியுள்ளனர்.
ஒருவருக்கு ஒருமுறை மட்டும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. ரசிகர்கள் விரும்பிக் கேட்டால் மட்டுமே இரண்டாவது முறையாகக் கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதாகக் கூறும் காந்தி, விநாயகர் கலைமன்றத்தில் மொத்தம் 600 உறுப்பினர்கள் உள்ளதாகக் கூறினார். உறுப்பினர் சந்தா மாதம் ரூ.10 மட்டுமே.
இவரது சேவையைக் கண்ட பொள்ளாச்சி தொழிலதிபர் நா.மகாலிங்கம், என்.ஜி.எம். கல்லூரியில் எழுத்தர் பணியை அளித்தார். கடந்த 1991-ல் பணியில் இருந்து காந்தி ஓய்வு பெற்றார்.
துவக்கத்தில் பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில்தான் இக் கலைமன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. காந்தியின் கலைச் சேவையைப் பாராட்டி இப்போது விநாயகர் கலைமன்ற நிகழ்ச்சிகளுக்கு, நா.மகாலிங்கம் தலைவராக உள்ள மீனாட்சி திருமண மண்டபம் இலவசமாக வழங்கப்படுகிறது. இதுவரை 536 நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
காந்தியின் சேவையைப் பாராட்டி பொள்ளாச்சி காஸ்மாபாலிடன் கிளப் சார்பில் பாராட்டு விழா நடந்தது. பொள்ளாச்சி நகர முக்கியப் பிரமுகர்கள் இணைந்து காந்திக்கு விழா நடத்தினர்.
ஒவ்வொருவருக்கும் அழைப்பிதழ் கொடுக்கவும் சந்தா வசூலிக்கவும் காந்தி எந்த வாகனத்திலும் செல்வதில்லை. நடந்தேதான் செல்கிறார்.
படங்கள் : ஆலயம் ரவி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...