/

சேவை: மன வளர்ச்சி குறைவு... நுண்ணறிவு அதிகம்!

மனவளர்ச்சி குறைபாடு தனிமனித வாழ்க்கையைப் பாதிக்கிறது. ஒரு வீட்டில் மனவளர்ச்சி குன்றிய குழந்தை இருந்தால் அலட்சியப்படுத்தாமல் மற்றவர்களைப் போல அவர்களையும் மதிக்க வேண்டும். விளையாடும் குழந்தைகளை "போதும்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 8:55 am

மனவளர்ச்சி குறைபாடு தனிமனித வாழ்க்கையைப் பாதிக்கிறது. ஒரு வீட்டில் மனவளர்ச்சி குன்றிய குழந்தை இருந்தால் அலட்சியப்படுத்தாமல் மற்றவர்களைப் போல அவர்களையும் மதிக்க வேண்டும்.

விளையாடும் குழந்தைகளை "போதும் விளையாடியது' என நாம் கண்டிப்பதுபோல மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை கண்டித்தால் அவர்களின் முகம் வாடிவிடும்.

அந்த மனப் பாதிப்பிலிருந்து அவர்களை மீட்டுக் கொண்டுவர அதிக நேரமாகும். அவர்களுக்கு நுண்ணறிவு திறன் அதிகம். ஆனால், அதை வெளிக் காண்பிக்க முடியாது.

இத்தகைய குழந்தைகளுக்கு சிவகாசி டாக்டர் எஸ்.பி.ஜெய்சங்கர் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியிலிருந்து 15 ஆம் தேதி வரை இலவச சிகிச்சை அளித்து வருகிறார். மேலும் மாத இறுதியில் ஒரு மருத்துவ முகாம் நடத்தி தேவைப்படும் குழந்தைகளுக்கு காந்த பெல்ட், மருந்து மற்றும் மாத்திரைகளை இலவசமாகக் கொடுத்து வருகிறார்.

இதுகுறித்து டாக்டர் ஜெய்சங்கரிடம் பேசினோம்.

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கத் தூண்டிய சம்பவம் எது?

1982 ஆம் ஆண்டு மதுரை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராகப் பணிபுரிந்தபோது, அங்கு வரும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளைப் பார்த்தபோது, இவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

எப்போது இலவச மருத்துவச் சேவை தொடங்கப்பட்டது?

சிவகாசியில் 1985 ஆம் ஆண்டு தனியே மருத்துவமனை தொடங்கிய பின்னர் மருத்துவமனைக்கு வரும் உடல் ஊனமுற்ற மற்றும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கத் தொடங்கினேன்.

அதைக் கேள்விப்பட்டு சிகிச்சைக்கு வருபவர்கள் அதிகமானதால், 1998 ஆம் ஆண்டு "அழகன் சேவா சங்கம்' என்ற தொண்டு அமைப்பைத் தொடங்கி, ஒவ்வொரு மாதமும் முதல் தேதி முதல் 15 ஆம் தேதி வரை இலவச சிகிச்சை அளித்து வருகிறேன். இதுவரை 137 முகாம்கள் நடத்தியுள்ளேன்.

குழந்தைகளுக்கு எந்த வகையான சிகிச்சை அளிக்கிறீர்கள்?

மின்காந்த சிகிச்சை, அக்குபங்சர் சிகிச்சை, ஊசியில்லா நவீன அக்குஜிங் சிகிச்சை அளிக்கிறேன். மேலும் அழகன் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு பேச்சுப் பயிற்சி, உடற்பயிற்சி, யோகா பயிற்சி ஆகியன அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சை மூலம் இதுவரை சுமார் 300 குழந்தைகள் பயன் அடைந்துள்ளனர்.

6 மாதக் குழந்தை முதல் 16 வயது வரை அவரரவர் நோயின் தன்மைக்கு ஏற்றவாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இரு ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை சிகிச்சை மேற்கொள்ளலாம்.

அழகன் காப்பகத்தில் ஆண்டு விழா, மனநல நாள் என பல விழாக்களில் இந்தக் குழந்தைகளைப் பங்கு பெறச் செய்கிறோம்.

குழந்தைகளின் சிகிச்சைக்கு எனது மனைவி சித்ரா பெரிதும் உதவி செய்கிறார்.

எதிர்காலத் திட்டம் என்ன?

தற்போது அழகன் காப்பகம் சிறப்பு பள்ளி சிறிய அளவில் இயங்கி வருகிறது. இதில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்குக் கணினிப் பயிற்சி, தொழிற் பயிற்சி, மறுவாழ்வுப் பயிற்சி ஆகியன அளிக்கப் போதிய கட்டடம் கட்ட வேண்டும்.

கிராமங்களில் இருந்து சிகிச்சைக்கு அழைத்து வர வேன் வாங்க வேண்டும். குழந்தைகள் தங்கி சிகிச்சையுடன் கல்வி பெற தங்கும் விடுதி வசதி செய்ய வேண்டும்.

இத்தகைய குழந்தைகளின் பெற்றோர்களின் கடமை என்ன?

பெற்றோர்கள் மற்ற குழந்தைகளைப் போல இவர்களையும் பாவிக்க வேண்டும். நேரம் ஒதுக்கி அவர்களுடன் விளையாட வேண்டும். பொது நிகழ்ச்சிகள், திருமண விழாக்கள், கலை நிகழ்ச்சிகள், கோயில் விழாக்கள் என அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் கண்டிப்பாக அழைத்துச் செல்ல வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் அவர்களைத் தாழ்த்திப் பேசக் கூடாது. அவர்கள் செய்யும் சிறு செயல்களையும் ஊக்கப்படுத்த வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.