ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

சேவை: மகிழ்ச்சியின் மறுபக்கம்..!

வாழ்க்கையில் கடும் துன்பங்களைச் சந்திக்கும் வேளையில், குழந்தைகள் மகிழ்ச்சியோடு இருப்பதைப் பார்க்கும்போது மனம் லேசாகும். "குழந்தைகளாகவே இருந்திருந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்' என மனம் ஏங்கும்.

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 9:38 am

வாழ்க்கையில் கடும் துன்பங்களைச் சந்திக்கும் வேளையில், குழந்தைகள் மகிழ்ச்சியோடு இருப்பதைப் பார்க்கும்போது மனம் லேசாகும். "குழந்தைகளாகவே இருந்திருந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்' என மனம் ஏங்கும். ஆனால், அப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இன்பமும், துன்பமும் இவர்களில் பெரிய மாறுதல்களை ஏற்படுத்தாது. புறச் சூழ்நிலைகள் பற்றிய அக்கறை தேவையில்லை. வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களில் பயணிக்க வேண்டிய கட்டாயமும் இல்லை. பசி எடுத்தாலும் சொல்லத் தெரியாது; இயற்கை அழைப்பையும் பொருட்படுத்தாது தாயின் மடியிலேயே பொழுதைக் கழிக்கும் கைக் குழந்தைகளைப் போலவே இறுதி வரை இருந்து, இறந்தும் போகும் படைப்புகளாக "ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்' இவர்கள். இப்படியானவர்களை "மனவளர்ச்சி குன்றியோர்' என இச் சமுதாயம் அழைக்கிறது.

இவர்கள், தங்களது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளவும், தங்களுக்குப் பிறகு உயிர் வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளைக் கற்றுக்கொள்ளவும் பெற்றோர் தேர்ந்தெடுக்கும் வழி, குழந்தைகளுக்குப் பயிற்சி அளிப்பது. தனியார் தொண்டு நிறுவனங்களால் இவ்வாறான பயிற்சி மையங்கள் ஏராளமாக நடத்தப்படுகின்றன.

இங்கு பயிற்சி பெறும் குழந்தைகளோடு ஒரு நாள் பொழுதைப் பகிர்ந்துகொள்ள முடிவு செய்து நாம் சென்ற இடம், வேலூர் மாவட்டம் ஆர்க்காடு நகரில் உள்ள "பெஸ்ட் நியூ லைப் ஷெல்டர்' எனும் மன வளர்ச்சி குன்றியோருக்கான சிறப்புப் பள்ளி. உள்ளே நுழைந்ததும், அனைத்து குழந்தைகளும் எழுந்து நின்று வணக்கத்தோடு வரவேற்றனர்.

மொத்தம் 42 குழந்தைகள். அனைவரின் நிலையும் ஒவ்வொரு விதம். லேசான, நடுநிலை, மிகவும் பாதிக்கப்பட்ட, இறுதி நிலை என 4 நிலையிலான குழந்தைகள் உள்ளனர். இவர்களில் ஒவ்வொரு பிரிவினருக்கும் வெவ்வேறு மாதிரியான கவனிப்புகள் அளிக்கப்படுகின்றன. சிறப்பாசிரியர்களாக, ஊழியர்களாக இங்கு பணியாற்றும் 5 பேரும், இங்கே பயிற்சி பெறும் குழந்தைகளின் அம்மாக்கள்.

இதை நிர்வகிக்கும் கேத்தரின் இன்பராஜனும், தனது 21 வயது குழந்தை பால் பிரசாந்த்-ஐ இங்கேதான் பராமரிக்கிறார். 38 வயது குழந்தை கூட இங்கு உண்டு.

மகனின் மனவளர்ச்சி பாதிக்கப்பட்டதையறிந்து, உங்களுடைய உணர்வு எப்படி இருந்தது?

11 மாதங்கள் வரை நல்ல நிலையில் இருந்த குழந்தை, மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மூளை வளர்ச்சியை இழந்து, இறுதி நிலையை அடைந்தது. உயிரைக் காப்பாற்றியதே பெரும் சிரமமானது. குழந்தையின் மனநிலை பாதிக்கப்பட்டதை அறிந்து மனமுடைந்து போனேன். 10 மாதங்கள் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு, மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்றேன். மனவளர்ச்சி குன்றிய குழந்தையைப் பெற்றெடுக்கும் பெற்றோரின் முதல்கட்ட நிலை இதுவாகத்தான் இருக்கும்.

ஆனாலும், அதிலிருந்து மீண்டு வர கவுன்சலிங் பெற்றேன். குழந்தைக்குப் பயிற்சி அளிக்க முதலில் எனக்குப் பயிற்சி தேவைப்பட்டது. இதனால், சிறப்புப் பள்ளிகளை நிர்வகிக்கும் தகுதியை வளர்த்துக்கொள்ள முடிவு செய்தேன். அதன் மூலமே, எனது குழந்தையைப் பராமரிக்கும் சக்தி கிடைத்தது.

சிறப்புப் பள்ளி தொடங்கியதன் காரணம், அதன் செயல்பாடு?

என் குழந்தையைப் பராமரிக்க வேண்டும் என்பதைவிட, மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளைக் கொண்டிருக்கும் என்னைப் போன்ற பெற்றோருக்கு, எனது பயிற்சியால் உதவ முடியும் என்ற எண்ணம் ஏற்பட்டது. தொடக்கத்தில் கணவர் இன்பராஜனின் உதவியோடு இப்பள்ளி தொடங்கப்பட்டது. 2003-ம் ஆண்டு 12 குழந்தைகள் இருந்தனர். இப்போது எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. நண்பர்களின் உதவியோடு தொடர்ந்து பள்ளியை நிர்வகிக்க முடிகிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் மாதம் ரூ.100 கட்டணமாக வசூலிக்கிறோம்.

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளைப் பராமரிப்பதில் பெற்றோருக்கு உங்களது ஆலோசனை?

இவர்களது பெற்றோருக்கு இன்பம் முற்றிலும் தொலைந்து போகும். தன் தேவை எவற்றையும் நிறைவேற்றத் தெரியாத இந்த சிறப்பு குழந்தைகளை விட்டு, ஒரு நொடிப் பொழுதும் பிரிந்திருக்க முடியாது. குழந்தை இறக்கும் வரை பிறர் உதவி தேவைப்படுகிறது.

மிகவும் மோசமான, இறுதி நிலை குழந்தைகள் நீண்ட காலம் உயிரோடு இருக்க முடியாது. அவர்களுக்குப் பெற்றோரின் அன்பும், அவரணைப்பும் அவசியம் தேவை. மேலும், எளிய பயிற்சிகள், சுத்தமான பராமரிப்பு, சத்தான உணவு அளிப்பதும் மட்டுமே குழந்தைகளின் ஆயுட்காலத்தை நீட்டிக்கச் செய்யும்.

மற்ற இரு நிலையில் உள்ள குழந்தைகளுக்கு ஓரளவு பயிற்சி அளித்து, அவர்களை இயங்கச் செய்ய முடியும். எனவே, துன்பப்படுவதால் மட்டும் குழந்தையை வளர்த்திட முடியாது. அதிலிருந்து மீண்டு, குழந்தையின் மீதான முழு அக்கறையையும் வெளிப்படுத்த வேண்டும்.

பயிற்சிகள் பயனளிக்குமா?

குழந்தைகளின் மனவளர்ச்சி குறைவைச் சரிசெய்ய முடியாது; ஆனால், உடல் ரீதியாக அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளைப் பயிற்சி மூலம் ஓரளவு சரி செய்ய முடியும். அதே நேரம், வீட்டில் வைத்துப் பராமரிப்பதால் மன உளைச்சல் ஏற்படுவதோடு, குழந்தையின் நிலையிலும் எவ்வித மாற்றமும் ஏற்படாது. பயன்படுத்தாத இரும்பு போலவே, குழந்தையின் உடல் நிலையும் பாழாகும்.

சிறப்புப் பள்ளிகளுக்கு அனுப்பப்படும் குழந்தைகளுக்கு, அங்கு அளிக்கப்படும் பயிற்சிகள், மூளை நரம்புகளின் செயல்பாட்டை ஊக்குவிக்கும் விதமாகவே இருக்கும். இதன் மூலம் தனது தேவையைக் கூறும் அளவுக்கேனும் குழந்தைகளைத் தயார் செய்ய முடியும்.

படங்கள்: எல்.அனந்தராமன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.