தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கல்வி: நான்கு இளைஞர்கள்... ஐந்து ஆண்டுகள்... ஒரு கோடி ரூபாய்!

பொதுவாகத் தமிழகத்தில் கல்லூரி என்பது பணம் கொட்டும் காமதேனு என்றாகி விட்டது. இந் நிலையில் இளைஞர்கள் சேர்ந்து துவங்கிய கலைக் கல்லூரி ஒன்று மாறுபட்டு விளங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் கல்வியி

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 11:12 am

வேல்முருகன்

பொதுவாகத் தமிழகத்தில் கல்லூரி என்பது பணம் கொட்டும் காமதேனு என்றாகி விட்டது. இந் நிலையில் இளைஞர்கள் சேர்ந்து துவங்கிய கலைக் கல்லூரி ஒன்று மாறுபட்டு விளங்கிக் கொண்டிருக்கிறது.

கடந்த 5 ஆண்டுகளில் கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு ரூ.1 கோடியை கல்வி உதவித்தொகையாகத் தந்து பலரின் வாழ்க்கையில் ஒளியேற்றியுள்ளனர் அந்த இளைஞர்கள்.

நடப்புக் கல்வியாண்டில் தன்னாட்சிக் கல்லூரியாக மலர உள்ள அக் கல்லூரி பொள்ளாச்சி அருகே திப்பம்பட்டியில் கல்லூரி துவங்கியவர்களின் எண்ணத்தைப் போல கட்டடங்களிலும் வானளாவ உயர்ந்து நிற்கும் ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி.

பொள்ளாச்சியில் வணிகத்தைத் தொழிலாகக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த டி.சிவராமன் -எஸ்.வசந்தம்சிவம், பி.எம்.தியாகராஜன் -டி.சரஸ்வதி, எம்.கே.ஆறுமுகம் -ஏ.மகாலட்சுமி ஆகியோருக்குச் சிறிய அளவில் பள்ளியொன்றைத் துவங்கி ஏழை, எளியோருக்கு உதவ வேண்டுமென்று ஆசை. இதற்குத் தோள் கொடுத்து உதவியவர்கள் அவர்களின் மகன்கள் எஸ்.வெங்கடேஷ், டி.சேதுபதி மற்றும் எம்.ஏ. விஜயமோகன் ஆகியோர். விஜயமோகனின் நண்பரான மு.சேட்டுவும் சமூக அக்கறை காரணமாக இக் கல்லூரி நிர்வாகத்தில் பங்கேற்றார்.

இது தொடர்பாகக் கல்லூரித் தலைவர் எஸ்.வெங்கடேஷ் நம்மிடம் பேசினார்.

""கடந்த 1997-ல் வி.எஸ்.வி. வித்யா மந்திர் எனும் அறக்கட்டளையின் மூலம் 37 மாணவர்களுடன் ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி துவங்கப்பட்டது. அறிவிலே தெளிவு, அகத்திலே அன்பு எனும் மகாகவி பாரதியின் வைர வரிகள்தான் கல்லூரிச் சின்னத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.

கல்லூரி துவங்கும்போது எங்கள் நான்கு பேரின் வயதும் 30-லிருந்து 40-க்குள்தான். கல்லூரியில் இருந்து கிடைக்கும் வருமானத்தைத் தங்களுக்கென எடுத்துக் கொள்ளாமல் மேலும் இந்தச் சமூகத்துக்குப் பயன்பட வேண்டுமென்ற நினைப்பில் செயல்பட்டு வருகிறோம்.

பெற்றோர் ஏழைகளாக இருந்தாலும் சிறந்த மதிப்பெண் பெற்றால் அவர்களின் கல்விக்கு வறுமை ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் கடந்த 2004-2005-ம் கல்வியாண்டில் இருந்து மதிப்பெண்ணுக்குத் தகுந்தாற்போல கல்வி ஊக்கத் தொகை வழங்கி வருகிறோம். நல்ல மதிப்பெண் பெற்று வறுமை காரணமாகப் படிப்பைத் தொடர முடியாதவர்களுக்கு இது பேருதவியாக இருந்து வருகிறது.

கடந்த 2004-2005-ம் ஆண்டில் 226 மாணவர்களுக்கு ரூ.14 லட்சம், 2005-2006-ல் 393 பேருக்கு ரூ.16 லட்சம், 2006-2007-ல் 565 பேருக்கு ரூ.24 லட்சம் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டில் 404 பேருக்கு ரூ.30 லட்சம் கல்வி உதவித் தொகையாக வழங்கினோம்.

நடப்புக் கல்வியாண்டில் ரூ.40 லட்சம் கல்வி உதவித் தொகை வழங்கத் திட்டமிட்டுள்ளோம்.

பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் கல்வி உதவித் தொகை, பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளோருக்குக் கல்வி உதவித் தொகை, முன்னாள் மாணவ, மாணவியரின் குடும்பத்தினர் படித்தால் கல்வி உதவித் தொகை, சிறந்த விளையாட்டு வீரருக்கான கல்வி உதவித் தொகை என கடந்த 5 ஆண்டுகளில் வழங்கப்பட்ட மொத்த உதவித் தொகை ரூ.1 கோடிக்கும் சற்று அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரதியார் பல்கலைக் கழக பருவத் தேர்வுகளில் ஒவ்வோராண்டும் பல்கலைக் கழக அளவிலான தரப்பட்டியலில் இக்கலூரியைச் சேர்ந்த பலர் இடம் பெற்றுப் பெருமை சேர்க்கின்றனர்.

கடந்த 2002, 2003, 2007 ஆகிய ஆண்டுகளில் இக்கல்லூரியின் ஆண்டு மலர் பல்கலைக் கழக அளவில் சிறந்ததாகத் தேர்வு செய்யப்பட்டது.

கல்லூரியின் ஒட்டு மொத்த செயல்பாட்டுக்காகக் கடந்த 2007-2008-ம் ஆண்டில் பாரதியார் பல்கலைக் கழக அளவில் இரண்டாவது சிறந்த கல்லூரியாக தேர்வு செய்யப்பட்டது.

பொதுவாகப் பள்ளிகளில் விளையாட்டுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் கல்லூரிகளில் கொடுக்கப்படுவதில்லை என்ற கருத்துத் தவறென்பதை இக்கல்லூரிக்கு வந்தால் பார்க்க முடியும்.

விளையாட்டுத்துறைக்கென நவீன சாதனங்களுடன் கூடிய ரூ. 4 லட்சம் செலவிலான உடற்பயிற்சிக் கூடம் மற்றும் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டுப் பராமரிக்கப்படுகிறது.

பொள்ளாச்சிப் பகுதியில் பள்ளி மாணவ, மாணவியரிடம் உள்ள விளையாட்டுத் திறமையைக் கண்டறிந்து மேம்படுத்திட வால்டர் தேவாரம் தலைமையில் விளையாட்டு ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக எஸ்.டி.சி. விளையாட்டு மேம்பாட்டு அகாதெமியும் துவங்கப்பட்டுள்ளது.

நடப்புக் கல்வியாண்டில் இருந்து கல்லூரியில் படிக்கும் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு விளையாட்டைத் தினமும் ஒரு மணி நேரமாவது விளையாட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட உள்ளது.

""சமுதாயத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் உருவானது ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி. வரும் 2020-க்கும் நாட்டிலுள்ள முன்னணிக் கல்வி நிறுவனங்களில் ஒன்றாக இக்கல்லூரி உயர வேண்டும் என்பது நிர்வாகத்தின் எண்ணம். இதற்காகத் திட்டமிடப்பட்டு வருகிறது. கல்வியில் மட்டுமில்லாமல் மாணவர் உடல் நலனிலும் அக்கறை கொண்டுள்ளதால் விளையாட்டு கட்டாயமாக்கப்பட உள்ளது. பல்வேறு விளையாட்டுகளில் எங்கள் மாணவர்கள் பல்கலைக் கழகத்துக்காக விளையாடுவதே விளையாட்டுக்கு நாங்கள் தரும் முக்கியத்துவத்துக்குச் சான்று. மேலும் ஜாதி, இன, மதப்பாகுபாடுகளைக் கடந்து திறமைக்கு மட்டும் முக்கியத்துவம் தந்து கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது'' என தெரிவித்தார்.

பொள்ளாச்சியில் இருந்து சற்றுத் தள்ளி இக்கல்லூரி வலாகம் அமைந்திருந்தாலும், மாணவர்கள் இரவு நேரங்களிலும் கம்ப்யூட்டர்களைக் கையாள்வதற்கு வசதியாக பொள்ளாச்சியிலும் நகர மையம் அமைக்கப்பட்டு அதிலும் பயிற்சி பெறத் தேவையான ஏற்பாடுகளைக் கல்லூரி செய்து வருகிறது. இதில் எப்போது வேண்டுமானாலும் மாணவர்கள் பயிற்சி பெறலாம். தனியார் பலரும் இங்கு இலவசப் பயிற்சி பெறலாம் என்று கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

கல்லூரி துவங்கினால் கோடிகளைக் குவிக்கலாம் என்ற நிலை இருந்தாலும் அது இந்தச் சமுதாயத்துக்குப் பயன்பட வேண்டும் என்ற எண்ணத்தில் மாணவ, மாணவியருக்கு உதவிப் பெற்றோரின் சிரமத்தைக் குறைக்கும் இக்கல்லூரி நிர்வாகத்துக்கு வாழ்த்துக் கூறி வந்தோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.