சேவை: சிறு துளி...
கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களிடையே குழுக்களை ஏற்படுத்தி, சமூகத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கியிருக்கும் மக்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளுக்கு எளிய முறையில் தீர்வுகளைக் காணும்


கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களிடையே குழுக்களை ஏற்படுத்தி, சமூகத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கியிருக்கும் மக்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளுக்கு எளிய முறையில் தீர்வுகளைக் காணும் வழிகளை, மாணவர்களைக் கொண்டே ஏற்படுத்துவதுதான் சர்வதேச அமைப்பான "மாணவர் தொழில் முனைவத்தின்' (Students in Free Enterprise- SIFE) நோக்கம். 47 நாடுகளில் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பில் கடந்த 2007-ம் ஆண்டில் பதிவு செய்தது, சென்னையை அடுத்துள்ள பட்டாபிராமில் இருக்கும் இந்துக்(ஏஐஇநஞ) கல்லூரி. இந்து கல்லூரியின் மாணவர் தொழில் முனைவம் இரண்டு பகுதிகளில் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இந்தக் குழுவின் மாணவர் தலைவர் சங்கீதா நம்மிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து...
""நிச்சயமாக இது எங்களுடைய குழுவிற்குக் கிடைத்த வெற்றி என்றுதான் சொல்லவேண்டும். நாங்கள் முதலில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த காவாங்குளம் பகுதியிலிருக்கும் செருப்பு தைக்கும் தொழிலாளர்கள் சிலரின் வாழ்வாதாரங்களை முன்னேற்றுவதற்கு முடிவு செய்தோம். இதற்கு முதற்கட்டமாக அந்தப் பகுதியில் இந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் 30, 40 குடும்பத்தைப் பற்றிய சர்வே எடுத்தோம். இந்த சர்வே எடுக்கும் பணியில் கெüதம், சங்கர் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட சைஃப் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
அந்தக் கிராமத்திலிருக்கும் சிலர் பாரம்பரியமாக செருப்பு தைக்கும் தொழிலைச் செய்து வருபவர்கள். மார்க்கெட், திரையரங்கங்கள்... என ஊரின் முக்கியமான பகுதிகளில் இவர்கள் அறுந்த செருப்புகளை தைத்துக் கொடுப்பார்கள். சராசரியாக ஒருநாளைக்கு 30லிருந்து 40 ரூபாய் வரைதான் அவர்களுக்கு வருமானம் கிடைக்கும் நிலை. வீட்டிலிருக்கும் பெண்கள் வீட்டு வேலை செய்வதற்கும், எக்ஸ்போர்ட் கம்பெனிகளிலும் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் குடும்பங்களில் இந்தத் தலைமுறையைச் சேர்ந்தவர்கள்தான் 10-வது, 12-வது வரை படிக்கின்றனர். அந்த ஊரில் செருப்பு தைப்பதின் மூலம் போதிய வருமானம் கிடைக்காத நிலை இருப்பதால், அந்தக் குடும்பத்து ஆண்கள் கழனி, செங்கல் சூளைகளில் கூட வேலைக்குச் செல்லும் நிலை. இதெல்லாம் நாங்கள் எடுத்த சர்வேயில் எங்களுக்குத் தெரியவந்த விவரங்கள்.
சுய உதவிக் குழுவை அவர்களுக்குள் தொடங்குவதற்கு உதவினோம். முதலில் அவர்கள் எங்களை ஏற்றுக்கொள்வதில் தயக்கம் காட்டினர். இறுதியாக அவர்களில் 20 பேர் மட்டுமே சுய உதவிக் குழுவில் இடம்பெற்றனர். அவர்களிடையே சேமிப்பின் அவசியத்தை எடுத்துக் கூறி அவர்களை முதற்கட்டமாக வங்கிக் கணக்கைத் தொடங்கவைத்தோம். வங்கிக் கணக்கு இருந்தால்தான் தொழில் முதலீடுகளுக்கு கடன் கிடைக்கும். பாரம்பரியமாக நூல் கொண்டு செருப்பு தைக்கும் இவர்களுக்கு, சிறு அளவில் வியாசர்பாடி பகுதியில் செருப்பு வியாபாரம் செய்துவரும் சி.எம்.பலராமன் என்பவரை அறிமுகப்படுத்தினோம். இவர், பசை, ரெக்ஸின் கொண்டு செருப்பு தயாரிக்கும் முறையை இவர்களுக்கு கற்றுக் கொடுத்து, அவர்களைக் கொண்டே செருப்புகளை தைத்து வாங்கி, அவர்களுக்கு ஒரு நாளைக்கு 100 முதல் 200 ரூபாய் வரை வருமானம் கிடைப்பதற்கு வழி செய்திருக்கிறார். பலராமனைப் போன்ற சிறு வியாபாரிகள் பலர் இந்தத் தொழிலாளிகளுக்கு வேலை கொடுப்பதற்கு முன்வந்தால் இவர்களின் வாழ்வாதாரம் மேலும் உயரும்.
எங்களின் அடுத்த புராஜக்ட், கும்மிடிப்பூண்டி-பழவேற்காடு பகுதியைச் சேர்ந்த மீனவ கிராமமான ஓபசமுத்திரம் பகுதியில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கு திட்டமிட்டது.
இந்தப் பகுதியில் இருக்கும் குடும்பத் தலைவர்களின் முக்கியத் தொழில் கிளிஞ்சல்கள் எடுப்பதுதான். இவர்கள் கடலில் 1 கி.மீ. தூரம் செல்கிறார்கள். ஆழம் குறைந்த அந்தக் கடற்பரப்பில் ஏறக்குறைய ஐந்தடிக்கு மண்ணைத் தோண்டுகிறார்கள். களிமண்ணோடு கலந்த இறந்த நத்தை, கிளிஞ்சல்களை எடுத்து வருகிறார்கள். இப்படி எடுத்துவரப்படும் சுத்தப்படுத்தப்பட்ட கிளிஞ்சல்கள், தட்டு ஒன்றுக்கு 20லிருந்து 25 ரூபாய் வரை தனியார் முதலாளிகளுக்கு விற்கப்படுகிறது. இந்தக் கிளிஞ்சல்கள் பொடியாக்கப்பட்டு மாட்டுத் தீவனத்துடன் சேர்ப்பதற்குப் பயன்படுகிறது. அபாயம் நிறைந்த இந்தத் தொழிலில் ஈடுபடுவோருக்கு குறைந்தபட்ச ஊதியமாக தட்டு(ஐந்து கிலோ கிளிஞ்சல்களைக் கொண்டது) ஒன்றுக்கு 100 ரூபாயாவது அரசு விலை நிர்ணயிக்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கை மனுவை அனுப்பியிருக்கிறோம்.
இதுதவிர, அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களைக் கொண்டு சுயஉதவிக் குழுக்களைத் தொடங்கவைத்து, அவர்களுக்கு காளான் வளர்ப்பை சொல்லிக் கொடுத்தோம். ஒருதடவை காளான் "வித்து'வை 80 ரூபாய்க்கு வாங்கினால் அதைக் கொண்டு மூன்று தடவை விளைச்சல் எடுக்கலாம். ஒன்றிலிருந்து ஒன்றரை கிலோ காளானை ஒரு விளைச்சலில் எடுக்கலாம். ஒருகிலோ காளான் 100-150 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இவர்களுக்கான சந்தை வாய்ப்புகளையும் திருவள்ளூர், செல்வம் மஷ்ரூம் என்னும் நிறுவனத்தின் மூலம் உருவாக்கிக் கொடுத்திருக்கிறோம்.
ஓபசமுத்திரம் கிராமத்தில் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த ஏறக்குறைய ஐம்பது பெண்களும் கூடுதலாக ஒரு வருமானம் கிடைக்கும் சந்தோஷத்தில் இருக்கின்றனர்.
எங்களின் ஆசிரியர்கள் ஆர்.எஸ்.புருஷோத்தமன், கே.பவானி செல்வி ஆகியோரின் வழிநடத்தலும், ஹோலிஸ்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளானர் நிறுவனத்தின் இயக்குனர் ராமலிங்கம் அளித்த விழிப்புணர்வுப் பிரசாரங்களும், ஓபசமுத்திரம் ஊராட்சி மன்றத் தலைவர் ஓ.என்.சர்க்கரை அளித்த ஒத்துழைப்பும், என்னுடன் தோள் கொடுத்து இந்தப் பணியில் ஈடுபட்ட சக மாணவர்களின் உழைப்பும், கல்லூரி நிர்வாகத்தின் ஊக்கமும்தான் மேற்கண்ட பகுதிகளில் வாழும் சிலரின் வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக சிறிய வளர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. சிறு துளி நாளை வெள்ளமாகும்!'' என்றார் நம்பிக்கையுடன் சங்கீதா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...