பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

சேவை: அன்பு செலுத்த ரேஷன் இருக்கலாமா?

சமூகப் பணிகளையே முழு நேர வேலையாகச் செய்யும் குழுக்களும், சமூகப் பணியை முறையாகச் சொல்லிக் கொடுப்பதற்கென்றே கல்வி நிறுவனங்களும் உருவாகிவிட்ட காலமிது. இந்தக் காலத்தில் சேவையை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 3:04 pm

ரவிக்குமார்

சமூகப் பணிகளையே முழு நேர வேலையாகச் செய்யும் குழுக்களும், சமூகப் பணியை முறையாகச் சொல்லிக் கொடுப்பதற்கென்றே கல்வி நிறுவனங்களும் உருவாகிவிட்ட காலமிது. இந்தக் காலத்தில் சேவையை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு "அன்புக் கரங்கள்' என்னும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விளம்பர வெளிச்சம் படாமல் நடத்தி வருகிறார் எம்.ஆர்.எஸ். லட்சுமி என்னும் பெண்மணி.

அவரின் சேவையைப் பாராட்டி தேசிய ஒருமைப்பாட்டு கலாசார அமைப்பு சிறந்த சமூக சேவகருக்கான விருதை வழங்கியிருக்கின்றது. ஜெயேந்திரரின் பவழ விழாவை முன்னிட்டு சிறந்த சமூக சேவகருக்கான விருதும் காஞ்சி மடத்தால் இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

சென்னை, கொட்டிவாக்கத்தில் "அன்புக் கரங்கள்' ஆதரவற்றோர் இல்லம் செயல்படுகிறது. அறக்கட்டளையின் அறங்காவலர்களான லட்சுமியிடமும் சுரேஷ்குமாரிடமும் நாம் பேசியதிலிருந்து...

""நான் எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் சிறிது காலம் செவிலியராகவும், அலுவலக நிர்வாகத்திலும் பணியிலிருந்தேன். என்னுடைய கணவர் மணி, மெக்கானிக் ஷாப் வைத்திருந்தார். தற்போது பழைய கார்களை வாங்கி வியாபாரம் செய்கிறார். எங்களுக்குக் குழந்தைகள் இல்லை. நான் எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் பணியிலிருந்தபோது அங்கு சுரேஷ்குமாரும் பணியிலிருந்தார்.

அவருக்கும் சமூகப் பணிகளில் ஆர்வம் அதிகம். நாங்கள் இருவரும் உதவும் கரங்கள், விஸ்ராந்தி முதியோர் இல்லம் போன்ற தன்னார்வ அமைப்புகளில் எங்களால் முடிந்த உழைப்பைச் செலுத்தி வந்தோம். சில வருடங்கள் இப்படியே போனது.

எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் மருத்துவர் சிவக்குமார் எங்களுக்கு சமூகப் பணிகளைச் செய்வதில் இருக்கும் ஆர்வத்தைப் புரிந்துகொண்டு, "நீங்களே ஏன் ஒரு முதியோர் இல்லத்தை தொடங்கக் கூடாது?' என்று கேட்டார். அவரின் கேள்விக்குப் பதிலாக 1996-ல் அறக்கட்டளையை முறையாகப் பதிவு செய்து, 1997-ல் ஆதரவற்ற ஆறு பாட்டிகளுடன் "அன்புக் கரங்கள்' ஆதரவற்றோர் இல்லத்தைத் தொடங்கினோம்.

தொடக்கத்தில் ஆண் முதியவர்களையும் பராமரித்து வந்தோம். பின்னாளில் அவர்களைப் பராமரிப்பதற்கு ஆள் இல்லாமல் நான் மட்டுமே அவர்களைப் பராமரித்து வந்தேன். நான் என்னுடைய தந்தையின் ஸ்தானத்தில் இருந்து அவர்களுக்கு சிரம பரிகாரங்களைச் செய்தாலும் நிறையப் பேர் சங்கோஜப்படுகிறார்கள்.

அதனால் ஆண் முதியவர் ஒருவர்தான் இருக்கிறார். முதியவர்களுக்காக தொடங்கப்பட்ட அமைப்பை நாளடைவில் ஆதரவற்ற குழந்தைகளுக்காகவும் பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்தோம். எஸ்.ஆர்.எம். மருத்துவமனை, எம்.வி. டையாபடிக் சென்டர் போன்ற மருத்துவமனைகள் எங்கள் இல்லத்திற்கு செக்கப் செய்வதற்கு மருத்துவர்களை அனுப்புகின்றன. எங்கள் தொண்டு அமைப்பிற்கு காப்பாளரான குமார் செட்டியார் பலவிதமான உதவிகளைச் செய்துவருகிறார்.

தற்போது 87 குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களில் அப்பா, அம்மா இல்லாத ஆதரவற்றோர் 30 பேர். மீதிக் குழந்தைகளுக்கு அப்பாவோ, அம்மாவோ ஒருவர்தான் இருப்பார். அவரும் மிகவும் வறுமையான நிலையில் குழந்தையைப் பராமரிக்க முடியாத நிலையிலிருப்பார். அப்படிப்பட்டவர்களின் குழந்தைகளைத்தான் முறையான விசாரணைகளுக்குப் பிறகு காவல் துறையினரின் அறிவுறுத்தலோடு எங்களின் இல்லத்தில் சேர்த்துக் கொள்கிறோம்.

அவர்கள் ஆர்வமாக எவ்வளவு படித்தாலும் அவர்களைப் படிக்க வைப்பதற்குத் தயாராக இருக்கிறோம். எங்களின் இல்லத்தில் இருக்கும் குழந்தைகள் அனைவரும் அருகிலிருக்கும் பள்ளிகளுக்கு படிப்பதற்குச் செல்கிறார்கள். நான்கு சிறுவர்கள் இந்த வருடம் பத்தாவது படிக்கிறார்கள். நான்கு பேர் பதினொராம் வகுப்பு படிக்கிறார்கள். "இந்தக் குழந்தையைச் சேர்த்துக் கொள்ளுங்கள், இந்த முதியவரைச் சேர்த்துக் கொள்ளுங்கள் பணம் வேண்டுமானால் தருகிறோம்...' என்று சொல்பவர்களை இங்கு சேர்த்துக் கொள்வதில்லை. முழுக்க முழுக்க சேவைகளை இலவசமாகத்தான் நாங்கள் செய்கிறோம்.

படிப்பைத் தவிர இல்லத்தின் சிறுவர்களுக்கு கணினிப் பயிற்சி, டெய்லரிங், ஆட்டோமைபைல் போன்ற தொழிற்பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. எங்கள் இல்லத்தில் சேர்க்கப்படும் சிறுவர்களை பத்தாவது படித்து முடித்தபின்தான் திரும்ப அழைத்துச் செல்ல வேண்டும் என்பதை கண்டிப்பாகச் சொல்லுகிறோம். இல்லத்தில் ஆரம்பத்திலிருந்து வளர்ந்த மூன்று பெண்களுக்கு இதுவரை "கல்யாண மாலை' மோகன் உதவியுடன் திருமணம் செய்து வைத்திருக்கிறோம். மொத்தத்தில் எங்களுக்கு 36 பெண்கள் மூன்று மருமகன்கள்!

கடந்த ஆண்டு திருமணம் நடந்த கல்பனாவும் அவரது கணவர் நீலகண்டனும் தற்போது மேற்கொண்டு படித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் இன்னமும் தங்களின் திருமண வாழ்க்கையைத் தொடங்கவில்லை.

ஆண்டுக்கு ஒருமுறை எங்களின் இல்லத்திற்காக நன்கொடையைச் சேகரிப்பதற்காக சென்னை, காமராஜர் அரங்கத்தில் ஓர் இசை நிகழ்ச்சியை நடத்துவோம். இதைத் தவிர நல்ல உள்ளங்கள் பலரின் உதவியோடுதான் இந்த இல்லத்தைத் தொடர்ந்து நடத்திவருகிறோம். முதலில் பாலவாக்கத்தில் வாடகைக்கு ஒரு இடத்தில் இருந்தோம். தற்போது கொட்டிவாக்கத்தில் பல நல்ல இதயங்களின் உதவியால் இல்லத்திற்கு கட்டிடம் கட்டி குடியேறியுள்ளோம். பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைப் போன்றே எங்களுக்கும் அரசின் நலத் திட்டங்களைப் பெறுவதற்கு விருப்பம் இருக்கிறது.

ஆனாலும் அதற்கான வழிமுறைகள்தான் தெரியவில்லை. ஒருசில பேர் அரசு உதவி என்றால் ஒரு குழந்தைக்கு ஒரு நாளைக்கு 100 கிராம் அரிசி, 100 கிராம் பருப்பு என்ற கணக்கில்தான் பொருட்களை வழங்குவார்கள் என்று சொன்னார்கள். என்னைப் பொறுத்தளவில் குழந்தைகளுக்கு அளவு பார்த்துப் பரிமாறக் கூடாது. குழந்தைகளின் மீது அன்பு செலுத்துவதற்கும் அவர்களுக்கு உணவு கொடுப்பதற்கும் ரேஷன் இருக்கலாமா?'' என்கிறார் லட்சுமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.