/

ஆலயம்: அருள் தரும் அசிசியார்!

கிறிஸ்தவ மதம் தழைக்கத் தொடங்கிய காலகட்டம் அது. அன்றைய நெருக்கடியான காலகட்டத்தில் இத்தாலியில் ஒரு பெரிய வியாபாரக் குடும்பத்தில் பிறந்த பிரான்ஸிஸ் அசிசியார் சொத்துகளை எல்லாம் துறந்து தன் வாழ்வை இறைப்பணி

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 3:19 pm

கிறிஸ்தவ மதம் தழைக்கத் தொடங்கிய காலகட்டம் அது. அன்றைய நெருக்கடியான காலகட்டத்தில் இத்தாலியில் ஒரு பெரிய வியாபாரக் குடும்பத்தில் பிறந்த பிரான்ஸிஸ் அசிசியார் சொத்துகளை எல்லாம் துறந்து தன் வாழ்வை இறைப்பணிக்கு அர்ப்பணித்தார். எளிய வாழ்வே இறை வாழ்வு என்று உபதேசித்த அவர், தன்னுடைய தீவிர பக்தி மற்றும் எளிமையான நடவடிக்கைகளால் கிறிஸ்தவ மதத்தில் ஒரு மெüன சீர்திருத்தப் புரட்சிக்கு வித்திட்டார்.

கிறிஸ்தவ தேவாலயங்களில் மணியோசை அழைப்புகள், சிலுவைப்பாடு சித்தரிப்புகள், கிறிஸ்துமஸ் குடில்கள் போன்ற பல நன்நடவடிக்கைகளை முன்னெடுத்தவர் அசிசியார்தான். இவரைப் பின்பற்றி வந்த துறவிகளே பிரான்ஸிஸ்கன் கப்புசின் துறவிகள் என்று அழைக்கப்படுகின்றனர்.

நம் நாட்டில் மாதா ஆலயங்கள் பெரும் அளவில் உண்டு. அந்தோனியார், தோமையார், சவேரியார் ஆலயங்களும்கூட கணிசமான அளவில் உண்டு. அசிசியார் ஆலயங்கள் குறிப்பிடத்தக்க அளவிலேயே இருக்கின்றன. அவற்றில் தொன்மையான ஆலயங்களில் ஒன்று புதுவை குருசுகுப்பம் புனித பிரான்ஸிஸ் அசிசியார் ஆலயம்.

புதுச்சேரி நகரில் சற்றே ஒதுக்குப்புறமாக உள்ள குருசுகுப்பம் கடற்கரையோரம் 1840-களில் ஒரு மண் குடிசையில் வழிபாடு தொடங்கியது. பின்னாளில், பெரியநாயகம் கம்புரோன் என்ற தனவந்தர் இடம் அளிக்க 1858-ல் புனித பிரான்ஸிஸ் அசிசியார் ஆலயமாக அது உருவானது. அன்றைய குருமார்கள் பொனஷன், துக்வி அடிகள் முதல் பூஜையை நடத்தினர்.

கடந்த 150 ஆண்டுகளில் இங்கு வந்து செல்வோர் வாழ்வுடன் பிரிக்க முடியாத பிணைப்பை உருவாக்கிவிடும் இந்த ஆலயத்தில் வழிபட்டால் கேட்கும் அருள் கிடைக்கும் என்கின்றனர் பக்தர்கள். அசிசியாரின் அருள் அளப்பரியது என்று கூறும் அவர்கள், கூப்பிடு தூரத்தில் கடல் அலைகள் ஆர்ப்பரிக்கும் நிலையிலும்கூட இதுவரை சுனாமி, பெரும் புயல்கள் உள்ளிட்ட எந்த இயற்கைச் சீற்றத்தின்போதும் ஆலயத்தின் வாசலை கடல் நீர் தீண்டாததைக் குறிப்பிட்டு வியக்கின்றனர்.

ஆண்டுதோறும் செப். 25-ம் தேதி முதல் அக். 4-ம் தேதி வரையிலான ஆண்டுத் திருவிழா நாள்கள் இந்த ஆலயத்தில் வழிபட விசேஷ நாட்களாகும். தவிர, பிரதி செவ்வாய் - வெள்ளிக்கிழமைகளில் ஆலய வளாகத்திலுள்ள அசிசி பூங்காவான கெபியில் நடைபெறும் சிறப்பு வழிபாடுகளும் விசேஷமானவை.

புதுச்சேரியின் அழகைப் புதிதாக வர்ணிக்கத் தேவையில்லை. புதுச்சேரி நகரின் பிரதான இடங்களிலுள்ள ஏனைய பிரம்மாண்ட தேவாலயங்களின் அழகும் அருளும்கூட அப்படியே. பிரம்மாண்டங்களின் மத்தியிலுள்ள இந்தச் சின்ன ஆலயம் தன் எளிமையால் வசீகரிக்கிறது; அசிசியாரின் எளிமையை கடற்கரைக் காற்றோடு கலந்து தவழவிடுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.