ஆலயம்: குளத்துப்புதூர் வரதராஜப் பெருமாள்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே குளத்துப்புதூரில் ஸ்ரீ பூமி நீளா சமேத வரதராஜப் பெருமாள், அர்ச்சாவதாரத் திருமேனியுடன் 100 ஆண்டுகளுக்கும்மேலாகப் பக்தர்களுக்கு வரம் தந்து வருகிறார்.
மலைநாட்டுத் திவ்ய தேசம் போல இக்கோயில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நம்மாழ்வார் அவதரித்த வேளாளர் குலத்தில் பிறந்த ஆறுமுகக் கவுண்டர் வீரவைஷ்ணவராகி திருநாராயண ராமானுஜதாசர் எனும் திருப்பெயர் பெற்றார். வசதிகள் மிகக் குறைவான, குக்கிராமமான குளத்துப்புதூரில் ஸ்ரீ பூமி நீளா சமேத வரதராஜப் பெருமாளுக்குத் திருக்கோயில் கட்டி பெருமாளைப் பிரதிஷ்டை செய்து மகா சம்ப்ரோட்சணம் செய்தார். அப்போதிருந்து ஸ்ரீரங்கம் கோயில் சம்பிரதாய முறைகளைப் பின்பற்றி இக்கோயிலில் பூஜைகள் நடக்கின்றன.
ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஆழ்வார் திருநகரி போன்ற பல திவ்ய தேசங்களைச் சேர்ந்த ஐயங்கார் சுவாமிகளைக் கொண்டு நித்தியப்படி திருவாராதனம் நடந்து வருகிறது. பொள்ளாச்சிப் பகுதியில் வைணவம் பரவுவதற்கு குளத்துப்புதூர் பெருமாள் சன்னதியும், திருநாராயண ராமானுஜதாசரும் காரணமாக இருந்தனர். இக்கோயில் உருவானதற்குப் பின்னரே வாழைக்கொம்பு, உடுமலை அருகே ருத்ராபாளையம் ஆகிய ஊர்களில் பல வைணவப் பெரியார்கள் தோன்றி ராமானுஜ கூடங்களை உருவாக்கினார்கள்.
தங்கள் வழிபாட்டுக்காக அமைத்த குளத்துப்புதூர் கோயிலுக்குப் பல இடங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். 16-9-1943-க்குப் பின் கடுமையான முயற்சியெடுத்து 24-1-1992-லும் அதன்பின் 21-3-2005-ல் மகா சம்ப்ரோட் சணம் இக்கோயிலில் நடந்தது. கடந்த 1988-ம் ஆண்டில் சுமார் 20 மாதங்கள் அர்ச்சகர் கிடைக்காமல் திருவாராதனம் நின்றது. அப்போது ஸ்ரீ ரங்கத்தில் தங்கியிருந்த ஸ்ரீமுஷ்ணம் கோவிந்தாச்சாரியார் கனவில் வந்த வயது முதிர்ந்த பெரியவர், பட்டினியாக இருக்கும் என க்குப் பிரசாதம் அளிக்க வா என்று கூறி மேற்குத்திசையில் மறைந்தார். அதனால் காவிந்தாச்சாரியார் அச்சமுற்று ஸ்ரீரங்க நாராயண ஜீயரிடம் தெரிவித்துள்ளார்.
அந்தச் சமயத்தில் குளத்துப்புதூர் கோவில் பொறுப்பிலிருந்த சடகோபராமானுஜதாசர் ஸ்ரீரங்கம் ஜீயரிடம் கோயில் நிலைகுறித்துக் கூறினார். தையடுத்து சடகோபராமானுஜ தாசர், கோவிந்தாச்சாரியாரைப் பார்த்தார். அதன்பின் 8-2- 1990ல் ஹோமம் செய்யப்பட்டு இன்று வரை நித்திய திருவாராதனம் நடந்து வருகிறது. இக்கோயில் பாஞ்சராத்ர ஆகம முறைப்படி தினமும் 4 கால பூஜைகளும் நடந்து வருகின்றன. ஒவ்வோராண்டும் தமிழ் வருடப் பிறப்பு, ஸ்ரீ ராமநவமி, ஸ்ரீ ராமானுஜ ஜெயந்தி, நம்மாழ்வார் திருநட்சத்திரம் வைகாசி விசாகம், ஸ்ரீ ஆண்டாள் ஆடிப்பூரம், ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி மாதத்தில் 5 சனிக்கிழமைகள், ஐப்பசித் திருமூலம், திருக்கார்த்திகை தீபம்,
வைகுண்ட ஏகாதசி, தை முதல் நாள், கோயில் ஆண்டு விழா, பங்குனி பூச நட்சத்திரம், ஆகியநாள்கள் இக்கோயிலில் மிகுந்த சிறப்புடன் கொண்டாடப்படும்.
இது தவிரத் தமிழ் மாதப் பிறப்பு, தமிழ் மாதத்தின் முதல் வியாழன், ஏகாதசி,அமாவாசை, திருவோணம் மற்றும் பூச நட்சத்திரங்களில் திருமஞ்சனம் நடக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

