சேவை: சகிப்புத் தன்மை இருந்தால் சாதிக்கலாம்!
திருவண்ணாமலையைச் சுற்றி வந்தால் வாழ்க்கையில் நன்மை உண்டாகும் என்பதற்காக அந்தப் பிரார்த்தனையைச் செய்வதற்குக் கிரி வலப் பாதையில் நடப்பவர்கள் தினம் தினம் ஏராளம். அந்தப் பாதையின் ஓரத்திலேயே, கிரி வலம் வரு


திருவண்ணாமலையைச் சுற்றி வந்தால் வாழ்க்கையில் நன்மை உண்டாகும் என்பதற்காக அந்தப் பிரார்த்தனையைச் செய்வதற்குக் கிரி வலப் பாதையில் நடப்பவர்கள் தினம் தினம் ஏராளம். அந்தப் பாதையின் ஓரத்திலேயே, கிரி வலம் வருபவர்களின் கொடையுள்ளத்தை எதிர்பார்த்து தங்களின் அன்றாட வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கும் ஏழைகளும் ஏராளம். அவர்களில் நடக்கமுடியாத முதியவர்கள், தொழுநோயால் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கு ஒருவேளை உணவு அளித்து, அவர்களின் புண்களுக்கு மருந்திட்டு, தேவைப்பட்டால் மருத்துவரைக் கொண்டு சிகிச்சையையும் தாயுள்ளத்தோடு அளிக்கின்றார் மணிமாறன். ஏறக்குறைய தினம் 100 பேருக்கு ஒருவேளை உணவுக்கு வழிசெய்யும் மணிமாறன் தன்னுடைய வருமானத்தின் பெரும் பகுதியை இதற்காகவே செலவழிக்கிறார். "உலக மக்கள் சேவை மையம்' என்னும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை இதற்காகவே தொடங்கியிருக்கும் மணிமாறன் அவரின் செயல்பாடுகள் குறித்து நம்மிடம் பேசியதிலிருந்து...
""சிறு வயதிலிருந்தே திருவண்ணாமலையைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் மனநலம் பாதிக்கப்பட்டோர், வயதானவர்களுக்கு உணவளிக்கும் பழக்கம் எனக்கு இருந்தது. இது என் தந்தை எனக்குக் காட்டிய வழி. என்னுடைய அண்ணன் லோகநாதன் திருப்பூர் ஆயத்த ஆடைகள் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் பணியிலிருக்கிறார். நானும் அங்கு சிலகாலம் பணியிலிருந்தேன். திருப்பூருக்கும், திருவண்ணாமலைக்கும் நான் அடிக்கடி பயணமாகிக் கொண்டிருப்பேன். அப்படியொரு நாள் நான் திருவண்ணாமலையில் இறங்கும் போது, தொழுநோயால் பாதிக்கப்பட்ட வயதான மூதாட்டி ஒருவரும் இறங்கினார். அவரால் நடக்கவே முடியவில்லை. குடிப்பதற்கு தண்ணீர் வேண்டும் என்று பலரையும் அவர் கேட்க, ஒருவரும் அவருக்கு தண்ணீர் தருவதற்கு முன்வரவில்லை. காரணம் அவர் தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததுதான். அவரை சாலையின் ஓரத்திற்கு தூக்கிச் சென்று, அவருக்கு உணவையும் தண்ணீரையும் வாங்கிக் கொடுத்தேன். அன்றைய தினம் என்னுடைய பணியின் காரணமாக வேறு சில ஊர்களுக்கு நான் செல்ல வேண்டியது இருந்ததால், அந்தப் பகுதியில் இருந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவரிடம் 300 ரூபாயைக் கொடுத்து அவருக்கு தேவையான உணவுகளை மூன்று நாள்களுக்கு வாங்கித் தருமாறு கேட்டுக் கொண்டேன். மூன்று நாள்களுக்குப் பிறகு நான் அதே பகுதிக்கு வந்தபோது, அந்த ஆட்டோ ஓட்டுனர் நான் கொடுத்த பணத்தில் நூறு ரூபாயைத் திருப்பிக் கொடுத்து, அந்த மூதாட்டி இரண்டு நாட்கள் இருந்ததாகவும் அதன்பின் எங்கு சென்றார் என்று தெரியவில்லை என்றார். நானும் அவரை திருவண்ணாமலை முழுவதும் பல இடங்களில் தேடிப் பார்த்தேன். அவரை கண்டுபிடிக்கமுடியவில்லை. அப்போதுதான் எனக்கு வயதான தொழுநோயாளிகளுக்கு நம்மால் இயன்றதைச் செய்யலாமே என்று தோன்றியது.
வயதான தொழுநோயாளிகள் கிரி வலப் பாதைக்கு அருகிலேயே குடிசை போட்டுக் கொண்டு வாழ்வதைப் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு அவர்களுடைய இடத்திலேயே சென்று சேவை செய்வதற்கு முடிவு செய்தேன். அவர்களின் புண்களுக்கு மருந்திடுவது, அவர்களுக்கு மருத்துவர்களைக் கொண்டு சிகிச்சைகளை அளிப்பது, ஒருவேளை உணவு அளிப்பது போன்ற காரியங்களைச் செய்ய ஆரம்பித்தேன். நாளடைவில் என்னுடைய சேவைப் பணிகளுக்கு நான் செய்யும் வேலை இடையூறாக இருப்பதால், வேலையை விட்டுவிட்டு, சிறிய குறைகளுடன் தயாராகும் ஆயத்த ஆடைகளைத் திருப்பூர் தொழிற்சாலைகளிலிருந்து மொத்த விலைக்கு வாங்கி, அதை மற்ற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிலை சொந்தமாகச் செய்யத் தொடங்கிவிட்டேன். இது என்னுடைய சேவைப் பணிக்கும் இடையூறு இல்லாமல் இருந்தது. அன்னை தெரஸô மையத்தின் தலைவி நிர்மலாவை கொல்கத்தாவில் சென்று சந்தித்தேன். தொழுநோயாளிகளுக்கு நாங்கள் செய்து கொண்டிருக்கும் சேவைகள் குறித்து சொன்னேன். உடனே அவர், "அங்கே இயற்கை உபாதையைக் கழித்துக் கொண்டிருக்கும் ஒரு முதியவரை சுத்தம் செய்யுங்கள்' என்றார். நாங்களும் சுத்தம் செய்தோம். உடனே அவர், "உங்களுக்குச் சகிப்புத் தன்மை இருக்கிறது. அது இருந்தால்தான் சேவை செய்வதில் சாதனை செய்யமுடியும்!' என்றார்.
வயதான தொழுநோயாளிகளுக்கு இந்த உதவிகளைச் செய்யும் அதேநேரத்தில் தொழுநோய் குறித்த விழிப்புணர்வையும் மக்களிடையே ஏற்படுத்திவருகிறேன். தொழுநோய் தொற்றுநோய் அல்ல. அது குணப்படுத்தக் கூடிய நோய்தான். தோலின் மீது உருவாகும் உணர்ச்சியற்ற தேமலே தொழுநோய்க்கான அறிகுறி... என்பது போன்ற விஷயங்களை மருத்துவர்களின் உதவியோடு மக்களிடையே கொண்டு செல்கிறேன். எங்களின் சேவைப் பணிக்கு மாவட்ட தொழுநோய் மைய துணை இயக்குநராக இருக்கும் கே.ராமலிங்கம் பெரிதும் உதவுகின்றார். உணவு மற்றும் ஆடைகள், மருத்துவ வசதிக்காக திருவண்ணாமலையியிலிருக்கும் ஆடிட்டர் செந்தில்குமார், சக்தி, என்னுடைய அண்ணன் லோகநாதன், பாலாஜி, கலைஞானி, ரமேஷ் ஆகியோர் தொடர்ந்து உதவி வருகின்றனர். கண் தானத்தை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல கல்லூரிகளில் லட்சக்கணக்கான மாணவர்களிடம் பிரசாரத்தை செய்திருக்கிறோம். இதுவரை 12 ஜோடி கண்களைத் தானமாகப் பெற்றுத் தந்திருக்கிறோம். இதற்காக அரவிந்த் கண் மருத்துவமனையின் பாராட்டுச் சான்றிதழைப் பெற்றிருக்கிறோம். எங்களின் சேவைப் பணிக்காக குளோபல் வோர்ல்ட் ரெகார்ட்ஸ் என்னும் இந்திய அமைப்பின் விருதை நாங்கள் பெற்றிருக்கிறோம். சமீபத்தில் தில்லிக்குச் சென்று இந்த விருதை நமது முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களிடம் காண்பித்து மகிழ்ந்தோம். அவரும் இளம் வயதில் பொதுச் சேவையில் ஈடுபட்டிருக்கும் எங்களின் பணியைப் பாராட்டினார். அந்த நாள் எங்கள் வாழ்க்கையில் மறக்கமுடியாத நாள்..'' என்றார் பரவசத்துடன் மணிமாறன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...