பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

சமூகம்: 3 ஆயிரத்திற்கு 300 பேர்

வாழ்வதற்கு வழி தெரியாமல் வீட்டிற்குள் முடங்கிக் கிடந்த உடல் திறன் குறைந்த பலரை தைரியமாக வாழ்க்கையை, சமூகத்தைச் சந்திக்க வைத்ததில் பெரும்பங்கு வகித்தது தமிழ்நாடு மாற்றுத் திறனாளர் நல்வாழ்வு சங்கம். 198

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 11:27 am

ரவிக்குமார்

வாழ்வதற்கு வழி தெரியாமல் வீட்டிற்குள் முடங்கிக் கிடந்த உடல் திறன் குறைந்த பலரை தைரியமாக வாழ்க்கையை, சமூகத்தைச் சந்திக்க வைத்ததில் பெரும்பங்கு வகித்தது தமிழ்நாடு மாற்றுத் திறனாளர் நல்வாழ்வு சங்கம். 1983-இல் தொடங்கப்பட்ட இந்தச் சங்கத்தில் 1986-ஆம் ஆண்டு முதல் தலைவராக இருப்பவர் டி.ஏ.பி. வரதகுட்டி. மாற்றுத் திறனாளிகளுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளுக்காகவும், சலுகைகளுக்காகவும் தொடர்ந்து போராட்டங்களிலும், கவன ஈர்ப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வரும் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து வரதகுட்டி நம்மிடம் பேசியதிலிருந்து...

""சார்ட்டட் அக்கவுண்டட்டாக இருக்கிறேன். நானும் உடல் திறன் குறைந்தவன்தான். ஆனால் எனக்கு நான் படித்த கல்வி ஊன்றுகோலாக வாழ்க்கையில் ஜெயிப்பதற்கு உதவியது. இந்த வாய்ப்பு உடல் திறன் குறைந்த அனைவருக்கும் கிடைக்கவேண்டும். எங்களுடைய நோக்கங்களை சங்கத்தின் சார்பாக வெளிவரும் "உதவிக்கரம்' என்னும் எங்களின் மாத இதழிலும் வெளியிட்டு அதை அரசின் பார்வைக்கு அனுப்பி வைக்கிறோம்.

1995-லேயே "ஊனமுற்றோர் உரிமைப் பாதுகாப்பு, இணையான வாய்ப்புகள் மற்றும் முழுமையான பங்கேற்புக்கான சட்டம்' பாராளுமன்றத்தில் இந்திய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டது. அந்த சட்டம் தொடர்பான விழிப்புணர்வு பாதிக்கப்பட்ட மக்களிடம் இல்லாததால், அதிகாரிகளால் நடைமுறைக்கு கொண்டுவரப்படாமல் இருந்தது. விவரம் அறிந்த உடல் திறன் குறைந்த சிலரும் சட்டத்தின் உதவியை நாடியே இந்தச் சட்டத்தின் பலனை அடையமுடிந்தது. 10 ஆண்டுகளாக இந்த நிலைமையே நீடித்தது. கடந்த 2007-ஆம் ஆண்டு நியூயார்க் நாட்டில் நடந்த ஐக்கிய நாடுகள் மாநாட்டில் உடல் திறன் குறைந்தவர்களுக்கான உரிமைகள் சாசனம் கையெழுத்தானது. அதில் கையெழுத்திட்ட பத்தாவது நாடு இந்தியா. இதைத் தொடர்ந்து பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநிலங்களும் உடல் திறன் குறைந்தவர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளை அளிப்பதில் முனைப்பு காட்டின. இதில் தமிழகம் முன்னணி வகிக்கின்றது என்பதில் சந்தேகமே இல்லை.

அதேநேரத்தில், உண்ணாவிரதமிருந்த பார்வையற்ற 77 பேருக்கு அரசு வேலை... உண்ணாவிரதம் இருந்த மாற்றுத் திறனாளிகள் 72 பேருக்கு ஆசிரியர் பணி... என்ற சமீபத்திய அரசு அறிவிப்புகளால், மாற்றுத் திறனாளிகளின் மனதில் "சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தால் போதும் விதிகளை தளர்த்தி கூட அரசு நமக்கு வேலை கொடுத்துவிடும்' என்ற நினைப்பு தோன்றிவிடும். இது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும். மாற்றுத் திறனாளிகள் துறையை தன்னிடம் வைத்துள்ள முதல்வர் தகுதி, பதிவு, மூப்பு ஆகியவை அனைத்தும் இருந்தும் வேலைக்காக காத்துக் கொண்டிருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்குப் பதிவு மூப்பு அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் பணியை வழங்காமல், பதிவு மூப்பு இல்லாமல் இருக்கும் 72 பேருக்கு ஆசிரியர் பணியை வழங்கியிருப்பது எப்படி என்று தெரியவில்லை?

தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீதம் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்கிறதா என்பதைக் கண்டறிய, உயர் மட்டக் கண்காணிப்புக் குழுவை நிறுவினார் முதல்வர். இந்தக் கண்காணிப்புக் குழுவின் பணி எந்தளவுக்கு நிறைவேறியிருக்கிறது என்று தெரியவில்லை.

"பொறியியல் கல்லூரிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் 3000 என்றும், அதில் 300 சொச்சம் பேர்களே படிப்பதற்கு வந்திருக்கின்றனர் என்றும் பத்திரிகைகளில் படித்தேன். அதிகம் பேர் படிப்பதற்கு முன் வராததற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, படிப்பிற்கேற்ற வேலை கிடைப்பதில்லை. இரண்டு, படிப்பதற்கு பண வசதி இல்லை. இதில் என்னுடைய யோசனை என்னவென்றால், இப்படி மாற்றுத் திறனாளிகளுக்கென ஒதுக்கியிருக்கும் இடங்களில் நேரடியாக மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கியது போக, மீதி இடங்களை மாற்றுத் திறனாளிகளின் பிள்ளைகளுக்கு ஒதுக்கினால் பயனாக இருக்கும்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.