நாள்களா? நாட்களா? பவழமா? பவளமா? பிழையற்ற தமிழ் அறிவோம்! -15

இழிவு - இளிவு இரண்டும் ஒன்றா? - பிழையற்ற தமிழ் அறியும் முயற்சியாக ஒரு தொடர்...
தமிழ் அறிவோம்!
தமிழ் அறிவோம்!
Updated on
2 min read

நாள்களா? நாட்களா?

நாள்+காட்டி= நாட்காட்டி, நாள்+குறிப்பேடு= நாட்குறிப்பேடு. இவை சரியானவை. ஆனால் நாள்+கள் = நாட்கள்- பிழையுடையது. கள் என்பது இங்கே பன்மை விகுதி மட்டுமே. சொல்லோடு சொல் சேர்ந்தால் புணர்ச்சி விதி வேண்டும். ஒரு சொல்லோடு 'கள்' என்பது சேரும்போது புணர்ச்சி விதி பொருந்தாது. 'கள்' என்பது பெயர்ச் சொல்லாயின் மயக்கம் தரும் ஒரு குடிவகைப் பெயர் என அறிவோம். கள் பழந்தமிழ்ப் பொருள். நாட்கள் எனில் நாள்பட்ட கள்- மிகப் பழைய கள் என்று பொருளாம். நாள் பட்ட கள் 'சுர்' என்று கடுப்புமிக்கதாய் இருக்கும் என்பர் பட்டறிவுடையோர். ஆகவே நமக்கெதற்கு நாட்கள்? நாள்கள் என்று இயல்பாக எழுதுவோமே?

பவழமா? பவளமா?

தமிழில் 'ழ' கரம் தனிச் சிறப்புடைய ஒலி. அதனால் இதற்குச் சிறப்பு ழகரம் என்று பெயர். தமிழைத் தவிர, வேறு எந்த மொழியிலும் இவ்வெழுத்தை ஒலி மாறாமல் உச்சரிக்க முடியாது. தமிழர் எவரும் ழகரத்தைப் பிழையாக உச்சரிக்கக் கூடாது என்று முன்னரே நாம் வலியுறுத்தியுள்ளோம். சரி... அதற்கென்ன இப்போது?

பவழம் என்றாலும் பவளம் என்றாலும் பொருள் ஒன்றே. பவழம் என்று உச்சரிக்கத் தெரியாதவர்கள்- உச்சரிக்க முடியாதவர்கள் பவளம் என்று பிழையாக ஒலிக்கிறார்கள் என்று ழகரப் பற்றுக் காரணமாக உரைப்பார் உளர். அவர்களின் கருத்து பிழையானது. தமிழில் எந்த அகரமுதலியை (அகராதியை) எடுத்துப் பார்த்தாலும் பவழம்- பவளம் என்றுதான் போட்டிருக்கிறார்கள். பவளம்- பவழம் என்று எழுதியிருப்பதோடு ஒன்பான் மணிகளுள் (நவரத்தினங்களுள்) ஒன்று என்றும் எழுதியிருக்கிறார்கள். 'மணிமிடைப் பவளம்', 'பவளக் கூர்வாய் செங்கால் நாராய்' போன்ற பழந்தமிழ்த் தொடர்களைச் சான்றாகக் கொள்க.  'பவழத்தன்ன மேனி ' எனும் தொடரும் பழந்தமிழில் உண்டு. ஆதலின் பவழம், பவளம் இரண்டும் ஒன்றே.

ஆதலின் எழுபத்தைந்தாம் அகவை நிறைவு கொண்டாடுபவர்கள் பவள விழா அழைப்பிதழ் என்று அச்சடித்திருந்தால், அவர்கள் மீது சீற்றம் கொள்ள வேண்டாம். தமிழ் அறியாதவர்கள் என்று வெற்றுரையும் வீச வேண்டாம்.

இழிவு - இளிவு இரண்டும் ஒன்றா?

இழிவு என்பதில் சிறப்பு ழகரம். இளிவு என்பதில் பொது ளகரம். திருக்குறள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களில் இரு சொற்களையும் காணலாம். தமிழில் ஆழமாக எதுவும் அறியாமல், ழ மீது கொண்ட மிகையார்வம் காரணமாக, இளிவை இழிவு என்று திருக்குறளிலும் மாற்றிவிட்டார்கள் என்று திருக்குறள் பதிப்பாசிரியர்கள் மீது, ஏன்... திருவள்ளுவர் மீதே குற்றம் சாட்டுகிறவர் உண்டு.

இரு சொற்களுக்கும் பொதுவான பொருள் ஒன்று உண்டு. அது தாழ்வு அல்லது கீழான எனும் பொருளாகும். ஆனால் இரு சொற்களுக்குமிடையே நுட்பமான பொருள் வேறுபாடு உண்டு. இழிதல் என்றால் இறங்குதல். மலையிலிருந்து அருவி கீழே இறங்கினால், 'இழி தரும் அருவி' என்றனர். தலையின் இழிந்த மயிரனையர் என்றார் திருவள்ளுவர். தலையிலிருந்து கீழே இறங்கிய (கொட்டிய) மயிர் என்பது உவமை. அதற்கு என்ன மரியாதை உண்டு? அதுபோலவே தம் நிலையிலிருந்து கீழே இறங்கியவரும் (தாழ்ந்தவரும்) ஆவார் என்பது பொருள்.

ஆனால் இளிவு வேறு. எண் சுவையுடன் சாந்தம் என்று ஒன்று கூட்டி நவரசம் என்பர் வட நூலார். தொல்காப்பியம் உரைக்கும் மெய்ப்பாடுகள் எட்டுள் இளிவரல் என்பதும் ஒன்று.

'நகையே அழுகை இளிவரல் மருட்கை' என்று அந்த நூற்பா தொடங்குகிறது. இந்த இளிவரல்தான் இளிவு. இதன்பொருள் அருவருப்பு. திருக்குறளில், 'இளிவரின் வாழாத மானமுடையார் ஒளிதொழு தேத்து முலகு' என்றும் குறட்பா மானம் அதிகாரத்துள் உள்ளது. மானக்கேடு நேர்ந்தால் வாழாதவர்கள் மானம் உடையவர்கள். இளிவு என்பது மானக்கேடு (அவமானம்) என்ற பொருளில் வந்தமை காண்க. நிலையிலிருந்து தாழ்ந்தாலும் (இழிவு), இளிவு எனும்  மானக்கேடும் நுட்பான பொருள் வேறுபாடு கொண்டுள்ளமை அறிக. இழிவினும் கீழான அருவருப்பாவது இளிவு.

திருக்குறளில் வரும் இளிவு எனும் சொல்லை எடுத்துவிட்டு, இழிவு என்னும் சொல்லைச் சேர்த்திட நாம் யார்? நமக்கு என்ன உரிமை இருக்கிறது? திருக்குறளில் கைவைக்கும் அளவுக்கு நாம் பேரறிவாளரா? என்று சிந்திக்க வேண்டும், இப்படியொரு சிந்தனையைக் கிளப்பியவர்கள்.

(தமிழ் வளரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com