பொருத்தும் பொறுத்தும், என் - எனது... பிழையற்ற தமிழ் அறிவோம்! -16

திருவளர்ச்செல்வியும் திருவளர்செல்வியும் ஒற்றியூரும் வெற்றியூரும் - பிழையற்ற தமிழ் அறியும் முயற்சியாக ஒரு தொடர்...
தமிழ் அறிவோம்
தமிழ் அறிவோம்
Published on
Updated on
2 min read

பொருத்து-பொறுத்து: ஒரு விளக்கம்

பொருத்து எனும் சொல், ஒன்று சேர், இணைப்புச் செய் என்று பொருள்தருகிற கட்டளைச் சொல். 'செய்' என்னேவல் வினை முற்று என்பர் இலக்கணப் புலவர். பொறுத்து எனில் தாங்கி, ஏற்று என்று பொருள் தருகிற எச்ச வினைச் சொல் (வினையெச்சம்). இச்சொல் முற்றுப் பெறவில்லை. வேறொரு சொல் கொண்டு முடிக்க வேண்டும்.

நீரின் அளவைப் பொறுத்து தாமரை உயரும். இந்த எடுத்துக்காட்டில் பொறுத்து எனும் சொல் உயரும் என்ற சொல் கொண்டு முடிந்தது. என்னைப் பொறுத்தவரையில் என்றால் நான் கொண்டுள்ள கருத்தைக் கொண்டு பார்க்கும்போது எனும் பொருள் தருவதைக் காணலாம். என்னைப் பொருத்தவரையில் என்றெழுதினால் என்னைப் பொருத்த (ஒன்று சேர்க்க) வரையில் (அளவில்) வாக்கியம் சரியாக எப்பொருளும் தராமல் சிதறிப் போகிறது.

கருநாடகச் சட்டப் பேரவைப் பெரும்பான்மை பற்றிய முடிவு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பொறுத்தே அமையும். இந்தச் சொற்றொடர் தெளிவாக இருக்கிறது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தாங்கி அல்லது ஏற்று முடிவு காணப்படும் என்பதில் எந்தக் குழப்பமும் இல்லை. உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பைப் பொருத்தே என்றால் தீர்ப்பைப் பொருத்து - சேர்த்துவிடு என்று ஏவல் முடியும் சொல்லில் 'ஏகாரம்' பொருத்தே எப்படிப் பொருந்தும்?

பொருப்பு எனும் சொல்லுக்குப் பக்கமலை அல்லது மலை என்று பொருள். பொறுப்பு எனில் கட்டாயக் கடமை (உத்தரவாதம்). இந்தச் செயலுக்கு யார் பொறுப்பு? இந்த நிலையத்தின் பொறுப்பாளர் யார்? போன்ற தொடர்களை நோக்குக. பொறை - பொறுமை; பொறுத்தல் - பிழையை மன்னித்தல் (தாங்கிக் கொள்ளுதல் எனக் காண்க)

'அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை.'

நிலம், தன்னை ஆழமாக வெட்டி அல்லது குழிதோண்டி எடுப்பவர்களையும் சாய்த்துவிடாமல், தாங்கிக் கொள்வது போல (வெட்டுபவர் அந்த நிலம் மீது நின்றே வெட்டுகிறார்) தம்மையே இகழ்ந்து - பழித்துப் பேசுபவர்களையும் தாங்கிக் கொள்ளுதல் தலையாய பண்பு.

நீதிமன்றத் தீர்ப்பைத் தள்ளிவிட முடியாது. அதனையும் தாங்கித் தன் பெரும்பான்மை பற்றி முடிவு செய்யப்படும் என்றால் இதில் என்ன பிழையிருக்கிறது ஐயா?

உறவும் உடைமையும்

நமக்கு உறவாக இருப்பவர்கள் நம் குடும்பத்தார், சுற்றத்தார் இவர்களைச் சுட்டிச் சொல்லும்போது எப்படிச் சொல்லுவது? எழுதுவது?

வழக்கமாக, எனது மைத்துனர், எனது தம்பி, எனது மாமா என்று எழுதுகிறார்கள். இப்படி எழுதுதல் பிழை. திருமண அழைப்பிதழ்களில் எனது மகன், எனது மகள் என்று குறிப்பிடுவார்கள். என் மகள், என் மகன் என்றே குறிப்பிட வேண்டும். அல்லது எனக்கு மகன், எனக்கு மகள் என இலக்கணத்தோடு இயம்பலாம். எனது புத்தகம், எனது வீடு, எனது நிலம் என்று உடைமைப் பொருள்களைச் சுட்டலாம். உறவுப் பெயர்களைச் சுட்டுதல் பிழை.

திருமண அழைப்புகளில் மற்றொரு பிழை வழக்கமாக அச்சேறி வருகிறது. திருவளர்ச்செல்வன், திருவளர்ச்செல்வி என்று கூடாத இடத்தில் ஒரு 'ச்' சேர்த்துவிடுகிறார்கள். திருவளர் செல்வன், திருவளர் செல்வி என்று வினைத் தொகையாக (திருவளர்ந்த, வளருகின்ற, வளரும்) எழுதுவதே சரி.

பிழையும் திருத்தமும் நூல்கள் அச்சிட்டு முடித்த பின் மீண்டும் ஒருமுறை சரிபார்த்துப் பிழைகளைப் பட்டியலிட்டுத் திருத்தமும் வெளியிடுவார்கள். ஊர்ப் பெயர்களில் ஏற்பட்டுவிட்ட பிழைகள் பற்றி ஒரு பட்டியல் முன்னரே கொடுத்துள்ளோம். விட்டுப்போன ஊர்கள் சில பற்றி நினைவு வந்தது.

திருவொற்றியூர் : சென்னை மாநகரின் வடபகுதியில் அமைந்த திருத்தலம், சுந்தரர் வரலாற்றில் இடம் பெற்றது. இத்தலத்து ஈசனை 'வழுக்கி வீழினும் திருப்பெயரல்லால் மற்றுநான் அறியேன் மறுமாற்றம்' எனச் சுந்தரர் பாடி உருகினார். திரு ஒற்றியூர் என்பதைத் திருவெற்றியூர் என்று கற்றவர்களும் ஊடகச் செய்தியாளரும் சொல்லும்போது மனம் வருந்துகிறது.

மயில் தொடர்புடைய தலபுராணம் கொண்ட மயிலாப்பூரும் பாடல் பெற்ற திருத்தலம்.

திருஞானசம்பந்தர், எலும்பைப் பெண்ணுருவாக்கிய இடம் இது. மயிலா என்பதை மைலா ஆக்கிவிட்டார்கள். மைலாப்பூர் என்று எழுதுவது பெருந்தவறு. மயிலாப்பூர் என்னும்போது ஒலிக்கின்ற மயில், மைலாப்பூர் என்னும்போது ஒளிந்துகொண்டதே.

பூந்தமல்லி : பூந்தமல்லி என்று பொதுமக்களால் அழைக்கப்படும் ஊரினைக் கற்றவர்கள் பூவிருந்தவல்லி என்று திருத்தமாகச் சொல்லுவதாக எண்ணி மாற்றியுள்ளார்கள். வல்லி எனில் கொடி. பூக்கள் நிரம்பப் பூத்திருந்த கொடி என்று விளக்கம் சொல்லுவார்கள். பூந்தண்மலி - பூக்களின் தண்மை (குளிர்ச்சி) மலிந்திருக்கும் (நிறைந்திருக்கும்) ஊர் என்பதே சரியான பழைய பெயராகும்.

(தமிழ் வளரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com