எழுத்துகளா, எழுத்துக்களா? அண்ணாதுரையா, அண்ணாத்துரையா? பிழையற்ற தமிழ் அறிவோம்! - 8

வலி மிகுதல், மிகாமை பற்றிய சில விளக்கங்கள் - பிழையற்ற தமிழ் அறியும் முயற்சியாக ஒரு தொடர்...
தமிழ் அறிவோம்
தமிழ் அறிவோம்
Published on
Updated on
2 min read

இலக்கண விளக்கம் எழுதிக்கொண்டே போனால் அது விரிந்து கொண்டே செல்லும். எளிதாகவும், சுருக்கமாகவும் சிலவற்றை அறியுமாறும் எழுதினோம்.

ஒற்றுமிகுதல் தொடர்பாக அறியத்தக்க மற்றும் இரண்டு செய்திகளையும் தருகிறோம். உவமைத் தொகை என்பது ஒன்று. ஒன்றை மற்றதற்கு உவமையாகச் சொல்லும்போது உவமை உருபு (போல, ஒத்த, அனைய, நிகர்த்த ) மறைந்திருப்பது உவமைத் தொகை. (எ-டு) முத்துப்பல் என்பது முத்து போன்ற பல் எனும் பொருளது. இங்கே உவமைத் தொகையில் சந்தி 'ப்' மிகுந்தது. உவமை விரியில் மிகவில்லை.

குற்றியலுகரம் என்பதும் அறிய வேண்டிய ஒன்று. இதை விளக்கவே பல பக்கங்கள் எழுத வேண்டியிருக்கும். இயன்றவரை சுருக்கமாகச் சொல்வோம். குறைந்த ஓசையுடைய 'உ' எனும் எழுத்து. உகரத்திற்கு ஒரு மாத்திரை. குறைந்த உகரத்திற்கு அரை மாத்திரை. தொடர் வகையான ஆறு வகைப்படும், சொல்லின் ஈற்றில் வல்லொற்றின் மீது உகரம் ஏறி (சேர்ந்து) வருதல் இதன் இயல்பு (எ-டு) குரங்கு - இச்சொல்லின் 'கு' வில் உள்ள உகரம் குறைந்து ஒலிக்கும். முழுமையான உகரம் எது? அது முற்றியலுகரம். பசு - 'சு' வில் உள்ள உகரம் முழுமையானது.

வன்தொடர்க் குற்றியலுகரம் முன் வல்லொற்று மிகும் என முன்னர் சொல்லியிருக்கிறோம். பத்து - இதில் உள்ள 'உ' (த்+உ) அயலில் "த்' என்ற வல்லெழுத்தை நோக்க வன்தொடர்க் குற்றியலுகரமாம். பத்துப்பாட்டு இங்கே வல்லொற்று மிகுதலைக் காண்கிறோம். எட்டுத் தொகையும் இவ்வாறே.

எழுத்து என்பதில் வன்தொடர்க் குற்றியலுகரம் உள்ளது. 'கள்' எனும் பன்மை விகுதி சேரும்போது வல்லொற்று மிகுமா? 'கள்' ஒரு தனிச் சொல் அன்று; பன்மை காட்டும் விகுதி. ஆதலின் எழுத்துகள் என்பதே இயல்பானது. இவ்வாறே தலைப்புகள், இனிப்புகள் என்று இயல்பாக எழுதுவதே பொருத்தம். ஆயினும் பழந்தமிழ்ப் புலவர் (பரிமேலழகர் உள்ளிட்டவர்) எழுத்துக்கள் என்று எழுதியுள்ளார்கள். ஆதலின் இருவேறுமுறையிலும் எழுதலாம். ஆயினும் இனிப்புக்கள் வழங்கப்பட்டன எனும்போது இனிப்புச் சுவையுடைய கள் எனும் பொருள் காணக்கூடும். ஆதலின் இனிப்புகள் என்றே எழுதுக.

வலி மிகுதல் - மிகாமை சில குறிப்புகள்:

தமிழ் பேசு, தமிழ்ப் பேச்சு:

மேற்காணும் இரண்டிலும் தமிழ் என்பது நிலைமொழி. பேசு, பேச்சு என்பன வருமொழி. ஒன்று இயல்பாகவும், ஒன்று 'வலி' மிகுந்தும் வந்திருப்பது ஏன்? தமிழ் பேசு என்பது தமிழில் பேசு என விரியும். ஆதலின் ஐந்தாம் வேற்றுமைத் தொகை. தமிழ்ப் பேச்சு என்பது தமிழில் ஆகிய பேச்சு அல்லது தமிழில் பேசப்பட்ட பேச்சு என விரியும். இதனில் 'இல்' உருபோடு பிறிதொரு சொல்லும் மறைந்திருப்பதால் உருபும் பயனும் உடன் தொக்க தொகை. தமிழ் படி- தமிழைப் படி - இரண்டாம் வேற்றுமைத் தொகை, தமிழ்ப்படி - தமிழில் உள்ள படி - உருபும் பயனும் உடன் தொக்க தொகை. தமிழ்ப் படம், தமிழ்ப்பாடம், தமிழ்ப் பேராசிரியர் என்பவற்றை விரித்துப் பொருள் காண்க.

ஊர்ப் பெயர்களின் முன்னர் க, ச, த, ப வந்தால் வல்லெழுத்து மிகும்.

(எ-டு) திருவாரூர்த் தமிழ்ச்சங்கம்

சென்னைக் கம்பன் கழகம்

அம்பத்தூர்த் தொழிற்பேட்டை

ய், ர், ழ் ஈறாக வரும் சொற்கள் முன் வல்லெழுத்து பெரும்பாலும் மிகும். (எ-டு) தாய்ப்பாசம், வேர்க்கடலை, யாழ்ப்பாணம், நாய்க்குட்டி, நீர்ச்சோறு, கூழ்ச்சட்டி

காய்கதிர்-வினைத்தொகையில் மிகவில்லை (காய்ந்த கதிர், காய்கின்ற கதிர், காயும் கதிர்)

மோர் குடி - வேற்றுமைத் தொகையில் மிகவில்லை (மோரைக் குடி)

தாழ் சடை - இதுவும் வினைத் தொகை - மிகவில்லை.

வேய்ங்குழல் என்று வல்லொற்று மெல்லொற்றாகத் திரிதலும் உண்டு (வேய்- மூங்கில்)

'இயல்பினும் விதியினும் நின்ற உயிர் முன் கசதப மிகும்' என்பது பொதுவிதி. உயிரோசை இறுதியில் சொற்கள் முன் வரும். க, ச, த, ப க்கள் மிகும்.

(எ-டு) வரச் சொன்னான் (ர்+அ=ர)

பலாப் பழம் - (ல்+ஆ=லா)

கரிக்கட்டை - (ர்+இ=ரி)

எதிர்மறைப் பெயரெச்சத்தில் (வலி) மிகாது.

(எ-டு) வாடாத பூ (த்+அ=த)

அண்ணாதுரையா? அண்ணாத்துரையா?

துரை என்பது (Durai) வட சொல். மெல்லொலி கொண்டது. ஆதலின் 'த்' மிகாது. ஆனால் துரை (Thurai) என்று அழுத்தி ஒலித்தால் தமிழ் வல்லெழுத்தாகி அண்ணாத்துரை என்று வரும். ஒலிக்கும் முறையை ஒட்டி 'வலி' மிகுதலும் மிகாமையும் ஏற்படுகின்றன.

(தமிழ் வளரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com