பற்களும் முட்செடியும்... பிழையற்ற தமிழ் அறிவோம் - 71

வாழ்த்துகளா, வாழ்த்துகளா... எப்படி வேண்டுமானாலும் வாழ்த்தலாம்!
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
2 min read

'ஆண்டுதோறும் சதய நட்சத்திரத்தன்று மாமன்னன் இராசராசனுக்கு விழா கொண்டாடப்பட்டு வருகிறது' - இது ஒரு தொலைக்காட்சிச் செய்தி. இதில் பிழையொன்றும் இல்லை. ஆனால் தெளிவு இல்லை? எப்படி?

சதய நட்சத்திரம் ஓர் ஆண்டில் பன்னிரண்டு. ஒரோ வழி பதின்மூன்று வருமே. இருபத்தேழு நட்சத்திரங்கள் (விண்மீன்கள்) சுழற்சிமுறையில் வருவதால் மாதாமாதம் சதயம் வருகிறதே!

என்ன சொல்ல வேண்டும்? ஆண்டுதோறும் 'ஐப்பசி - சதய நட்சத்திரத்தன்று' என்று மாதத்தின் பெயரையும் சேர்த்துச் சொல்லியிருக்க வேண்டும். ஐப்பசித் திங்கள் சதய விண்மீன் நிலவும் நாளில் இராசராசச் சோழன் பிறந்தான் என்பது கல்வெட்டுச் செய்தி. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பத்தாம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து ஆட்சி செய்த மாமன்னன் இராசராசன்.

ஒரு கட்டுரையில் படித்தோம்: "தீக்குச்சி எரிந்து கையைச் சுட்டு - கொப்புளம் வருமளவும் தன்னை மறந்திருக்கிறதுதானே எழுத்தாளன்?'' இத்தொடரில் பிழையுள்ளதா? ஆம், உள்ளது.

மறந்திருப்பவன்தானே எழுத்தாளன் என்று இருந்தால் பிழையற்று அமையும். இத்தொடரைச் சிலர் வலிந்துபேசி சரிதானே என்பர். எப்படி? தன்னை மறந்திருக்கிறது எழுத்தாளன் தன்மை - அதை உடையவன் எழுத்தாளன் என்பதை அப்படி அழகுற எழுதியிருக்கிறார் என்பார்கள். இந்த முட்டுக்கால்கள் எல்லாம் நில்லா. பிழையைப் பிழை என ஏற்பதே அழகு.

எழுத்துக்களா? எழுத்துகளா?

கள் எனும் பன்மை விகுதி சேரும்போது புணர்ச்சி விதி பொருந்தாது என்று முன்னரே நாம் எழுதியிருந்தோம். அதனால் நாள்கள், வாழ்த்துகள் என இயல்பாக எழுதுதல் நன்று எனக் குறிப்பிட்டோம். ஆயினும் வாழ்த்துக்கள் என வல்லொற்று மிகுந்து ஒலிப்பினும் பிழையில்லை என்பதையும் குறிப்பிட்டோம். ஆனால் 'இனிப்புக்கள் வேண்டா' (பொருள் திரிபு ஏற்படும் என்பதால்) என எழுதினோம்.

வாழ்த்துகள், எழுத்துகள் என எழுதுதல் பிழை என்று கருதுவார் உளர். அவர்களுக்காக ஒரு விளக்கம். திருக்குறள் உரையாசிரியர் பரிமேலழகர், 'எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை முதன்மையாக உடையது போல' என்று உரை எழுதுமிடத்து எழுத்துக்கள் என்றாண்டிருப்பது காண்க. அன்றியும் நன்னூல் விருத்தியுரைக்கு குறிப்புரை எழுதிய பெரும்புலவர் ச. தண்டபாணி தேசிகரும் எழுத்துக்கள் என்றே எழுதியுள்ளார். தொல்காப்பியத்துக்கு சுருக்கமான உரை எழுதியுள்ள மூத்த தமிழறிஞர் தமிழண்ணலும் எழுத்துக்கள் என அவ்வுரையில் எழுதியுள்ளார். இவ்வாறு எழுத்துக்கள் என்று வல்லொற்று மிகுவதற்கும் முன்னோர் சான்று உண்டு.

எழுத்துக்கள் என்பது சரியென்றால் வாழ்த்துக்கள் என்று எழுதுவதும் சரிதானே? எழுத்து, வாழ்த்து இரண்டும் வன்தொடர்க் குற்றுகரங்கள். அதனால் அன்பர்களே, 'எமதுள்ளம் நிறைந்த நல்வாழ்த்துகள்' எனவும், நல்வாழ்த்துக்கள் எனவும் இருவகையானும் சொல்லலாம், எழுதலாம்.

உரையாசிரியர்களைச் சான்று காட்டியுள்ளீர்களே, மூல ஆசிரியர்கள் எப்படி எழுதியுள்ளார்கள்? எனும் ஐயம் எழும். 'எழுத்தென படுப அகர முதல் னகர இறுவாய் முப்பஃதென்ப' (தொல்) கள் விகுதியே பயன்படுத்தாமல் அக்காலத்து எழுதினர். அகர முதல் எழுத்தெல்லாம் (திருக்குறள்), 'உயிரும் உடம்புமாம் முப்பது முதலே' (நன்) இப்படியே மூலநூலார் யாரும் 'கள்' விகுதிக்கு இடம் தரவில்லை.

'லளவேற் றுமையில் றடவும்' என்னும் நன்னூல் சூத்திரம் வழியாக லகரம், ளகரம் எனும் இரண்டு ஈறும் வல்லினம் வந்தால் வேற்றுமையில் முறையே றகரம், டகரம் என மாறுபடும் என்றறிவோம். அதனால்தான் நாள் + கள் = நாட்கள் என்று சொல்லும் வழக்கம் தோன்றியது. ஆயினும் இலக்கியச் சான்றுகள் 'நாள்கள் செலத் தரியாது' என்பதுபோல் இயல்பாகவே உள்ளது. ளகரம், டகரம் ஆகவில்லை. காரணம் நாம் முன்னர் குறிப்பிட்டதேயாகும்; கள் விகுதி என்பது தனிச்சொல் அன்று.

மேற்கண்ட சூத்திரத்திற்கு உரை கண்டவர்களும் காட்டியுள்ள எடுத்துக்காட்டுகள்: கல் + குறிது = கற்குறிது

முள் + குறிது = முற்குறிது (குறிது - குறுகியது)

புல் + தரை = புற்றரை, முள் + செடி = முட்செடி என்பவற்றையும் நாம் காட்டலாம் (புல், தரை, முள், செடி - எல்லாம் தனித் தனிச் சொற்கள்)

கள் விகுதி சேரும்போதும் இடம் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை மறுக்க முடியாது. பற்கள், சொற்கள் எனச் சொல்லுகிறோம் (பல்+கள், சொல்+கள்). புட்கள் (புள்+கள்) பறந்தன (புள் - பறவை), பசும் புற்கள் முளைத்தன (புல்+கள்). ஆகவே கள் ஈறு சேரும்போது திரிதல் (மாறுபடுதல்) காண்கிறோம். ஏனிந்த முரண்பாடு?

(தமிழ் வளரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com