
பல+பல- இவற்றைச் சேர்த்தால் பற்பல, பலப்பல, பலபல எனவும், சில+சில இவற்றை இணைத்தால் சிற்சில, சிலச்சில, சிலசில எனவும், மூன்று வகையாகவும் வருதற்கு இலக்கணம் விதி வகுத்துள்ளது. ஆனால் 'கள்' என்பது சேருங்கால் என்னவாகும் என விதி வகுக்கப்படவில்லை. காரணம், கள் எனும் பன்மை விகுதி பிற்காலத்தது. முதலெழுத்து முப்பது, பத்துக் குற்றம், பறவை நூறு, சொல் பல பேசி, அழகு பத்து, உத்தி முப்பத்திரண்டு என்று எங்கும் 'கள்' விகுதியின்றியே இலக்கணம் நமக்குக் காட்டுகிறது. 'பாங்கலம் நிமித்தம் பன்னிரண்டென்ப' (தொல்). நிமித்தங்கள் எனும் சொல்லாட்சியில்லை.
ஒரு சொல்லிலேயும் இம்மாற்றம் இடம் பெற்றுள்ளது என்பதனையும் நாம் புறந்தள்ள முடியாது. நிற்க (நில்+க), கற்க (கல்+க) நில், கல் என்பன ஏவல் பகுதிகள். 'க' என்பது வியங்கோள் விகுதி. பண்டு தொட்டே இலக்கண நெறியுள் உடன்படல், மறுத்தல் இரண்டும் உண்டாதலின் நாமும் சிலவற்றை உடன்பட்டும் சிலவற்றை மறுத்தும் எழுதினோம்.
இவையெல்லாம் ஆய்வு நிலைச் செய்திகள். எளிய ஒன்றை இப்போது காண்போம். வாக்கியப் பிழை - ஒருமை, பன்மை கெடல். இதுபற்றி முன்னரும் பல எடுத்துக்காட்டுகள் தந்துள்ளோம்.
'இப்போது நினைத்தாலும் மனமும் கண்களும் கலங்குகிறது' என்று ஓர் எழுத்தாளர் ஒரு சிறுகதையில் எழுதியுள்ளார். மனமும் கண்களும் கலங்குகின்றன என்று பன்மையில் முடித்திட வேண்டும். சிறிய பிழைதான். ஆனால் கவனத்தில்கொள்ள வேண்டிய ஒன்று.
இலக்கியச் சொற்கள் சற்றே வடிவம் மாறுபட்டு இன்னும் கூட எளிய மக்களின் பேச்சு வழக்கில் ஆளப்படுகின்றன.
'ஞாயும் யாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்'
பலரும் அறிந்த குறுந்தொகைப் பாட்டின் தொடக்கம் இது. ஞாய் - என்தாய்; யாய் உன்தாய்:
எந்தை - என் தந்தை; நுந்தை - உன் தந்தை தன்பால் அன்பால் வந்த வீடணனைச் சேர்த்துக் கொண்ட போது இராமன், (முன்னரே குகன், சுக்கிரீவனோடு அறுவர்) 'நின்னொடும் எழுவ ரானோம் (வீடணா உன்னோடு நாம் எழுவர் உடன்பிறப்புகள் ஆனோம்), இப்படிப் புதல்வர்களால் தந்தை தயரதன் பொலிந்தான் (சிறந்தான்) எனக் கூறுமிடத்து, இராமன் தன் தந்தையை, வீடணன் தந்தை எனும் பொருளில் (சிறப்பித்துப்) 'புதல்வரால் பொலிந்தான் நுந்தை' என்பான். நும் (உம்)+தந்தை = நுந்தை. இன்றைக்கும் சிலர் ஙொப்பன் (உன் அப்பன்) ஙோயி (உன் தாய்) எனும் கூற்றில் பழைய தமிழ்ச் சொல்லாட்சியைக் காண்க.
செவலய எடத்துல கட்டு: செவல (சிவப்பு) நிறமுடைய மாட்டை ஏரில் இடப்பக்கம் கட்டுக. சிவப்பு நிறமுடைய மாடு என்பதற்குப் பதிலாக செவல என்னும் பெயர் வாக்கியத்தில் வந்துள்ளது. இஃது ஆகு பெயர் என்பதாகும். ஒன்றின் பெயர் அதனோடு தொடர்புடைய வேறொரு பொருளுக்குப் பெயராகி வருவது ஆகுபெயர். ஈண்டு செவல (சிவப்பு) என்னும் நிறத்தின் (குணத்தின்) பெயர் அந்நிறமுடைய மாட்டுக்குப் பெயராகி வந்ததால் இது பண்பாகு பெயர் (குணவாகு பெயர்) என்று சொல்லப்படும்.
பெயர்கள் பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் எனும் அடிப்படையில் ஆறாகச் சொல்லப்படும்.
(முழுப்) பொருளின் பெயர் - ஆலமரம், மனிதன்
இடப்பெயர் - சென்னை, கல்லூரி
காலப் பெயர்- ஐப்பசி, திசம்பர்
சினைப் பெயர் - கிளை, இலை, கை, கால்
குணப் பெயர் (பண்புப் பெயர்) - கறுப்பு, பசுமை
தொழில் பெயர் - வற்றல், பொங்கல்
(நிறம், குணத்தில் அடங்கும்)
சுறுப்புப் பணம் என்று இந்த நாளில் பேசுகிறோம். இஃதென்ன? பணம் கரிய நிறத்தில் இருக்குமா? இல்லை. இது கள்ளப் பணம். அஃதாவது கணக்கில் வாராது சேர்க்கப்பட்ட பணம். தவறான வழிகளில் சம்பாதித்த பணம். கருமை நிறத்தை (கறுப்பை) தவறான செயலுக்குரிய பெயராக்கியுள்ளோம்.
பெயர்கள் ஆறு எனப் பிரித்தாற் போல் ஆகு பெயர்களும் ஆறு பிரிவுகளாகும். தாமரை போல் மலர்ந்த முகம் - தாமரை என்பது முழுப் பொருள்.
மலர், மொட்டு, இலை, தண்டு அனைத்துக்கும் உரிய பெயர். இவ்விடத்து மலருக்கு (சினைக்கு) மட்டும் ஆகியுள்ளது. இது பொருளாகு பெயர் அல்லது முதலாகு பெயர் என்று சொல்லப்படும். முழுப்பொருளாயின் பெயர் அதன் உறுப்புக்கு (சினைக்கு) ஆகி வருவது இது.
கிரிக்கெட்டில் இந்தியா வென்றது - மட்டைப் பந்தாட்ட விளையாட்டில் இந்திய விளையாட்டுக் குழு வெற்றி பெற்றது. இந்தியா எனும் நம் நாட்டின் (இடப்) பெயர் - இந்நாட்டின் (இடத்தின்) விளையாட்டு வீரர்களுக்கு ஆகி வந்தது. இது இடவாகு பெயர்.
(தமிழ் வளரும்)
இதையும் படிக்க.. முருங்கை நமதே; தொடர் வண்டியும் சரியே! பிழையற்ற தமிழ் அறிவோம் - 73
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.