

எனக்கு 70 வயதாகிறது. எந்த நோயுமில்லை. நல்ல சத்துள்ள உணவாகிய ராகி, அரிசி, கோதுமை, சத்துமாவு, காய்கறி, அவல் போன்றவைதான் சாப்பிடுகிறேன். இப்படி இருந்தும் சமைக்கவே உடலில் சக்தி இல்லை. காலை 5 முதல் மாலை 7 மணிக்குள் சுமார் 6-7 மணிநேரம் படுக்கை ஓய்வுதான். இந்தத் தள்ளாமை, சோம்பல் நீங்கி பகலில் படுக்கையில் படுக்காமல் சுறுசுறுப்பாக இருக்க வழி என்ன?
நல்ல உடல் பலம், புஷ்டி, பசி, மனத் தெளிவு, சுறுசுறுப்பு ஆகியவை உங்களுக்குத் தேவைப்படுகிறது. அதற்கு நன்கு முற்றிய நெல்லிக்காய்களை அலம்பி மேல் ஈரத்தைத் துடைத்துவிட்டு ஒரு வெள்ளி அல்லது எவர்சில்வர் கம்பி அல்லது நீண்ட கருவேலம்முள் அல்லது திடமான ஈர்க்கு இவற்றில் ஒன்றால் நெல்லிக்காய்களில் 10-15 குத்து குத்தி ஒரு பீங்கான் ஜாடியிலிடவும். பிறகு நெல்லிக்காய்கள் நிரம்புமளவிற்குத் தேன் நிரப்பி மூடிவிடவும். தேனிற்குப் பதில் நல்ல கெட்டியான சர்க்கரைப் பாகை ஊற்றியும் வைக்கலாம்.
தினமும் 3-4 மணி நேரம் மூடியை அகற்றிச் சுத்தமான மெல்லிய துணியால் வேடுகட்டி, வெயிலில் வைத்திருக்கவும். இவ்விதம் 15 நாட்கள் செய்ததும் ஜாடியை நன்கு மூடி ஈரக் கசிவு இல்லாததும் ஈ எறும்பு தீண்டக் கூடாததுமான இடத்தில் பத்திரப்படுத்திக் கொள்ளவும். நன்கு ஊறியதும், ஈரப்பசையற்ற சுத்தமான ஸ்பூன் உதவி கொண்டு கொட்டைகளை அகற்றிவிடவும். இதைத் தினமும் காலையில் 1, 2 நெல்லிக்காய்களைச் சாப்பிட்டு வரவும்.
ஆமலகரசாயனம் என்ற ஒருவகைத் தயாரிப்புமுறை இருக்கிறது. பால் முள்ளியாகத் தயாரித்த நெல்லி முள்ளியின் சூரணம் 100 கிராம் எடுத்துப் பீங்கான் பாத்திரத்திலிட்டு அதில் முற்றிய நெல்லிக்காயின் சாறு பிழிந்து நெல்லி முள்ளிச் சூரணம் குழம்பாக ஆகும்வரை சேர்த்த பிறகு உலர்த்திவிடவும். இதற்குச் சுமார் 200 மில்லி லிட்டர் திரவம் இருந்தால் போதுமானது. இப்படி 15 -30 நாள் வரை தினமும் காலையில் புதிது புதிதாகச் சாறு சேர்த்து மாலைக்குள் அந்தச் சாறு சுண்டுமளவிற்கு வெயிலில் வைத்து மறுபடியும் மறுநாள் காலை சாறு சேர்க்கவும். இவ்விதம் 15 அல்லது 20 நாட்கள் செய்ததும் உலர்த்திச் சமஅளவு குழைவு ஜீனி சேர்த்து வைத்துக் கொள்ளவும். இதில் காலையில் 1/2 - 1 ஸ்பூன் அளவு சாப்பிட்டு, பிறகு, சூடான பசுவின் பால் சாப்பிட உடல் களைப்பு அயர்வு நீங்கி சுறுசுறுப்புடனிருக்கும். மூளை வேலை செய்பவர்களுக்கும் பாலர்களுக்கும் வயதானவர்களுக்கும் ஏற்றது.
நெல்லிக்காய்ச் சாறு சேர்த்துத் தயாரித்த அய(லோஹ)பஸ்மமும், பவழம், முத்துச் சிப்பி,மான் கொம்பு இவற்றின் பஸ்மமும் உங்கள் உபாதையை நீக்கும் அருமருந்துகளாகப் பயன்படும். மேற்குறிப்பிட்ட ஆமலக ரசாயனம், சியவனப்பிராசம், தாத்ரீகிருதம் முதலிய மருந்துகள் நெல்லிக்காய் அதிகம் சேர்த்துள்ள மருந்துகளால் நீங்கள் நல்ல குணம் பெறலாம். ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி அவற்றைச் சாப்பிடவும்.
நீங்கள் காலையில் சிறிய அளவில் தேகப் பயிற்சியை முறையுடன் செய்யலாம். ஊளைச் சதை, கொழுப்பு, அஜீரணம், சோம்பல், திடீரெனத் தோன்றும் அவசரநிலைகளுக்கேற்ப உடல் வளையாமை, சிறிதளவு உழைத்தாலும் களைப்பு, வியர்வை மிகுதி போன்ற பல விரும்பத்தகாத உடற்கேடுகளை நீங்கள் தேகப் பயிற்சியின் மூலம் அகற்றிவிடலாம். பயிற்சி தரும் நல்ல ஆசானை அணுகி உங்கள் வயதிற்கேற்ற வகையில் பயிற்சிகளைக் கற்றுக் கொள்ளவும்.
களைப்பு நீக்கும் ஆயுர்வேத மருந்துகளில் கெடுதி விளைவிக்காதது, நல்லதை நிலைத்திருக்கும்படி தருவது சியவனப்ராசம், தசமூலாரிஷ்டம், அச்வகந்தாரிஷ்டம் முதலியவை. பசியைத் தூண்டி உணவைச் செரிக்கச் செய்து தேய்வை ஈடுசெய்யுமாறு சத்து ஊட்டம் பெற வசதி தருவது வில்வாதி லேகியம், ஜீரக வில்வாதி லேகியம், மாகபில்வாதிலேகியம் முதலியன. மன நிம்மதியும், வலிவும் அளிப்பவை, இறைவனின் சிந்தனையும், பிறர் நல்வாழ்வு பெறச் சிந்திப்பதும், அவற்றிற்கான பணிகளில் ஈடுபடுவதும், தசைகளின் இறுக்கத்தைத் தளர்த்தி மன இறுக்கத்தைப் போக்க வல்லவை, வேகமாக ஓடும் ஆறு, அருவிகளில் ஆற அமர குளித்தல், எவ்வகைச் சிந்தனையுமின்றி காலாற நடப்பது, வாரமிருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, நல்லெண்ணத்துடன் பழகும் பெரியோர்கள், நண்பர்களுடன் நற்பணிகளில் ஈடுபடுவது போன்றவை களைப்பை நீக்கும் அமுத ரசாயனங்களாகும்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.