கரூரில் உதவியது யார்? ஓடியது யார்? - முதல்வர் விஜய் பேச்சுக்கு கனிமொழி கண்டனம்!கரூர் நெரிசலில் பலியானவர்களுக்கு நினைவுச் சின்னம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் எப்போது? முதல்வர் விஜய் தகவல்தொகுதி மறுவரையறையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது! முதல்வர் விஜய் உறுதிகட்சி நிதி என்றவுடன் எதிர்க்கட்சியினர் ஒரே ஓட்டம்! முதல்வர் விஜய்
/

அந்த நாள் ஞாபகம்: கலைப் படத்துக்கு சம்பளத்தைக் குறைக்கலாமே!

அன்று காலையில்தான் சென்னையை அடுத்த பையனூரில், திரைப்படத் தொழிலாளர் குடியிருப்புக்கான அடிக்கல் நாட்டு விழாவை நடத்திவிட்டுத் திரும்பியிருந்தார், வி.சி.குகநாதன். திரைப்படத் தொழிலாளர் கூட்டமைப்பின் (பெப்ச

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 7:11 am IST

அன்று காலையில்தான் சென்னையை அடுத்த பையனூரில், திரைப்படத் தொழிலாளர் குடியிருப்புக்கான அடிக்கல் நாட்டு விழாவை நடத்திவிட்டுத் திரும்பியிருந்தார், வி.சி.குகநாதன். திரைப்படத் தொழிலாளர் கூட்டமைப்பின் (பெப்சி) தலைவர், கதாசிரியர், வசனகர்த்தா, இயக்குநர், தயாரிப்பாளர் என்று பன்முகம் கொண்டவர். எம்.ஜி.ஆர். நடித்த புதியபூமி படத்தின் மூலம் கதாசிரியராகத் திரையுலகில் பிரவேசித்து, இன்றளவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பவர்.

ஆர். செல்வராஜ் அன்னக்கிளி வெற்றிப்படத்தின் கதாசிரியர். அதனால் அன்னக்கிளி செல்வராஜ் என்றே அழைக்கப்பட்டவர்.

இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகே கிராமியக் கதைகள் தமிழ்த் திரையுலகில் கோலோச்சத் துவங்கின.அன்றைய இனிய மாலை வேளையில் பெப்சி அலுவலகத்தில் வி.சி.குகநாதனும் ஆர். செல்வராஜும்  தங்கள் மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

ஆர்.செல்வராஜ் : தொழிலாளர் யூனியன் தலைவர் என்கிற முறையில் உங்களிடம் ஒரு விண்ணப்பம்.. பெரிய பட்ஜெட் படத் தயாரிப்பாளர்கள்தான் இப்போது இருக்கிறார்கள். சின்ன பட்ஜெட் படத் தயாரிப்பாளர்கள் அருகிவிட்டனர். அப்படிப்பட்ட படங்களை வாங்கித் திரையிடக்கூட இப்போது யாரும் முன்வருவதில்லை...

வி.சி.குகநாதன் : "நாடோடிகள்', "வெண்ணிலா கபடிக்குழு', "பசங்க...' இவையெல்லாம் சின்னபட்ஜெட் படங்கள்தான். அவை பெரிய வெற்றி பெற்றிருக்கின்றன. நல்ல கதையம்சம் இருந்ததற்குக் கிடைத்த வெற்றி இது. பெரிய நட்சத்திரங்களையும் பிரம்மாண்டத்தையும் நம்பாமல் புதிய விஷயங்களைக் கதையாக்கினால் மக்கள் ஆதரிக்கத் தயாராகத்தான் இருக்கிறார்கள்.

செல்வராஜ்: நான் சொல்ல வந்தது... சிறிய படங்கள் தயாரிப்பில் இருக்கும்போது யாரும் கைகொடுக்க முன்வருவதில்லை என்பதைத்தான். குப்பை கூட்டும், கழிவுகளை அப்புறப்படுத்தும் துப்புரவுத் தொழிலாளர்கள் வாழ்க்கையை அவர்களோடு பழகி அறிந்து, அந்த

அனுபவத்தையே கதையாக்கி நான் ஒரு படம் எடுத்தேன். படத்தின் பெயர் "உப்பு'. இந்த துப்புரவுத் தொழிலாளர்கள் யாருடனும் பேசக் கூட மாட்டார்கள். அவர்கள், வருடத்தில் இரண்டு நாள்கள்தான் நம்முடன் பேசுவார்கள். ஒன்று தீபாவளி, மற்றொன்று பொங்கல். இந்த இரண்டு நாள்களிலும் நம்மிடம் இனாம் கேட்பார்கள்.

அதுதான் அவர்கள் நம்முடன் பேசும் பேச்சு. இவர்களை நாம் சக மனிதர்களைப் போலவே பார்ப்பதில்லை. இவர்கள் ஊரைச் சுத்தமாக்கிவிட்டு, தாங்கள் அசுத்தமாக வாழ்பவர்கள். அந்த அசுத்தத்தின் காரணமாக நோய் நொடிக்கு ஆளாகிக்கூட அவர்கள் இறப்பதில்லை. மாறாக பொருளாதாரக் கஷ்டத்தால் கந்து வட்டிக்குக் கடன் வாங்கி, வட்டிகட்டியே தேய்ந்து மாய்ந்து மடிந்து போகிறார்கள். இது வெளியில் தெரியாத உண்மை. இந்தப் படத்தை நான் 16 எம்.எம். மில் படமாக எடுத்து அதை 35 எம்.எம்.முக்கு மாற்றினேன். நடிகை ரோஜாகூட இதில் கதாநாயகியாக சம்பளம் வாங்காமல் நடித்தார்.

குகநாதன்: சொல்லுங்கள்..

செல்வராஜ்: இந்தப் படத்தில் பணியாற்றிய திரைப்படத் தொழிலாளி ஒருவர்கூட தன் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள முன் வரவில்லை. பெரிய பட்ஜெட் படங்களுக்கு ஒரு நாளைக்கு என்ன சம்பளம் வாங்குவார்களோ, அதே சம்பளம்தான் வாங்கிக் கொண்டார்கள். லாப நோக்கம் இன்றி இப்படிப்பட்ட படங்கள் எடுக்க ஒரு சிறிய தயாரிப்பாளர் முன் வரும்போது, தொழிலாளர்களும் உறுதுணையாக இருந்தால்தானே நல்ல சினிமா வரும், வளரும்? தலைவர் என்ற முறையில் இத்தகைய முயற்சிகளுக்கு தொழிலாளர்களை ஒத்துழைக்கச் சொல்லலாமே?

குகநாதன்: சிறிய படமாக இருந்தாலும், படம் வெற்றி பெற்றால் உங்களுக்கு லாபம் கிடைக்கலாம். சரியாக ஓடாவிட்டாலும் படத்தால் உங்களுக்கு மதிப்பு, மரியாதை கிடைக்கலாம், விருது கிடைக்கலாம். ஆனால் அதில் பணிபுரிந்த கூலித் தொழிலாளர்களுக்கு இவற்றில் ஏதாவது பங்கு கிடைக்குமா? இல்லை. நிச்சயமாக இல்லை. அவர்கள் நாளொன்றுக்கு 350 ரூபாய்க்கு வேலைக்கு வருகிறார்கள்.

அவர்களுக்கும் தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் என்ற உறவுச் சுமைகள் உண்டு. அவர்களையும் தாங்கியாக வேண்டும். விலைவாசி உயர்வு ஜெட் வேகத்தில் போகிறது. ஆனால், தொழிலாளர்கள் ஊதியம் பழைய நிலையிலேயே உள்ளது. பத்து வருடத்துக்கு முன்பு 250 ரூபாய் தினக்கூலி.

இப்போது 350 ரூபாய். பத்து வருஷத்துக்கு முன்பு வீட்டு வாடகை, அரிசி விலை, எண்ணெய் விலை, தங்கம், பெட்ரோல் டீசல் என்ன விலை? இப்போதைய நிலை என்ன? எனவே, தொழிலாளியின் சம்பளத்தைக் குறைக்கும்படி கட்டுப்படுத்த முடியாது. ஆனால் உப்பு படம்போல் சமூக மேம்பாட்டு நோக்கத்துடன் தயாரிக்கப்படும் படங்களுக்கு தொழிலாளர்கள் குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்து ஒத்துழைக்கும்படி நாங்கள் கேட்டுக் கொள்ளலாம். மனமுவந்து பணியாற்றக்கூடியவர்கள் இருக்கிறார்கள். மேலும், நான்கு தொழிலாளர் தேவைப்படும் இடத்தில் இரண்டு தொழிலாளர்களைக் கொண்டு சிக்கனமாக வேலையை முடிக்கச் செய்யலாம். நல்ல விஷயம்தான். ஆனால்.. அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது.

செல்வராஜ்: என்ன?

குகநாதன்: வருடத்துக்கு 125 படங்கள் இங்கே தயாரிக்கப்படுகின்றன. இதில் முப்பது படம் கலைப் படமாகத் தயாரிக்கப்பட்டால், அதில் தொழிலாளர் எல்லோரும் குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்ய முடியுமா? முடியாது. சமீபத்தில் நடிகர் எஸ்.வி. சேகர் ஒரு சிறிய பட்ஜெட் படம் தயாரிக்க முன்வந்தார். யூனியனுக்கு வந்து தன் திட்டத்தைத் தெரிவித்தார்.

அதன்படியே குறைந்த சம்பளத்துக்குப் பணியாற்றி ஒத்துழைப்பு கொடுத்தோம். நீங்களும் அப்படி அணுகியிருந்தால், ஆன உதவியைச் செய்திருப்போம். ஒருவேளை படம் ஓடி லாபம் வந்தால் மேற்படி தொழிலாளர்களுக்கு பங்கு தருவதற்கு சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களும் முன்வர வேண்டும்.

செல்வராஜ்: நிச்சயமாக. தயாரிப்பாளருக்கு சிறிய படம் மூலம் லாபம் வந்தால் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு பங்குத் தொகை கொடுப்பதோடு, அவர்களையே அடுத்த படத்துக்கும் பயன்படுத்தத் தொடங்குவார்கள். அங்கேயே உண்மையான தொழிலாளர் கூட்டுறவு உண்டாகிவிடும்.

குகநாதன்: இப்போது என்ன படம் எடுத்து வருகிறீர்கள்?

செல்வராஜ்: சமூக பிரச்னைதான். என்னைப் பாதித்த ஒரு சம்பவம். நேரடி அனுபவம். ஒரு விமானத்தில் வந்து கொண்டிருந்தேன். இஸ்லாமியர் ஒருவர் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தார். அவரது டிக்கெட்டை வாங்கிப் பார்த்தார், ஏர் ஹோஸ்டஸ் பெண்மணி. அவரை ஏற இறங்கப் பார்த்தார். சில வினாடி யோசித்தவர், டிக்கெட்டைக் கொடுத்துவிட்டு விமானி அறைக்குப் போனார். விமானியுடன் வெளியே வந்தார். அந்த முஸ்லிம் அமர்ந்திருந்த இருக்கைக்கு மேலே சிறிய பல்பு அணைந்து அணைந்து எரிந்து, "இதோ இவர்தான், கவனி' என்பது போல அவரை அடையாளம் காட்டியது. விமானி பார்த்துவிட்டுத் திரும்பினார். அதாவது, அவர் முஸ்லிம் என்பதால் தீவிரவாதியாக இருப்பாரோ என்ற சந்தேகம். மதம், பெயர் ஆகியவற்றை மட்டுமே வைத்து சந்தேகிப்பது சம்பந்தப்பட்டவர்கள் மனதை பாதித்து, கூனிக் குறுகச் செய்யாதா? இதுவே அவர்களைத் தவறான பாதைக்குக் கொண்டு செல்லாதா? இதையே கருப்பொருளாகக் கொண்டு ஒரு கதையைப் படமாக்கத் துணிந்தேன். 15 லட்ச ரூபாய் செலவில் சிறிய பட்ஜெட் படமாகத் தயாரித்திருக்கிறேன். படத்தின் பெயர் "பிறை'. 16 எம்.எம்.மில் எடுத்து 35 எம்.எம்.மில் புளோ அப் செய்கிறேன்.

குகநாதன்: அரசியலும் சினிமாவும் நம்மூரில் இரண்டறக் கலந்து விட்டன. அண்ணா, அரசியல்வாதி, கதாசிரியர். கருணாநிதியும் அப்படித்தான். எம்.ஜி.ஆர். நடிகர், அரசியல்வாதி. 67-ல் இவர்கள் தமிழக அரசியலையே புரட்டிப் போட்டார்கள். ஆட்சி மாற்றம் கண்டார்கள். இன்றுவரை இவர்களது அரசியல் தாக்கம்தான் தமிழகத்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

செல்வராஜ்: ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது எனது "உப்பு' படத்துக்கு சிறந்த படத்துக்கான விருது கொடுத்தார். பரிசுத் தொகையும் இருந்தது. அதனால் பெரிய நஷ்டம் ஏற்படாமல் தப்பித்தேன். கமர்ஷியல் படங்களில் பணிபுரிந்து சொந்தவீடு வாங்கி, வாழ்ந்தேன். இப்போது கலைப்படங்கள் தயாரித்து சொந்தவீட்டை விற்றுவிட்டு வாடகை வீட்டில்தான் வாழ்கிறேன். ஆனால், இப்போதுதான் நான் வாழ்கிறேன். அதாவது, சந்தோஷமாக வாழ்வை அனுபவித்து வாழ்கிறேன்...

இதற்கு முன்னால் பெப்ஸி தலைவராக வந்தவர்கள் எல்லாம் டெக்னிஷியன்களாக இருந்தவர்கள். நீங்கள்தான் ஒரு படைப்பாளியாக இருந்து யூனியன் தலைவராகி உள்ளீர்கள். அதனால் படைப்பாளிக்கு தொழிலாளர்கள் உதவிகரமாக இருக்கும்படி உங்களால் செய்ய முடியும். இது என் விருப்பம், வேட்கை.

குகநாதன்: நான் 150 படங்களுக்கு மேல் கதை வசனம் எழுதிவிட்டேன். தெலுங்கில் மட்டுமே 90 படங்களுக்கு மேல் கதை எழுதியுள்ளேன். அதில் பல வெள்ளிவிழா கண்டன. அப்புறம்தான் தயாரிப்பாளர் ஆனேன். "மதுரகீதம்' படத்தை 19 நாள்களுக்குள் எடுத்தேன். ரஜினிகாந்த் நடித்த "தனிக்காட்டு ராஜா' படத்தை 42 ரோலில் எடுத்தேன். என் போன்ற கதாசிரியர்களுக்கு அன்றைய பெரிய பெரிய பட நிறுவனங்கள் ஆதரவளித்தன. நான் ஏவி.எம்.மில்தான் வளர்ந்தேன். இப்போது திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் என்பதே மறைந்து போய்விட்டன. கதாசிரியர்கள் யாரை அணுகி யாரை நம்பிப் பிழைக்க முடியும்? ரொம்ப கஷ்டம்.

செல்வராஜ்: ஸ்ரீதர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், பாலசந்தர் போன்றவர்கள் கதாசிரியர்கள். அப்புறம்தான் டைரக்டரானார்கள். இப்போது கதாசிரியர் என்று தனியாக ஒரு பிரிவினரே படத்துறையில் இல்லை.

குகநாதன்: ஆமாம். அப்போது கதாசிரியர் என்கிற படைப்பாளி தனியாகவும், அதைப் படமாக்கித் தருகிற இயக்குநர் தனியாகவும் இருந்தார்கள். கதாசிரியர்கள் புதிது புதிதாக கதைகளை சிருஷ்டித்தார்கள். இப்போது நடிகருக்குத் தகுந்த மாதிரி கதை பண்ண வேண்டியிருப்பதால் யாரும் புதிதாக சிந்திக்க வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது.

செல்வராஜ்: பல புது இயக்குநர்கள் முதல் படத்தில் வெற்றி பெறுகிறார்கள். அடுத்த படத்தில் வீழ்ந்து விடுகிறார்கள். காரணம் முதல் படத்துக்காக ஒரு கதையைத் தயார் நிலையில் வைத்திருப்பார்கள். படங்களில் உதவியாளராகப் பணியாற்றும்போது, திரைப்பட அனுபவசாலிகள் பலரும் சொல்லி அவரும் சொல்லும் ஆலோசனைகளை ஏற்று மாற்றம் செய்து கதையைத் திருத்தி அமைத்துக் கொள்வார்கள். படம் வெற்றி பெறும். அடுத்த படத்தில் அவர்களுக்கு வெற்றி மமதை வந்துவிடும். தாங்கள் நினைப்பதை அப்படியே  தப்பும் தவறுமாகப் படமாக்கி விடுகிறார்கள். படமும் மக்களிடம் வரவேற்பு பெறுவதில்லை.

குகநாதன்: நீங்கள் சொல்லும் நிலை பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு. இப்போது புதியவர்கள் பலரும் கதை எழுதுவதில்லை. எழுத முற்படுவதும் இல்லை. வெளிநாட்டுப் படம் ஏழெட்டு பார்ப்பார்கள். ஒரு படத்தின் முதல் பகுதி, அடுத்த படத்தின் இரண்டாம் பகுதி, அப்புறம் இடைவேளை. பிறகு இன்னொரு படத்தின் மூன்றாம் பகுதி. மற்றொரு படத்தின் நான்காம் பகுதி. படம் முடிந்தது. இப்படித்தான் தமிழ்ப் படவுலகின் கதையுலகம் போய்க் கொண்டிருக்கிறது.

செல்வராஜ்: இன்றைய திரையுலகின் நிலைமையைப் பகிர்ந்து கொண்டது சந்தோஷமளிக்கிறது. நன்றி தலைவரே!

குகநாதன்: நான் உங்கள் நண்பர், தலைவரல்ல!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.