மற்ற ஊர்களில் எல்லாம் எப்படியோ தெரியாது. புதுச்சேரியில் மட்டும் மாலை ஐந்து மணிக்கெல்லாம் ஏதோ தனது கடமையை முடித்துவிட்டு தன் வீடு நோக்கி ஓடும் போலீஸ்காரரைப் போல சூரியன் அஸ்தமனமாகிக் கொண்டிருப்பான்.
மாலைப் பொழுது மிகவும் ரம்மியமாக இருக்கும் புதுச்சேரியில் மேற்கில் நின்று கொண்டு எந்தத் தெருவழியாக கிழக்கைப் பார்த்தாலும் அலைகடலைப் பார்க்கலாம். கடற்கரைக்குப் போனாலோ இந்த நீட்டுக்கும் அந்த நீட்டுக்கும் உலா போகலாம். பரிசுத்தமான உப்பங்காற்று நம்மை ஆரத்தழுவிச் செல்லும், இளம்பெண்ணின் மெல்லிய சேலையைப் போல.
பிரெஞ்சுக்காரனுக்கு ஆங்கிலேயன் விரோதி. கடல் வழியே வந்து தாக்கும் இந்த விரோதிக்கு சற்றே தடை போட, பிரெஞ்சுக்காரன் கட்டிய நீண்ட தொரு சுவர். இதில் உட்காரலாம். நடனமாடிக் கொண்டே செல்லலாம். காற்று தாலாட்டினால் கால் நீட்டி நிம்மதியாகப் படுத்துறங்கலாம். ஆஹா நினைத்தாலே இனிக்கிறது.
சுண்டல், முறுக்கு, எள்ளடை... கூடைக்குள் இருப்பவை தங்களைப் பறை சாற்றிக் கொண்டே வரும். தேங்கா, மாங்கா, இஞ்சி பட்டாணி சுண்டல் எல்லாம் சீக்கிரமே காலியாகிப்போக, வெறும் கூடை வீடு போய் சேர்ந்துவிடும். முறுக்கும் எள்ளடையும் கூவி கூவித் தங்களை விற்கும்.
ஓசியில் சுகமான காற்று வாங்கவும், நண்பர்களோடு நொறுக்குத்தீனி வாங்கித் தின்று அளவளாவவும் கடற்கரையிலே மாலை வேளையிலே கூட்டம் அலை மோதும்.
இப்படியான அந்தக் கடற்கரையை நோக்கி உச்சிகுடுமியோடு காணப்பட்ட இரண்டு மனிதர்கள் தங்கள் கைகளை நன்றாக வீசி வீசி காளத்தி ஈஸ்வரன் கோயில் வீதி வழியாக வேகமாகச் சென்று கொண்டிருந்தனர்.
மணக்குள விநாயகர் வீதி குறுக்கிட்டபோது இரண்டு பேரும் தங்களது வலப்பக்கம் திரும்பி தோப்புக்கரணம் போட்டு, நெற்றிப் பொட்டில் கொட்டிக் கொண்டு தங்கள் நடையைத் தொடர்ந்தனர்.
பிரான்சுவா மர்த்தேன் வீதி குறுக்கிட்டது. அதையும் வேகமாகக் கடந்தாகிவிட்டது. இன்னும் சற்று நேரத்தில் சேழ்ன் லூயி வீதி குறுக்கிடும். அதற்கப்புறம் ஒரே ஒரு வீதிதான். அந்த கொம்பாங்ஞி வீதியையும் கடந்து விட்டோமேயானால், நேரே கடற்கரைதான்.
சேழ்ன் லூயி வீதியும் வந்தது. வேகமாகச் சென்று கொண்டிருந்த அந்த இருவரில் ஒருவர் எதனாலோ ஈர்க்கப்பட்டு தனது இடது பக்கம் திரும்பினார்.
""நில்லும் ஓய். அங்கே பாரும் ஒரு பெரிய கும்பலை. என்ன நடக்குது ஓய் அங்கே?'' என்று அவர் வினவ, மற்றவரோ, ""அட, ஆமாம் ஓய் ராகவ செட்டி வீடு அது. அதன் வாசல்லே மூணு பேர் நின்னுண்டு பேசிண்டிருக்கா. அந்த மூணு பேர் எப்படிங்கானும் கும்பலாகும்'' என்று கேட்டார்.
""பின்னே கும்பல் இல்லாம என்னா ஓய்? பாரும் அங்கே யாரு நின்னுண்டு பேசிண்டிருக்கான்னு பாரும். அவன்தான் ஓய் பாரதி. அந்தக் கருப்பு கோட்டு, தலைப்பாகை. மீசையெ முறுக்கிண்டெ பேசிண்டிருக்கான் பாரும். அவன் ஒருத்தன் இருந்தாலே போதும். அவனே கும்பல்தான். கிறுக்கன். கிறுக்கன்''
""கிறுக்கனா.. பாரதி ஒரு கிறுக்கனா? என்ன ஓய் சொல்றீர்? பாரதி ஞானி, சித்தன், நல்லா பாட்டெழுதுவான் இப்படியெல்லாம்தான் நான் காதுபட கேட்டிருக்கேன். நீர் என்னடான்னா வேற மாதிரியில்ல சொல்றீர்?''
""நான் என்ன ஓய் சொல்லறது? புதுச்சேரியில உள்ளவா எல்லாம் அப்படித்தான் சொல்றா. சரி வாரும். அவாளிண்டையே என்னா ஏதுன்னு விசாரிக்கலாம். பேசிக்கொண்டே அவர்கள் இருவரும் சேழ்ன் லூயி தெருவில் நுழைந்து, அங்கே இருக்கும் ராகவ செட்டி வீடு நோக்கிச் சென்றனர். அத்தெருவில் 13-ஆம் எண் கொண்ட வீடு அது. அந்த வீட்டு வாசலில் பாரதி தன் மீசையை முறுக்கியபடியே மற்ற இருவரிடம் ஏதோ சம்பாஷணையில் இருக்க, பாரதியைக் கிறுக்கன் என்று நினைத்துக் கொண்டிருந்தவர் மட்டும் பாரதியிடம் போய் நின்று என்ன ஓய் பாரதி? என்ன இங்கே கும்பல்? செட்டியார்வாள் ஆத்துல யாராவது மண்டெய போட்டுட்டாளா?'' என்று கேட்டார்.
பாரதி அவரை விழுங்குவது போல பார்த்தார். ""கடற்கரைக்குப் போய் சுண்டல் வாங்கித் தின்று நேரத்தைப் போக்கும் வீணர் கும்பலில் நீரும் ஒருவர்தானே. போகுமய்யா போகும். உமக்குக் கிடைக்கவேண்டிய காற்றை வேறெவனாவது வாங்கிக் கொண்டு போய்விடப் போகிறான். சீக்கிரம் ஓடும்'' என்று கர்ஜித்தார்.
""கோபம் வேண்டாம் பாரதி. ஏன் நீங்கள் எல்லாம் இங்கு நிற்கிறீர்கள் என்றுதானே கேட்டேன். அதுக்கு...''
""அதுக்கு.. இதுக்கு... எதுக்கு... உமக்குச் சொன்னால் புரியவா போகிறது? செட்டியார் வீட்டை மகான் ஸ்ரீ அரவிந்தர் வாடகைக்கு எடுத்து வாசம் செய்கிறார். இப்பொழுது அரவிந்தர் தியானத்தில் இருக்கிறார். அதன் பின் நாங்கள் அவரோடு சம்பாஷணையில் ஈடுபடுவோம். கலை, இலக்கியம், ஆன்மிகம், அரசியல் என்று பலவற்றைப் பற்றி பேசுவோம். பின்னர் கலைந்து செல்வோம். அரவிந்தர் தியானம் முடிப்பதற்காகக் காத்திருக்கிறோம். போதுமா இன்னும் ஏதாவது தெரியவேண்டுமா'' என்று பாரதி சற்றே கறாராகச் சொன்னார்.
கேள்வி கேட்டவரோ ""போதும் பாரதி இதுவே தலையைச் சுற்றுகிறது. ஒன்றும் புரியவில்லை. நீங்கள் எதைப்பற்றியாவது பேசி பொழுதைப் போக்குங்கள். பைத்தியங்கள் பைத்தியங்களோடுதானே சேரும்'' என்று சொல்லியபடியே அங்கிருந்து நகர்ந்தார்.
தகரக் கூரையின் மீது கூழாங்கற்களைக் கொட்டுவது போல பாரதி சிரித்தார். ""இதையெல்லாம் புரிந்து கொள்ள தலையில் கொஞ்சமாவது மூளை வேண்டும். நீர் அதற்கு எங்கே போவீர்? எங்கள் அரவிந்தர்கூட தனக்கு மூன்று பைத்தியங்கள் பிடித்திருப்பதாக தன் மனைவி மிருணாளினி தேவிக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். தெரிந்தோ தெரியாமலோ அவரையும் எங்களையும் பைத்தியங்கள் என்று சொன்னீர். நல்லது. பைத்தியங்கள் என்ன செய்யும் தெரியுமல்லவா? நாங்கள் அதை செய்வதற்குள் நீங்களாகவே ஓடிவிடுங்கள்'' என்று சொல்லி பல்லை நறநறவென கடித்தார் பாரதி.
அடுத்த வினாடியே அவர்கள் இருவரும் இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போவதையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பாரதியும் அவரது நண்பர்களும், பாரதி என்று யாரோ அழைக்கும் குரல் கேட்டு வீட்டிற்குள் பார்த்தனர்.
காற்றடித்தால் காணாமல் போகக்கூடிய உருவம் ஒன்று வாசல் நோக்கி வந்து கொண்டிருந்தது. வெள்ளை வேட்டி, மேலே ஒரு துண்டு. நாவிதர் அவர் தலையைக் கவனித்து ஓர் ஆண்டாவது உருண்டோடி இருக்க வேண்டும்.
அதோ நொளினி வருகிறார். அரவிந்தர் தியானம்
முடித்துவிட்டார். நம்மை உள்ளே அழைக்கிறார் என்று அர்த்தம். வாருங்கள். உள்ளே போகலாம். மனித உருவத்தில் இங்கே வேதபுரியில் எழுந்தருளியிருக்கும் சரஸ்வதி தேவியிடம் சென்று அருள் பெறலாம்.
பாரதி தன் இரு கைகளையும் பின்பக்கமாக நீட்டி விரல்களைக் கோர்த்துக் கொண்டு, சிம்ம நடைபோட்டு வீட்டினுள் செல்ல, வரகனேரி வேங்கடசுப்ரமணிய ஐயரும், மண்டயம் சீனிவாசாச்சாரியாரும் அவரது துரித நடைக்கு ஈடுகொடுக்க முடியாமல் சற்று ஓட்டமும் நடையுமாகவே அவர்பின் விரைந்தனர்.
""என்ன கோ.. சப்பாத்துக்களை கையில் வைத்துக் கொண்டு என்ன செய்து கொண்டிருக்கிறீர்? நீர் எது செய்தாலும் எனக்கு வித்தியாசமாகத்தான் தெரிகிறது'' என்று குரல் கொடுத்துக் கொண்டே வீட்டின் உள்கூடத்தில் நுழைந்தார் பாரதி.
""வாரும் பா.. வாருங்கள் நண்பர்களே அமருங்கள்'' என்று அரவிந்த கோ தரையைக் காட்ட, அனைவரும் உட்கார்ந்தனர். நொளினியோடு இன்னும் சில சிஷ்ய கோடிகளும் அங்கே உட்கார்ந்திருந்தனர்.
அரவிந்தர் தன் குறுந்தாடியைத் தடவி விட்டுக் கொண்டே, ""சில நாட்களுக்கு முன் என் தம்பி பரீன் கொல்கத்தாவிலிருந்து ஒரு ஜோடி சப்பாத்துக்களை அனுப்பியிருந்தான். அதன் உள் விளிம்புகளில் தேங்காய் எண்ணை தடவிக் கொண்டிருந்தேன். கால்கள் கடிபடாமல் இருக்கத்தான்'' என்று சொன்னார்.
பாரதி பெருமூச்சுவிட்டார். ""தம்பியுடையான் படைக்கஞ்சான், என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள்? உமக்கு தம்பி இருக்கிறான். கேட்ட உடனே சம்பாத்து வாங்கி அனுப்ப. எனக்கு எவன் இருக்கிறான்?'' என்று பாரதி சொல்லி முடிப்பதற்குள் அரவிந்தர் தன் கண்களால் சிரித்தார்.
அன்றைய சம்பாஷணை சப்பாத்துக்களைப் பற்றியே சுற்றிச் சுற்றிச் சென்றது. ""ஆதாம் ஏவாள் எதை சப்பாத்தாக உபயோகப்படுத்தி இருப்பார்கள் என்று ஆரம்பித்து, ஜப்பானில் செருப்பு தயாரிக்கும் நிறுவனங்கள் வேலை நிறுத்தம் செய்தால் என்ன செய்கிறார்கள்'' என்பது வரை பேசினர்.
எல்லோரையும் சிரிக்க வைத்து மகிழ்வதிலே அக்கறை கொண்ட அரவிந்தர் அன்றைய மாலை நேர சம்பாஷணையைச் சிரிக்கத் தெரியாதவன் உப்பில்லாப் பண்டம் போல, என்று சொல்லி முடித்தார்.
கலகலவென சிரித்து பேசிக் கொண்டிருந்ததாலே நேரம் போனதே தெரியவில்லை.
கலைந்து செல்லும் நேரமும் வந்தது. வீட்டை விட்டு வீதிக்கு வந்து தங்கள் வீடு நோக்கிப் போய்க்கொண்டிருந்தவர்கள் ஞானப்பழம் உண்ட மகிழ்வோடு சென்றனர்.
""அரவிந்தரின் பலமே அவரது ஆழ்ந்த அறிவும், அற்புதமான சிந்தனைகளும்தான். எவ்வளவு அழகாக, நகைச்சுவையோடு சப்பாத்தின் தோற்றத்தையும் வளர்ச்சியைப் பற்றிச் சொன்னார். இவர் ஒரு விந்தை மனிதர்தான். நீங்கள் சொன்னது போலவே இவர் சாட்சாத் சரஸ்வதி தேவியேதான்'' என்றார் வரகனேரியார்.
""உண்மைதான் வரம் கொடுப்பாள் தேவி'' என்று சொல்லிக்கொண்டு, தன் கால்களைப் பார்த்து ஒரு புன்சிரிப்பு சிரித்தார் பாரதி.
அரவிந்தரோ தன் எழுதும் மேசை முன் அமர்ந்து ஒரு தாளை எடுத்து எழுத ஆரம்பித்தார்:
அன்புள்ள பரீன்,
விரைவில் ஒரு ஜோடி சப்பாத்து அனுப்பி வை. நீ சில நாட்களுக்கு முன் அனுப்பியதை என் நண்பன் பாரதி போட்டுக் கொண்டு போய்விட்டான். அவன் கால் படாத இடமே புதுச்சேரியில் இல்லை என்று சொல்லலாம். என்னைவிட அவனுக்குத்தான் சப்பாத்து மிகவும் அவசியம். எனக்கு நீ இருக்கிறாய். கேட்டால் வாங்கியனுப்ப. பாவம் அவனுக்கு யார் இருக்கிறார்கள்?
ஸ்ரீ அரவிந்த கோ என்று கையெழுத்து இட்டுவிட்டு, மீண்டும் அவர் கண்களால் சிரித்தார்.