போர்! எரிபொருள் தட்டுப்பாடு! சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறுமா?
வளைகுடா போர் காரணமாக ஏற்பட்டுள்ள சூழ்நிலையால் 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்கள் தள்ளிப் போகுமா? என்பது பற்றி...


தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுவை ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்குக் குறிப்பிட்ட காலத்தில் தேர்தல்களை நடத்த முடியுமா? நடைபெறுமா?
அமெரிக்கா – இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக உலகின் பெரும்பாலான நாடுகள் பல்வேறு பொருளாதாரச் சிக்கலில் தவிக்கின்றன.
வளைகுடா நாடுகளில் எண்ணெய்த் துரப்பணப் பணிகள் முடங்கிப் போய்விட்டன. குவைத், இராக், சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்றவை எண்ணெய் உற்பத்தியைக் குறைத்துவிட்டன. கச்சா எண்ணெய் விலையோ கண்மண் தெரியாமல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
வளைகுடா நாடுகளிலிருந்து பிற நாடுகளுக்கு எரிபொருள் மற்றும் எரிவாயு கொண்டுசெல்லும் கடல்வழியான ஹோர்முஸ் நீரிணையின் பெரும்பகுதி ஈரானின் கட்டுப்பாட்டில் இருக்கிற நிலையில் ஏற்றுமதியும் இறக்குமதியும் தடைப்பட்டுவிட்டது.
இந்தப் போரின் பாதிப்புகளை உலகின் பெரும்பாலான நாடுகள் உணரத் தொடங்கிவிட்டன. எரிபொருளுக்கு ஹோர்முஸ் நீரிணை வழியை நம்பியுள்ள ஆசிய நாடுகள் பெரும் சிக்கலைச் சந்திக்கத் தொடங்கியுள்ளன.
அரசு ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை பார்க்கச் சொல்லிவிட்டது தாய்லாந்து. வாரத்துக்கு நான்கு நாள் வேலை என்றாக்கிவிட்டது பிலிப்பின்ஸ். தனி வாகனப் பயன்பாட்டை நிறுத்தி, பொதுப் போக்குவரத்துக்கு அறிவுறுத்தியிருக்கிறது வியத்நாம். இலங்கையில் எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்டுவிட்டன. தாய்வானிலும் அதே. பாகிஸ்தானில் இரு வாரங்களுக்குப் பள்ளிகள் விடுமுறை. சிக்கன நடவடிக்கைகள்.
கண்ணுக்கு எட்டிய வரையில் போர் நிறுத்தம் தெரியாத நிலையில், ஒவ்வொரு நாடாக எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டன.
இந்தியாவில்... நாடு முழுவதும் அத்தியாவசிய சேவைகள் தவிர்த்த வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் நிறுத்தப்பட்டுவிட்டது. பெருநகரங்களில் உணவகங்கள் மூடப்படுகின்றன. எரிவாயு தட்டுப்பாடு காரணமாக வாகனங்களும் சிக்கலில் மாட்டியிருக்கின்றன. வீட்டு உபயோக சிலிண்டர்கள் விநியோகம் பராமரிக்கப்படும் என்று அரசுத் தரப்பில் சொல்லப்பட்டாலும் பல இடங்களில் சிலிண்டர் வேண்டிப் பதிவுகூட செய்ய முடியவில்லை எனப் புகார்கள். சமையல் எரிவாயு இல்லாமல் வீட்டுச் சமையலை நினைத்தும் பார்க்க முடியாது.
நிலைமை இதே வேகத்தில் தொடர்ந்தால் உணவகங்கள், தங்குமிடங்கள் அடுத்தடுத்து மூடப்படும். பள்ளி, கல்லூரி விடுதிகள், அலுவலக கேன்டீன்கள் உள்பட அனைத்தும் மூடப்பட நேரிடும்.
அடுத்து, பெட்ரோல், டீசலுக்கும் பற்றாக்குறை / தட்டுப்பாடு தொடங்கினால், இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களும் ஓய்வெடுக்க வேண்டியிருக்கும். மக்கள் அனைவரும் பொதுப் போக்குவரத்தை மட்டுமே நம்பியிருக்க வேண்டியிருக்கும். ஒருகட்டத்தில் பொதுப் போக்குவரத்தும் முடங்கும். சொல்லப் போனால், ஒரு மினி கரோனா காலமாக மாறிவிடக் கூடும்.
இப்படியான சூழலில்தான்...,
தமிழ்நாடு சட்டப்பேரவையின் ஆயுள்காலம் வரும் மே மாதம் 10 ஆம் தேதியுடன் முடிவு பெறுகிறது. மேற்கு வங்க பேரவையின் பதவிக் காலம் மே 7 ஆம் தேதியுடனும் அஸ்ஸாம் பேரவைக் காலம் மே 20 ஆம் தேதியுடனும் கேரளத்தின் பேரவைக் காலம் மே 23 ஆம் தேதியுடனும் புதுவை பேரவையின் ஆயுள் காலம் ஜூன் 20 ஆம் தேதியுடனும் முடிவுக்கு வருகிறது.
இந்த மாநிலங்களில் குறிப்பிட்ட தேதிகளுக்குள்ளாக சட்டப்பேரவைகளுக்குத் தேர்தல் நடத்தப்பட்டுப் புதிய அமைச்சரவைகள் பொறுப்பேற்க வேண்டும். இதுதொடர்பான, தேர்தல் அறிவிக்கைகள் விரைவில் வெளியிடப்பட்டு, தேர்தல் செயற்பாடுகள் தொடங்கும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில்தான் வளைகுடா போரின் பக்க விளைவாக எரிபொருள் தட்டுப்பாட்டுப் பூதம் புறப்பட்டிருக்கிறது.
இந்த மெகா பிரச்சினை முடிவுக்கு வராத வரையில் – அரசுகளும் மக்களும் மிக மோசமான வாழ்க்கைச் சூழலை எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடியில் இருக்கும்போது, இந்த மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல்களை அறிவிப்பதும் சுமுகமாக நடத்தி முடிப்பதும் அவ்வளவு எளிதான ஒன்றாக இருக்க வாய்ப்பில்லை.
இரு, நான்கு சக்கர வாகனங்கள் ஓடவில்லை, உணவகங்கள், விடுதிகள் எல்லாம் மூடப்பட்டு விட்டன; பொதுப் போக்குவரத்தே திணறத் தொடங்கியிருக்கிறது... ...என்ற சூழலில் தேர்தல்களை நடத்துவது மட்டும் எவ்வாறு சாத்தியம்?
கடந்த இரு நாள்களாக எரிபொருள் - எரிவாயு தட்டுப்பாட்டுப் பிரச்சினையை நாடு நேரடியாக உணரத் தொடங்கிவிட்ட நிலையில், அனேகமாக தேர்தல் ஆணையமும் இதுபற்றிச் சிந்திக்கத் தொடங்கிவிட்டிருக்கக் கூடும்.
உண்மையாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. என்றாலும் கொஞ்சம் அரசியலாக யோசித்துப் பார்த்தால் தமிழ்நாட்டில் ஆளும் திமுக கூட்டணியில்தான் பரபரப்பாகக் கூட்டணியை இறுதி செய்து தொகுதிப் பங்கீடு பற்றியெல்லாம் பேசி முடிவு செய்துகொண்டிருக்கிறார்கள்.
எதிர்த்துப் போட்டியிடுகிற - மத்தியில் ஆளும் - தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பொருத்தவரை மிகவும் ‘கூலாக’ ரொம்பவும் அலட்டிக் கொள்ளாமல் இருப்பதைப் போலவே தோன்றுகிறது. இன்னமும் தொகுதிப் பங்கீடு பற்றியெல்லாம் பேசியதாகத் தெரியவில்லை. எனினும், பிரதமர் நரேந்திர மோடி மட்டும் மூன்றாவது முறையாகத் தேர்தல் பிரசாரத்துக்காகத் தமிழ்நாட்டுக்கு இன்று வந்து சென்றிருக்கிறார்.
இந்தச் சூழலையே காரணமாகக் கொண்டு, இந்த மாநிலங்களின் சட்டப்பேரவைகளுடைய ஆயுள் காலம் முடிந்தவுடன் – இடைக்கால அரசுகளாக இவர்களையே, தேர்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்கும் வரை, நீடிக்கச் செய்யலாம். அல்லது இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி, இந்த மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்திவிட்டு, நிலைமை சுமுகமானதும் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்திப் புதிய அரசை மக்கள் தேர்ந்தெடுக்க வகை செய்யலாம்! அல்லது என்ன வந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம் என்று தேர்தலையும் அறிவிக்கலாம்!
என்ன செய்யக் காத்திருக்கிறதோ தேர்தல் ஆணையம்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...