அதிரடியாக உயர்ந்த சிலிண்டர் விலை: வீடு, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை எவ்வளவு..?
வீட்டு உபயோக மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு குறித்து...

அதிரடியாக உயர்ந்த சிலிண்டர் விலை
கோப்புப் படம்

அதிரடியாக உயர்ந்த சிலிண்டர் விலை
கோப்புப் படம்
நாடு முழுவதும் வீட்டு உபயோக மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அதிரடியாக சனிக்கிழமை(மார்ச் 7) உயர்த்தியுள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் அந்நியச் செலாவணி மதிப்பைக் கணக்கில்கொண்டு, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் எரிபொருள் விலையை மாற்றியமைத்து வருகின்றன.
அந்தவகையில் மார்ச் மாத முதல் வாரத்தின் இறுதிநாளான இன்று (மார்ச் 7) வீட்டு உபயோக பயன்பாட்டுக்கான 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டா் விலை மற்றும் வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.
வணிக சிலிண்டர் விலை ரூ.115 உயர்வு
அதன்படி, தமிழகத்தைப் பொருத்தவரை சென்னையில் வணிக சிலிண்டரின் விலை ரூ.115 உயர்ந்து, புதிய விலையாக ரூ.2,043.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஜூன் மாதத்துக்குப் பின், வணிக சிலிண்டர் விலை தற்போது மீண்டும் புதிய உச்சம் அடைந்துள்ளது. வணிக நிறுவனங்கள் பயன்படுத்தும் வணிக சிலிண்டர்களுக்கும் இந்த விலை உயர்வு பொருந்தும்.
தில்லியில், 19 கிலோ வணிக சிலிண்டரின் விலை ரூ.1768.50-இல் இருந்து ரூ.1,883-க்கும், மும்பையில் ரூ.1720.50-இல் இருந்து ரூ.1,835-க்கும், கொல்கத்தாவில் ரூ.1875.50-இல் இருந்து ரூ.1,990-க்கும் விற்பனையாகிறது.
முன்னதாக, கடந்த ஒன்றாம் தேதி ரூ.30 விலை உயர்த்தப்பட்ட சூழலில், தற்போதை விலை ஏற்றத்துடன் சேர்த்து வணிக சிலிண்டரின் விலை ஒரே வாரத்தில் ரூ.145 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.60 உயர்வு
மக்கள் பயன்படுத்தும் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டரின் விலை கடந்த ஏப்ரல் முதல் எந்த மாற்றமுமின்றி விற்பனையாகி வந்த நிலையில், தற்போது ரூ.60 உயர்த்து, புதிய விலையாக ரூ.853 இல் இருந்து ரூ.928.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
தில்லியில் ரூ.853 - இல் இருந்து ரூ.913-க்கும், மும்பையில் ரூ.852.50 - இல் இருந்து ரூ.912.50-க்கும் விற்பனையாகிறது.
எரிவாயு விநியோகத்தில் பாதிப்பும் இல்லை
நாட்டில் போதுமான எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை. அனைத்து பகுதிகளிலும் போதுமான எரிவாயு உருளைகள் இருப்பில் உள்ளன. வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு எரிவாயு உருளைகளை தடையின்றி விநியோகம் செய்ய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என அரசாங்கம் உறுதியளித்த போதிலும், இந்த விலை உயர்வு ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் சிறு வணிக நிறுவனங்கள் போன்ற வணிகங்களை பெரிதும் பாதிக்கும் என வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன..
ஏப்ரல் 2025 முதல் முதல் திருத்தம்
முன்னதாக, வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளையின் விலை ஏப்ரல் 2025 முதல் எந்த மாற்றமுமின்றி விற்பனையாகி வந்தது. அப்போது தில்லியில் மானியம் இல்லாத சிலிண்டர் விலை ரூ.853-இல் இருந்து ரூ.913-க்கு உயர்ந்துள்ளது.
எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்யும் மத்திய அரசு
இந்தியாவின் எரிசக்தி விநியோகம் மற்றும் எரிபொருள் கிடைக்கும் தன்மை குறித்த விவாதங்களுக்கு மத்தியில் இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் எரிசக்தி பற்றாக்குறை இல்லை என்றும், விநியோக இடையூறுகள் குறித்து நுகர்வோர் கவலைப்படத் தேவையில்லை என்றும் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி முன்னதாக உறுதியளித்தார்.
"மக்களுக்கு மலிவு மற்றும் நிலையான எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்வதே அரசின் நோக்கம், நாங்கள் அதை சரியாக செய்து வருகிறோம். இந்தியாவில் எரிசக்தி பற்றாக்குறை இல்லை, மேலும் எரிபொருள் நுகர்வோரின் கவலைக்கு எந்த காரணமும் இல்லை" என்று அமைச்சர் எக்ஸ் இல் ஒரு பதிவில் கூறியிருந்தார்.
எரிபொருள் பற்றாக்குறை வதந்தி
இதற்கிடையே, நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் பற்றாக்குறை இருப்பதாக சமூக ஊடகங்களில் பரவும் செய்திகளை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிராகரித்ததுடன், அவை ஆதாரமற்றவை என்று கூறியுள்ளது.
"நாட்டில் போதுமான எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு இருப்பு உள்ளது, மேலும் விநியோகம் மற்றும் விநியோக வலையமைப்புகள் வழக்கம் போல் செயல்படுகின்றன. விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை. நாடு முழுவதும் தடையற்ற எரிபொருள் விநியோகத்தை பராமரிக்க இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதிபூண்டுள்ளது. மக்கள் பீதி அடையவோ அல்லது எரிபொருள் நிலையங்களில் கூட்டம் கூட்டமாகவோ செல்லவோ வேண்டாம் என்றும், துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ ஆதாரங்களை மட்டுமே நம்புமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
உலகளாவிய நிலைமை கண்காணிப்பு
மத்திய கிழக்கில் போா் விரிவடைந்துவரும் நிலையில், எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் சமையல் எரிவாயு (திரவ பெட்ரோலிய எரிவாயு - எல்பிஜி) உற்பத்தியை அதிகரிக்குமாறு அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தின் கீழ் அவசரகால உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
ப்ரோபேன் மற்றும் பூடேன் ரசாயனங்களைப் பயன்படுத்தி எல்பிஜி உற்பத்தியை அதிகப்படுத்த அனைத்து பொது மற்றும் தனியாா் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் அறிவுறுத்தப்படுள்ளன.
முன்னதாக, ஹோா்முஸ் ஜலசந்தி வழியாக ஏற்படும் இடையூறுகள் குறித்த கவலைகள் இருந்தபோதிலும், கச்சா எண்ணெய், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எரிபொருள் விநியோகம் தொடர்பாக இந்தியா "மிகவும் வசதியான நிலையில்" இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
ஹோா்முஸ் நீரிணை கடல் வழியாக பாதிக்கப்படக்கூடிய அளவை விட, பன்முகப்படுத்தப்பட்ட மூலங்களிலிருந்து அதிக எரிசக்தி விநியோகங்களை நாடு தற்போது அணுகுகிறது. இந்தியாவின் தற்போதைய கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்களின் இருப்பும் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக உள்ளது.
மேலும், உள்நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில், உலகளாவிய நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வரும் அரசு, ஹோா்முஸ் நீரிணை கடல் வழித்தடத்துடன் தொடர்புடைய எந்தவொரு சாத்தியமான விநியோக தடைகளையும் ஈடுசெய்ய மாற்று வழிகளில் இருந்து விநியோகத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக இந்தியா அதன் கச்சா இறக்குமதி அளவை கணிசமாக பன்முகப்படுத்தியுள்ளதாக தெரிவித்தனர்.
ரஷியாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பு
2022 முதல், இந்தியா ரஷியாவிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது. 2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யா 0.2 சதவீதத்தை மட்டுமே கொண்டிருந்தாலும், அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்தப் பங்கு கணிசமாக உயர்ந்துள்ளது. "பிப்ரவரியில், ரஷியாவிலிருந்து அதன் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் சுமார் 20 சதவீதத்தை இந்தியா இறக்குமதி செய்தது, இது ஒரு நாளைக்கு சுமார் 1.04 மில்லியன் பீப்பாய்கள்" என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.
எரிவாயு கிடைப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள்
நாடு முழுவதும் போதுமான இருப்பை உறுதி செய்வதற்காக உற்பத்தியை அதிகரிக்க அனைத்து எரிவாயு சுத்திகரிப்பு நிலையங்களுக்கும் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. எரிவாயு இருப்பு தொடர்பாக இந்தியா தற்போது ஒரு தெளிவான நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜனவரி முதல் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு எரிவாயு வரத் தொடங்கியுள்ளது. 2025 நவம்பரில் இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 2026 ஒப்பந்த ஆண்டிற்கு அமெரிக்க வளைகுடா கடற்கரையிலிருந்து சுமார் 2.2 மெட்ரிக் டன் எரிவாயு இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
2024-25-ஆம் ஆண்டில் இந்தியாவின் எரிவாயு நுகா்வு 3.13 கோடி டன் என்ற அளவில் இருந்தது. இதில் 1.28 கோடி டன் எரிவாயு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், எஞ்சிய தேவை இறக்குமதி மூலம் பூா்த்தி செய்யப்பட்டது. இந்த இறக்குமதியில் 85 முதல் 90 சதவீதம் சவூதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளை இந்தியா சாா்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...