/

தமிழக வரலாற்றில் முதல்முறை.. நீண்ட காலம் வெற்றிகரமாகத் தொடரும் கூட்டணி! - முதல்வர் ஸ்டாலின்

"தமிழக வரலாற்றில் நீண்டகாலம் ஒரு கூட்டணி தொடர்வது முதல்முறை" - மு. க. ஸ்டாலின் பெருமிதம்!

News image
முதல்வர் ஸ்டாலின் - @arivalayam
Updated On :27 பிப்ரவரி 2026, 3:49 pm

இணையதளச் செய்திப் பிரிவு

கோயம்புத்தூர் : "தமிழக வரலாற்றில் நீண்டகாலம் ஒரு கூட்டணி வெற்றிகரமாக தொடர்வது இதுதான் முதல்முறை" என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் பெருமிதத்துடன் பேசினார்.

மாவட்டம், நீலாம்பூரில் வெள்ளிக்கிழமை (பிப். 27) நடைபெற்ற மேற்கு மண்டல திமுக பாக முகவா்கள் மாநாட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று மாலை பங்கேற்றாா். மேற்கு மண்டலத்துக்கு உள்பட்ட 39 சட்டப் பேரவைத் தொகுதிகளில் இருந்து சுமாா் 1 லட்சத்து 50 ஆயிரம் முகவா்கள் பங்கேற்ற இந்தப் பிரம்மாண்ட மாநாட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது :

“பொதுவாக தேர்தல் கூட்டணியின் ஆயுள்காலம் மிகக் குறைவு. ஆனால், திமுக தலைமையிலான நம்ம கூட்டணி அதை உடைத்திருக்க வேண்டும். பாஸிச பாஜவை வீழ்த்த வேண்டுமென்ற ஜனநாயக நோக்கத்துடன் 2019 தேர்தலுக்கு முன்பு தொடங்கப்பட்ட நம்முடைய கூட்டணி, தொடர்ந்து நடைபெற்ற 2021 சட்டப்பேரவைத் தேர்தலில், நகராட்சி, உள்ளாட்சித் தேர்தலில், 2024-இல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், இப்போது, 2026 சட்டப்பேரவைத் தேர்தல் வரையிலும் கொள்கை உறுதியுடன் தொடருகிறது.

தமிழ்நாட்டின் தேர்தல் வரலாற்றில் இவ்வளவு நீண்ட காலம் ஒற்றுமையுடன் ஒரு கூட்டணி தொடருவது இதுதான் முதல்முறை. வளர்ச்சியிலும், சாதனைத் திட்டங்களில் மட்டுமில்லை, கூட்டணியிலும் நாம் வரலாறு படைத்திருக்கிறோம்.

‘வெல்வோம் ஒன்றாக!’ என்று ஒவ்வொரு கூட்டத்திலும் ஏன் சொல்கிறேன் என்றால், கொள்கையிலும் வெல்வோம் ஒன்றாக என்ற பொருளையும் சேர்த்துதான் அப்படிச் சொல்கிறேன்.

தேர்தலுக்காகத்தான் நாங்கள் இந்தக் கூட்டணி அமைத்திருக்கிறோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். அந்தக் கூட்டணி சர்க்கஸ் கூடாரம் போல, தேர்தல் முடிந்ததும் ஆளுக்கொரு பக்கமாகப் பிரிந்து தங்கள் நாடகத்தை தொடருவார்கள். அப்படிப்பட்ட, என்டிஏ சர்க்கஸின் ரிங் மாஸ்டர்தான் பாஜக. அவர்கள் சொன்னபடியே தமிழ்நாட்டு மக்கள் முன்னால் வித்தைக் காட்டுபவர்தான் பழனிசாமி. கொள்கையில்லாத கூட்டணி; சந்தர்ப்பவாத கூட்டணி. அதை அவரே ஒப்புதல் வாக்குமூலமாக மக்களிடம் கொடுத்திருக்கிறார்.

வழக்குகளிலிருந்து தன்னையும் சொந்தக்காரர்களையும் காப்பாற்றிக்கொள்ள பழனிசாமி சுயநலத்துடன் அமைத்திருக்கிற கூட்டணி. எப்போதெல்லாம் தனக்குப் பிரச்னை வருகிறதோ அப்போதெல்லாம் மாறிமாறி தில்லிக்குப் போய் சரணாகதி அடைவது அவருக்குப் பழக்கமான ஒன்றுதான்.

ஆனால் நாம் அப்படியா? ஒரு கொள்கையில் உறுதியாக நின்று போராடுகிறோம்.

தில்லி முதல்வராக இருந்த அரவிந்த் கேஜரிவால் மீது பொய் வழக்கு போட்டு சிறையிலடைத்தார்கள். நேர்மையாக நேர்வழியில் தேர்தலை எதிர்கொள்ள துணிச்சல் இல்லாமல் கோழைத்தனமாக நடந்துகொண்டார்கள். இன்று, அந்த வழக்கில் எந்த முகாந்திரமுமில்லை என்று நீதிமன்றம் சொல்லிவிட்டது. ஜேஜரிவாலும் அவரது கட்சியைச் சேர்ந்த மணீஸும் சிறையில் கழித்த நாள்களை பாஜகவால் திரும்பத்தர முடியுமா? மீண்டும் தில்லியில் தேர்தல் நடத்தமுடியுமா?

இதே ஃபார்முலாவைத்தான் தமிழ்நாட்டிலும் செய்ய நினைக்கிறார்கள். தங்களுடைய ஏவல் அமைப்புகளை வைத்து நம்மை மிரட்டப் பார்க்கிறார்கள். உங்கள் அரட்டல் மிரட்டலுக்கு பயப்பட, நாங்கள் அடிமையும் இல்லை; கோழையுமில்லை. தைரியமாக உங்களை எதிர்கொள்வோம்.

அதனால்தான் மக்கள் மட்டுமில்லாமல், பல கட்சிகளும் நம் மீது நம்பிக்கை வைத்து நம்ம கூட்டணியில் இணைகிறார்கள். தேர்தலுக்குத் தேர்தல், கூட்டணியில் இருக்கிற கட்சிகள் குறைவதைத்தான் பார்க்கிறோம். அந்த வழக்கத்திற்கு மாறாக, நம்ம கூட்டணி பலம் மேலும் மேலும் அதிகரித்துவிட்டே போகிறது” என்றார்.

summary

"This is the first time in the history of Tamil Nadu that DMK election alliance has successfully continued for such a long time" - Chief Minister M.K. Stalin

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.